

2019-ல் வெளியாகி உலகம் முழுவதும் பாராட்டுகளைப் பெற்ற ஸ்பானிஷ் திரைப்படம் ‘தி பிளாட்ஃபார்ம்’ (The Platform). தற்போது இதன் இரண்டாம் பாகமாக வெளியாகியிருக்கும் ‘தி பிளாட்ஃபார்ம் 2’ முந்தைய பாகம் கொடுத்த தாக்கத்தை ஏற்படுத்தியதா என்பதை பார்க்கலாம்.
‘தி பிட்’ என்று அழைக்கப்படும் சிறை போன்ற அமைப்பைக் கொண்ட ஒரு குறுகலான, ஆனால் எவ்வளவு என்று யாருக்கும் தெரியாத ஒரு கட்டமைப்பு. மொத்தப் படமும் இதிலேயேதான் நடக்கிறது. நூற்றுக்கணக்கான தளங்கள். ஒவ்வொரு தளத்திலும் இரண்டு நபர்கள். தளங்களின் நடுவே ஒரு பெரிய சதுர வடிவ இடைவெளி. அந்த இடைவெளியின் ஊடாக ஒரு பெரிய தட்டு (Platform) போன்ற அமைப்பு மேலிருந்து கீழ இறங்கும்.
ஒவ்வொரு தளத்திலும் சில நிமிடங்கள் நிற்கும் அந்த தட்டில் உலகில் உள்ள அனைத்து வகையான உணவும் அடுக்கப்பட்டிருக்கும். மேல் தளத்தில் இருப்போர் சாப்பிட்டுவிட்டு அடுத்தடுத்த தளங்களுக்கு அனுப்ப வேண்டும். உணவை அதிலிருந்து யாரும் எடுத்து வைத்துக் கொள்ளக் கூடாது. அந்த தட்டு நிற்கும் அந்த ஒரு சில நிமிடங்களுக்குள்ளாகவே எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். மீறி எடுத்தால் அந்த தளம் முழுக்க நெருப்பு பரவி அங்கிருப்பவர்களை எரித்து விடும். மாதம் ஒரு முறை சிறைவாசிகள் வெவ்வேறு தளங்களுக்கு தூக்கத்திலேயே மாற்றப்படுவார்கள். தங்களை யார், எப்போது மாற்றுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது.
இதுதான் ‘தி பிளாட்ஃபார்ம்’ படத்தின் கரு. இதில் வெகு சில கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக் கொண்டு விறுவிறுப்பான திரைக்கதை, தரமான மேக்கிங் உடன் அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அதே கதைக்கருவுடன் வேறு கதாபாத்திரங்களுடன் முந்தைய படத்தைக் காட்டிலும் பிரம்மாண்ட மேக்கிங் உடன் வெளியாகியுள்ளது ‘தி பிளாட்ஃபார்ம் 2’.
உலகம் முழுவதுமே டிஸ்டோபியன் வகை படங்களுக்கு வரவேற்பு உண்டு. ஸ்டார் வார்ஸ் காலம் முதல் சமீபத்திய மேட்மேக்ஸ் வரையில் அப்படியான படங்கள் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றவை. இந்தியாவில் இப்போதுதான் ‘கல்கி’ படம் மூலம் அது சாத்தியமாகியிருக்கிறது. அந்த வகையில் ஸ்பானிஷ் மொழியில் வெளியாகியுள்ள ‘தி பிளாட்ஃபார்ம் 2’ உணவின் ஊடாக அரசியல், சுயபரிசோதனை, மனமாற்றம், மனித உளவியல், கம்யூனிசம் என பல்வேறு விஷயங்களை ஆழமாக பேசிச் செல்கிறது.
இந்த பாகத்தில் ‘தி பிட்’ சிறையில் இருக்கும் நபர்கள் அனைவரும் சேர்ந்து தங்களுக்குள் ஒரு விதியை வகுத்துக் கொள்கின்றனர். அதாவது, சிறைக்குள் வரும்போது சிறைவாசிகள் தங்களுடைய விருப்ப உணவாக தேர்வு செய்த உணவை தவிர வேறு எதையும் உண்ணக்கூடாது. இதன் மூலம் கடைசி தளம் வரை இருக்கும் நபர்களுக்கும் உணவு போய் சேரும் என்ற பொதுவுடைமை சிந்தனையுடன் முடிவெடுக்கின்றனர். ஆனால் இதில் ஏற்படும் சில சிக்கல்களால் இரண்டு குழுக்கள் உருவாகிறது. அந்த சிக்கல் சரியானதா என்பதைத்தான் இந்தப் பாகம் பேசுகிறது.
முதல் பாகம் சீட் நுனியில் உட்கார வைக்கும் த்ரில்லர் காட்சியமைப்புகளை கொண்டிருந்ததென்றால், இது மனித மனங்களை உளவியல் ரீதியாக அலசும் பல ஆழமான காட்சிகளை கொண்டிருக்கிறது எனலாம். படத்தின் பிரதான கதாபாத்திரங்கள் தான் ‘தி பிட்’ உள்ளே வருவதற்கான காரணங்களை சொல்வதுடன் தொடங்கும் படம் அதன் பின் எங்குமே நிற்காத வகையில், நேரத்தை வளர்க்காத திரைக்கதையால் தீயாய் பறக்கிறது படம்.
படத்தின் ஆரம்பத்தில் வரும் பிரதான கதாபாத்திரங்களான மெலனா ஸ்மித், ஹோவிக் க்யூச்கெரியன் இடையிலான காட்சிகள் பல இடங்களில் நெகிழ்ச்சி தருகின்றன. குறிப்பாக ஹோவிக் க்யூச்கெரியன் முதலில் நடந்துகொள்ளும் விதமும், கடைசியில் அவருக்குள் ஏற்படும் மனமாற்றம், அதைத் தொடர்ந்து அவர் எடுக்கும் முடிவு ஆகியவை சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. முந்தைய பாகத்தைப் போலவே இதிலும் அந்த சிறையை சமூகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்படியான குறியீடுகள், உணவு வழி அரசியல் தொடர்பான வசனங்கள், வர்க்க பேதங்களை அடிக்கோடிட்டுக் காட்டும் காட்சிகள் என படம் முழுக்க வருகின்றன.
படத்தின் பிரச்சினையே பல இடங்களில் புரியாமல் இருப்பதுதான். முதல் பாகத்தில் இருந்த தெளிவு கூட இந்தப் படத்தில் இல்லை என்பது பெரும் குறை. கதை எந்த டைம்லைனில் நடக்கிறது. இது முந்தைய பாகத்தின் தொடர்ச்சியா அல்லது முன்கதையா என்ற விளக்கம் எதுவும் இல்லை. குறிப்பாக, படத்தின் இறுதி அரை மணி நேரத்தில் என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. இயக்குநர் என்ன சொல்லவருகிறார்? நடப்பது கதாபாத்திரங்களின் கற்பனையா? கனவா? அல்லது நிஜமா என எதுவும் தெரியவில்லை. முதல் பாகத்தில் இருந்த சில குழப்பங்களுக்கு இதில் விடை சொன்னது போல, இந்த பாகத்தின் விளக்கத்தை அடுத்த பாகத்தில் இயக்குநர் கொடுப்பார் போலிருக்கிறது.
முதல் பாகத்தில் முதலாளித்துவத்தின் பாதகங்களை குதறிய இப்படம், இரண்டாம் பாகம் மூலம் மிகுதியாக கம்யூனிசத்தில் ‘கை’ வைக்கப்பட்டுள்ளது. தொடக்கம் முதல் இறுதுவரை படத்தின் மேக்கிங் வியக்க வைக்கிறது. அந்த குறுகலான நான்கு சுவர்களுக்கு இடையிலும் கூட ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டத்தை உணரவைத்தது சிறப்பு. முதல் பாகத்தைப் போலவே இதிலும் ரத்தம், வன்முறை, மனித மாமிசம் உண்ணுவது போன்ற ’ரா’வான காட்சிகள் அதிகம். கண்டிப்பாக 18 வயதுக்குட்பட்டோர் கொண்டோர் பார்க்க தகுந்த படம் அல்ல. மன உறுதி கொண்டோர் இப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.