

ஓர் எளிமையான, அழகான, ஆத்மார்த்தமான காதல் கதையைத் திரையில் பார்க்க விரும்புகிறீர்களா? ‘லவ் லைக் தி ஃபாலிங் பெட்டல்ஸ்’ (Love Like the Falling Petals) என்ற இந்தப் படம் உங்களுக்கானதுதான். நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணக் கிடைக்கும் இந்தத் திரைப்படம் 2022-ல் வெளியாகி ஜப்பானிய ரசிகர்களை மட்டுமல்லாமல் திரை ஆர்வலர்கள் அனைவரின் கவனத்தையும் பெற்றது.
லைலா - மஜ்னு, ரோமியோ - ஜூலயட், அம்பிகாபதி - அமராவதி, தேவதாஸ் - பார்வதி உள்ளிட்ட காவியக் காதல் கதைகள் பலவற்றில் இழைந்தோடும் சோக ரசம்தான் அவை காலம் தாண்டி நம் மனதில் நீங்கா இடம்பிடிக்கக் காரணமாகி உள்ளது. அவ்வகையில் இந்தத் திரைப்படம் காதலின் துயரத்தைப் பேசுகிறது.
கெய்சுகே உயாமாவின் நாவலைத் தழுவி இயக்குநர் யோஷிஹிரோ ஃபுககாவா இப்படத்தை இயக்கியுள்ளார். டோமோகோ யோஷிடா திரைக்கதை எழுதியுள்ளார். இந்த மென்மையான, உணர்ச்சிகரமான காதல் கதையில் கதாபாத்திரங்கள் சிலர்தான். காற்றில் உதிர்ந்து விழும் பூவிதழ்களைப் போன்றதுதான் காதல். அழகிய மலர்களின் இதழ்களை விட மனித இதயங்கள் மிகவும் மெல்லியதாக இருக்கிறது என்பதுதான் இக்கதையின் அடிநாதம்.
புகைப்படங்கள் நம் வாழ்க்கையில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளன. புகைப்படங்களை விரும்பாதவர்கள் யாரேனும் இருக்க முடியுமா? உலகில் வெவ்வேறு பகுதியில் உறைந்துள்ள இயற்கையின் எழில்களை நேரில் காண முடியாதவர்கள் புகைப்படங்கள் மூலமே கண்டு ரசிக்கின்றனர். நம் குழந்தைப் பருவத்தில் எடுத்துக் கொண்ட ஒரு ஃபோட்டோ அப்படியே அந்தக் காலத்துக்குள் நம்மை அழைத்துச் சென்றுவிடும். அதைச் சார்ந்த நினைவுகள் இனிப்பாய் திகட்டும். அதேபோல், நம் குழந்தைகள் இளமையாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது. வாழ்வின் தருணங்களை கலைநேர்த்தியுடன் பதிவு செய்பவை புகைப்படங்கள். காலம் கடந்தாலும் அவை பழுதாவதில்லை.
அத்தகைய புகைப்படைக் கலையை தன் உயிருக்கு நிகராக நினைக்கும் ஓர் இளம் புகைப்படக் கலைஞன் ஹாரூட்டோ அசாகுரா (கென்டோ நக்ஜாமி). தான் வழக்கமாகச் செல்லும் ஒரு சலூனில் சந்தித்த ஒரு புதிய ஹேர் டிரஸ்ஸர் மிஸாகி அரிகே (ஹொனோகா மாட்சுமோட்டோ) மீது காதலில் விழுகிறான். அவளிடம் டேட்டிங் போகலாமா என்று அவன் கேட்க எடுத்துக் கொண்ட காலம் கிட்டத்தட்ட ஒரு வருடம். இடைப்பட்ட காலகட்டத்தில் இருவரும் பேசி, நட்பாகி ஒருவரின் மீது ஒருவர் மதிப்பு வைக்கின்றனர்.
தான் ஒரு அமெச்சூர் புகைப்படக் கலைஞன், பிரபல புகைப்படக் கலைஞரின் ஸ்டுடியோவில் பயிற்சியை பாதியில் விட்டுவிட்டு ஓடிவந்துவிட்டேன், வாழ்வாதாரத்துக்கு சின்னச் சின்ன வேலைகளைச் செய்துவருகிறேன் என்று டேட்டிங்கின் போது உண்மையைச் சொன்ன முதல் நாளே மிஸாகியின் கோபத்துக்கு உள்ளாகிறான். அவனைத் திட்டி, மீண்டும் அவரிடம் வேலைக்குச் சேர வைக்கிறாள் மிஸாகி.
சிறிது ஊடலுக்குப் பின் அவர்கள் இருவரும் மீண்டும் இணைகின்றனர். அதன் பின் இருவரும் தங்களின் எதிர்காலத்துக்கான நம்பிக்கைகளையும், கனவுகளையும் வளர்த்துக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் பேரன்பைக் கொட்டிப் பழகி வருகின்றனர். செர்ரி பூக்கள் பூத்துக் குலுங்கும் ஓரிடத்துக்கு அவன் அவளை அழைத்துச் செல்கிறான். என்றென்றும் ஒன்றாக இருக்க உன்னை மணக்க ஆசைப்படுகிறேன் என்று அவன் சொல்கிறான். அவனை அவளுக்கு மிகவும் பிடிக்கும், எங்கே உடனடியாக சரியென்று சொல்லிவிட்டால் தன்னைப் பற்றி அவன் என்ன நினைப்பான் என்று யோசித்து அவள் சிறிது அவகாசம் கேட்கிறாள்.
ஆனால் விதி வேறாகி, மிஸாகிக்கு ஒரு தீர்க்க முடியாத மருத்துவ பிரச்சினை எழுகிறது. அது என்ன? அதன் பின் அவர்களின் காதல் என்னவானது என்பதை அதிகத் திருப்பம் இல்லாமல் திரையாக்கம் செய்துள்ளார் இயக்குநர். இதயத்தைத் துளைக்கும் இறுதிக் காட்சியுடன் படம் நிறைவடைகிறது.
‘லவ் லைக் தி ஃபாலிங் பெடல்ஸ்’ படம் நெடுகிலும் அழகியலுடன் எடுக்கப்பட்டுள்ளது. கதைநாயகன் புகைப்படக் கலைஞன் என்பதால் பல ஃப்ரேம்கள் மிகத் துல்லியமாக அமைக்கப்பட்டுள்ளன. கதைநாயகியின் கோணத்திலிருந்தும், நாயகன் பார்வையிலிருந்தும் மாறி மாறி சொல்லப்படும் திரைக்கதை படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.
ஜப்பானியக் கலாச்சாரம் இப்படத்தில் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மிஸாகி ஒரு காட்சியில் வேலையை விட நேரும்போது, தனது நண்பர்களிடமும், சலூன் உரிமையாளரிடமும் தலை தாழ்த்தி உடலில் பாதியாகக் குனிந்து நன்றி சொல்வாள். நன்றி நவில்தல் அனைத்து நாட்டவரின் பண்பாடும் அன்றோ?. இந்த ஒரே காட்சியின் மூலம் மிஸாகி பண்பட்ட பெண் என்பதை இயக்குனர் உணர்த்திவிடுகிறார். மேலும், அடித்தட்டு ஜப்பானியரின் வாழ்க்கையைப் பற்றியும், அவர்கள் வாழ்க்கை முறையையும் இப்படத்தில் காணலாம்.
இப்படத்தின் இசையும் கதைக்கேற்ப பொருத்தமாக உள்ளது. செர்ரி மலர்களின் அழகுக் காட்சிகள் நுட்பமாகக் காட்டப்பட்டுள்ளன. இருப்பினும், சில தேவையற்ற சி. ஜி. காட்சிகளும் உள்ளன. அவை படத்துக்கு எவ்விதத்திலும் உதவவில்லை.
நீங்கள் காதலின் துயரைத்தை உணரும் மனநிலையில் இருந்தால், காதலின் அனைத்து சிக்கல்கள், அனைத்து குறைபாடுகளுடனும் கூட ரசிக்க முடிந்தவராக இருந்தால், ‘லவ் லைக் தி ஃபாலிங் பெட்டல்ஸ்’ படத்தை நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம்.