

பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த 3 பெண்களும், அவர்களின் அசாத்திய சம்பவங்களும் தான் படத்தின் ஒன்லைன். படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
கோவாவில் ரெஸ்டாரன்ட் ஒன்றை திறந்து வாழ்க்கையில் செட்டிலாகிவிட வேண்டும் என்ற தன் கணவரின் கனவை, தன் கனவாக்கி, அதனை நனவாக்க போராடுகிறார் கீதா (தபு). பெற்றோரிடமிருந்து பிரிந்து தாத்தாவின் அரவணைப்பில் வாழும் ஜாஸ்மின் (கரீனா கபூர்) வீட்டு வாடகை கட்ட முடியாமலும், கடனை அடைக்க முடியாமலும் அல்லல்படுகிறார். பைலட் ஆக வேண்டும் என்ற ஆசையுடன் வலம் வருகிறார் திவ்யா (கீர்த்தி சனோன்). வெவ்வேறு குடும்ப பிண்ணனியையும், கனவுகளையும் கொண்ட இவர்கள் மூவரும் கோஹினூர் ஏர்லைன்ஸில் ஏர்ஹோஸ்டஸாக பணியாற்றி வருகின்றனர்.
இவர்களின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் கோஹினூர் ஏர்லைன்ஸின் சம்பள பாக்கியும், பணிபலன் தொகையும். பலமுறை மன்றாடியும் அவர்களுக்கான ஊதியம் நிலுவை தொகை முழுவதும் வழங்கபடவில்லை. அங்கிருக்கும் மற்ற பணியாளர்களுக்கும் இதே நிலை.
இந்தச் சூழலில்தான் தங்க கட்டிகளை திருடி விற்கும் வாய்ப்பு மூவருக்கும் கிடைக்கிறது. முதலில் தயங்கும் மூவர் கூட்டணி பின்பு அதில் இறங்க, கஸ்டம்ஸில் சிக்கி கொள்கின்றனர். அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வந்தார்கள்? அவர்களின் பொருளாதார நெருக்கடி சரியானதா? கோஹினூர் ஏர்லைன்ஸ் அவர்களுக்கான நிலுவையை கொடுத்ததா? - இதுதான் திரைக்கதை.
90, 2000-களில் ஆளுமை செலுத்திய இரண்டு நடிகைகளையும், அவருடன் இன்றைய தலைமுறை நடிகை ஒருவரை இணைத்து பெண்களை முன்னிலைப்படுத்திய ஜாலியான ஹெய்ஸ்ட் காமெடியை கொடுக்க முயன்றியிருக்கிறார் இயக்குநர் ராஜேஷ் கிருஷ்ணன். தலைமுறை இடைவெளியில்லாமல் பிணையப்பட்டுள்ள மூவருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒத்துப்போகிறது. சரிசமமான திரைநேரம் மூலம் சம முக்கியத்துவம் கொடுத்து யாருக்கும் பகையாகாமல் தப்பிக்கிறார் இயக்குநர்.
மூவரின் குடும்ப பின்னணி, அவர்களுக்கான பொருளாதார நெருக்கடி, திடீர் மரணம், அதைத் தொடர்ந்து நிகழும் தங்க கடத்தல், சுங்கத் துறை அதிகாரிகளிடம் சிக்குவது, தங்கத்தை கடத்த பயன்படுத்தும் யுக்தி, சுவாரஸ்யமான க்ளைமாக்ஸ் என படம் எங்கேஜிங்காகவே நகர்கிறது. தொழிலதிபருக்கு விஜய் வாலியா என்ற பெயர், ஏர்லைன்ஸ், தலைமறைவு என நம்மால் கனெக்ட் செய்ய முடிகின்ற சில அரசியல் சம்பவங்களும் உண்டு.
ஆங்காங்கே வரும் சின்ன சின்ன நகைச்சுவை ரசிக்க வைக்கிறது. பொருளீட்டுபவர்கள் பெண்களாகவும், அவர்களைச் சார்ந்து ஆண்கள் வாழ்வதும், குறிப்பாக தபுவின் கணவராக வரும் கபில் ஷர்மா வீட்டில் சமைப்பதை நார்மலைஸ் செய்யும் காட்சிகள் கவனிக்க வைக்கின்றன. விமான சாகசங்களை ஆண்களே நிகழ்த்தி வந்த நிலையில், பாலிவுட்டின் மூத்த நடிகைகள் அதை லாவகமாக கையாண்டிருப்பது வரவேற்க்கத்தக்கது.
கோஹினூர் ஏர்லைன்ஸில் பணிபுரியும் மூன்று பேரும் கோஹினூர் வைரம் போல நடிப்பால் திரை முழுக்க மின்னுகிறார்கள். கணவரை தன் சகோதரன் திட்டும் போது விட்டுக்கொடுக்காமல் கொதிக்கும் தபு, விரக்தி மனநிலையை முதிர்ந்த நடிப்பால் நேர்த்தியாக பதிய வைக்கிறார். அவர் வெளிப்படுத்தும் உணர்வுகளில் அப்படியொரு யதார்த்தம்.
இன்றைய தலைமுறை நடிகையான கீர்த்தி சனோனின் இளமைத் தோற்றத்துக்கு டஃப் கொடுக்கிறார் கரீனா கபூர். அதேசமயம் நடிப்பில் அவரைக் காட்டிலும் கூடுதலாக ஸ்கோர் செய்ய தவறவில்லை. அவரிடம் இயல்பாகவே ஒட்டியிருக்கும் ஒருவித நகைச்சுவைத்தனம் சார்ந்துள்ள கதாபாத்திரத்துக்கு வலுவூட்டுகிறது.
தபுவும், கரீனாவும் சீனியர் நடிகைகள் என்பதை நடிப்பில் அழுத்தமாக பதிய வைக்கின்றனர். கூடவே கவர்ச்சியிலும்! இவர்களுக்கு இணையான நடிப்பை கொடுக்க முயலும் கீர்த்தி சனோன் அதில் தேர்ச்சிப் பெறுகிறார். இவர்களைத் தவிர்த்து தில்ஜித் தோசஞ், கபில் ஷர்மா, ராஜேஷ் ஷர்மா, சாஸ்வத சட்டர்ஜி தேவையான பங்களிப்பை செலுத்துகின்றனர்.
பாலிவுட்டின் பிரபலமான பாடல்களான ‘சோலி கி பிசே’, ‘சோனா கித்னா சோனா ஹை’ ஆகிய பாடல்களை ரீமிக்ஸ் செய்திருப்பது உற்சாகம் கொடுக்கிறது. அனுஜ் ராகேஷ் தவானின் கலர்ஃபுல்லான ஒளிப்பதிவு பாலிவுட் திரைப்படம் என்பதை நிரூபிக்கிறது. மன்னன் சாகரின் படத்தொகுப்பு படத்தின் தேவையற்ற நீளத்தை முடிந்த அளவுக்கு குறைத்திருப்பது நன்று.
லாஜிக் மீறல்களையெல்லாம் தாண்டி ஹெய்ஸ்ட் காமெடி படத்தை, பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தும் நடிகைகளின் சங்கமத்துடன் திரையில் பார்க்க நினைத்து முயற்சிப்பவர்களுக்கு இந்த ‘Crew’டேக் ஆஃப் ஆகலாம்.