Published : 20 Apr 2024 03:10 PM
Last Updated : 20 Apr 2024 03:10 PM

Joram - பழங்குடியினரை விழுங்கும் வளர்ச்சித் திட்டமும், விறுவிறு காட்சி அனுபவமும் | ஓடிடி திரை அலசல்

தான் செய்யாத கொலையில் தன்னை சிக்க வைக்க நடக்கும் சூழ்ச்சிகளில் இருந்து தப்பிக்க கட்டுமானத் தொழிலாளி ஒருவர் தனது 3 மாத குழந்தையுடன் ஓடுகிறார். இந்த பின்னணியில் என்ன நடந்தது என்பதே ‘ஜோரம்’ (Joram) திரைப்படத்தின் ஒன்லைன். அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இந்தத் திரைப்படம் காணக் கிடைக்கிறது.

கனிம வளங்களின் அட்சயப்பாத்திரமாக பார்க்கப்படும் மாநிலம் ஜார்க்கண்ட். அதேநேரம், இந்தியாவில் வறுமை நிலையில் இருக்கும் மாநிலங்களின் பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் அம்மாநிலம் இன்றுவரை தொடர்கிறது. பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் இம்மாநிலத்தின் வளங்கள் சூறையாடப்படுவது முடிவின்றி தொடர்ந்து வருகிறது. இதற்காக எண்ணற்ற மலைகளும் காடுகளும் காவு கொடுக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்டில் வாழ்ந்த பழங்குடிகள், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அவர்களது வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். தங்கள் தொன்மத்தை தொலைத்துவிட்டு, நடோடிகளைப் போல நாடு முழுவதும் பரவிக் கிடக்கும் நிலப்பரப்புகளில் அம்மக்கள் ஏதிலிகளைப் போல வாழ்ந்து வருகின்றனர். இந்த உண்மைத் தகவலை பின்னணியாகக் கொண்டு, இயக்குநர் தேவாஷிஷ் மகிஜா எழுதி இயக்கியிருக்கும் இந்தி திரைப்படம்தான் ‘ஜோரம்’

படத்தின் ஆரம்பம் முதலே துரத்தலும், தேடலுமாய் விறுவிறுப்பாக செல்கிறது. இயக்குநர் மகிஜா மனோஜ் பாஜ்பாய் காம்போவில் வெளிவரும் மூன்றாவது படம் இது. ஜார்க்கண்ட் நிலபரப்பையும், அம்மக்களின் வாழ்வியல் சூழலையும் இயக்குநர் மிகச் சிறப்பாக கண்முன் நிறுத்துகிறார். இதுபோன்ற சவால் நிறைந்த திரைக்கதையை அவர் கையாண்டிருக்கும் விதம் அவரை கவனிக்க வைக்கிறது. இதுபோன்ற கதையம்சம் கொண்ட திரைப்படங்களுக்கான அதர பழசான ஃபார்மெட்டுகளில் இருந்து முற்றிலும் விலகி, எளிய மக்களின் வாழ்வியல் போக்கை உள்வாங்கி கதையை நகர்த்தியிருப்பது திருப்தியளிக்கிறது.

பார்வையாளர்களுக்கு ஒரு புதிய நிலபரப்பையும், அந்த மண்ணின் மக்களையும் அறிமுகப்படுத்துவது என்பது ஒரு கலை. அதை இயக்குநர் வெகு சிறப்பாக கையாண்டிருக்கிறார். கதைக்களத்தின் நிகழ்விடம், அந்த மண் சாலைகள், கவலை தோய்ந்த முகத்துடன் காணப்படும் மனிதர்கள் என படங்களில் தென்படும் அனைத்தும் ஒருவித இறுக்கத்தை உணர்த்துகிறது.

அதேநேரம், சொந்த நிலத்தைவிட்டு அறிமுகம் இல்லாத வாழ்விடங்களில் வாழும் வலியையும் இயக்குநர் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். சொந்த நிலங்களில் வாழும் பூரவக்குடி மக்கள் சொந்த நிலங்களில் இருந்து துரத்தப்படும்போது, அங்கு உருவாகும் எதிர்ப்புக் குரல்கள் அரசால் எப்படியெல்லாம் அடக்கப்படுகிறது. எதிர்ப்புக் குரலின் வீரியம் எந்தளவுக்கு இருக்கும் என்பதையெல்லாம் இப்படம் சமரசமின்றி பேசுகிறது. விரல்விட்டு எண்ணிவிடும் அளவிலான கதாப்பாத்திரங்களை வைத்துக் கொண்டு சமகால பிரச்சினையை பேசியிருக்கும் இயக்குநரின் முயற்சி பாராட்டுக்குரியது.

ஜார்க்கண்ட்டில் இருக்கும் ஜின்பின்டி மலைக் கிராமத்தில் பழங்குடியின தம்பதியான தஷ்ரூவும் வானோவும் (மனோஜ் பாஜ்பாய்-தன்ஷிதா சட்டர்ஜி) மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். அதே சமூகத்தைச் சேர்ந்த ஊர்த் தலைவரின் மகன், வளர்ச்சித் திட்டத்துக்காக அரசுக்கு அந்த நிலம் தேவைப்படுவதாகவும், நிலம் கொடுப்பவர்களுக்கு பணம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கிறார். ஆனால், அம்மக்கள் அதற்கு சம்மதிக்க மறுக்கின்றனர். இந்த தகவல், அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் புரட்சிப்படைக்கு தெரியவருகிறது. அவர்கள், ஊர் மக்கள் முன்னிலையில் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். இந்த கொலையின்போது புரட்சிப் படையைச் சேர்ந்த தஷ்ரூவும் உடன் இருக்கிறார்.

இச்சம்பவத்தின் எதிர்விளைவுகளை உணர்ந்த தஷ்ரூவும் வானோவும் இரவோடு இரவாக அவ்வூரில் இருந்து வெளியேறுகின்றனர். இதனிடையே கொலை செய்யப்பட்டவரின் தாயான புலோ கர்மா (ஸ்மிதா டாம்பே) ஆளுங்கட்சியில் சேர்ந்து எம்எல்ஏவாகி விடுகிறார். தனது மகனை கொலை செய்தவர்களை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தேடி தேடி வேட்டையாடுகிறார். இந்த வேட்டையில் தஷ்ரூவின் குடும்பம் தப்பியதா, இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

படத்தின் ஒளிப்பதிவாளர் பியூஸ் புட்டியின் கேமராவும் லைட்ஸும், இந்த உணர்வுபூர்வமான சேஸிங் சினிமாவுக்கு பலம் சேர்த்திருக்கிறது. பசுமையான மலைக் கிராமங்கள், வறண்டு ராட்சத கிரேன்களைக் கொண்டு வெட்டியெடுக்கப்படுவதை கச்சிதமாக காட்சிப்படுத்தியிருக்கிறது. படத்தின் இசையமைப்பாளர் மங்கேஷ் தக்டேவின் இசை உயிரூட்டுகிறது. பின்னணி இசையும் சிறப்பாக அமைந்திருக்கிறது.

பழங்குடியினத்தைச் சேர்ந்த தஷ்ரூ கதாப்பாத்திரத்தில் மனோஜ் பாஜ்பாய் அசத்தியிருக்கிறார். தனது மலைக் கிராமத்தில் மனைவியோடு கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கும் தொடக்க காட்சி முதல், தனது குழந்தையை சுமந்தபடி காட்டுக்குள் ஓடி மறையும் இறுதிக் காட்சி வரை படம் முழுக்க அவரது இயல்பான நடிப்பில் மனுஷன் அசத்தியிருக்கிறார்.

சொந்த கிராமத்தில் இருக்கும்போது மகிழ்ச்சியாக இருப்பது காட்டப்படும் ஒன்றிரெண்டு காட்சிகளில் மட்டும்தான் மனுஷ் சிரித்திருக்கிறார். மற்றபடி படம் முழுக்க காவல் துறை மீதான பயமும், தன் குழந்தையின் எதிர்காலம் குறித்த கவலையும் கலந்த முகத்துடன் சிறப்பாக நடித்திருக்கிறார்.

அதேபோல், இந்தப் படத்தில் பழங்குடியின எம்எல்ஏவாக வரும் ஸ்மிதா டாம்பே மிக சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மகனை கொன்றவர்களை பழிவாங்கத் துடிக்கும் கதாப்பாத்திரம் வெகு சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. காவல் துறை அதிகாரியாக வரும் முகமது ஜீஷான் ஆயுப்பின் நடிப்பு இயல்பாக இருக்கிறது. படத்தில் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் வரும் பலருமே தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, எங்கேவாது ஒரு மலையோ, காடோ உங்கள் கண்ணில்பட்டால் நினைவுக்கு வரும் தஷ்ரூ போன்ற பழங்குடியின மக்களின் உயிர் வாழ்தலுக்கான போராட்டமே இந்த 'ஜோரம்'.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x