Published : 04 Apr 2024 04:19 PM
Last Updated : 04 Apr 2024 04:19 PM

Killer Soup - துரோகமும் குற்றமும் கலந்த பிளாக் காமெடி த்ரில்லர் | ஓடிடி திரை அலசல்

ஜலதோஷம் பிடித்த நாட்களில், காதும் மூக்கும் அடைத்துக் கொள்ளும். இருமி இருமி வறண்டுக் கிடக்கும் தொண்டை. இந்த நேரத்தில், பரிந்துரைக்கப்படும் நிவாரண டிப்ஸ்களில் தவிர்க்க முடியாத ஒன்று இறைச்சி 'சூப்'. கொதிக்க கொதிக்க குடிக்கும் சூப்பின் ஒவ்வொரு மிடறும் உணவுக்குழல் பாதையை இதமாக்கும். நன்கு வேகவைக்கப்பட்டதில் பிய்ந்து விழுந்ததுபோக எலும்புத் துண்டுகளில் ஒட்டிக்கிடக்கும் இறைச்சியும், கொழுப்பும் சேர்ந்த மகத்துவமான சேர்க்கை அது. எலும்பு மஜ்ஜையும், மிளகின் காரமும், கொத்தமல்லி தழைகளின் நறுமணமும் சேர்ந்து உள்ளிறங்கும்போது நாக்கின் நரம்புகள் நாட்டியமாடும். சூப் குடிக்கும் குவளையின் அடிப்பகுதியில் சேகாரமாகியிருக்கும் இஞ்சிப் பூண்டு இன்ன பிற மசாலாக்களின் கலவையை ஸ்பூனால் ஒரு அழுத்து அழுத்தி வடிகாட்டிய கடைசி சாறைப் பருகும்போது, வேர்த்துக் கொட்டி, காது திறந்து, தொண்டை கரகரத்து இதமான வலியுடன் ஜலதோஷம் பிடித்தவர்களுக்கு ஓர் இடைக்கால நிவாரணம் கிடைத்திருக்கும்.

இதேபோன்ற பல்சுவை உணர்வுகளை கலந்த ஒரு பிளாக் காமெடி த்ரில்லர்தான் ‘கில்லர் சூப்’ (Killer Soup) என்ற இந்தி வெப் சீரிஸ். அனந்த் திரிபாதி, ஹர்ஷத் நளவாடே, உனேசா மெர்ச்சண்ட் ஆகியோருடன் இணைந்து எழுதி இயக்குநர் அபிஷேக் சவுபே இயக்கியிருக்கிருக்கும் இந்த வெப் சீரிஸ் 8 எபிசோட்களைக் கொண்டிருக்கிறது. 2017-ம் ஆண்டு தெலங்கானாவில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட சீரிஸ் இது. Q-க்குப் பக்கத்தில் u-வராத வார்த்தைகளைக் கூறுங்கள், என்று யாராவது கேட்டால், நம்மை அறியாமல் வார்த்தைகளைத் தேட ஆரம்பித்துவிடுவோம். அதுபோலத்தான், இந்த சீரிஸின் முதல் எபிசோட் பார்க்கும் பார்த்தவர்களை, அடுத்தடுத்த எபிசோட்களை நோக்கி கைப்பிடித்து கடத்திச் சென்றிருக்கிறார் இயக்குநர்.

மதுரை அருகே மெய்ஞ்சூர் என்ற கற்பனையான சுற்றுலா மலை நகரமொன்றில் வசிக்கும் தம்பதி பிரபு ஷெட்டி - ஸ்வாதி (கொங்கனா சென் சர்மா - மனோஜ் பாஜ்பாய்). சமையல் கலைஞராகி ரெஸ்டாரண்ட் துவக்க வேண்டும் என்பதே ஸ்வாதியின் லட்சியம். ஆனால், ஏற்கெனவே ஹோட்டல் தொடங்குவதாககூறி, தனது அண்ணன் அரவிந்த் ஷெட்டியிடம் (ஷாயாஜி ஷிண்டே) ரூ.30 கோடி வாங்கி ஏமாற்றியவர் பிரபு ஷெட்டி. இதனால் சுவாதியின் லட்சியத்தை ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி பிரபு தவிர்த்து வருகிறார். அதேநேரம் ஸ்வாதியும் உமேஷ் பிள்ளையும் நீண்டகால காதலர்கள். ஸ்வாதிக்கு பிரபுவுடன் திருமணம் முடிந்து டீன் ஏஜ் வயதில் ஒரு மகன் வந்தபிறகும் தொடரும் அதீதமான காதல் அது. சுவாரஸ்யம் என்னவென்றால், மாறுகண்ணுடன் இருந்தாலும் உமேஷ் பிரபுவைப் போன்ற உருவ ஒற்றுமை கொண்டவர் என்பதுதான்.

உமேஷ் பிள்ளையும் ஸ்வாதியும் ஒருநாள் காதலில் ஒன்றென கலந்திருக்கும்போது பிரபு ஷெட்டியிடம் சிக்கிக் கொள்கின்றனர். அப்போது நடக்கும் தாக்குதலில் பிரபு ஷெட்டி கொல்லப்படுகிறார். பிரபுவின் இடத்துக்கு உமேஷை ஆள்மாற்றம் செய்கிறார் சுவாதி. இச்சம்பவத்தை ஒரு குற்றச் சம்பவமாகவும் மாற்றிவிடுகிறார். இந்த வழக்கை விரைவில் ஓய்வு பெற போகும் ஹசன் (நாசர்) என்ற காவல்துறை அதிகாரி, ஏஎஸ்ஐ ஆன துப்பாலி (அன்புதாசன்) உடன் சேர்ந்து விசாரிக்க வருகிறார். இதனிடையே துப்பாலியும் மர்மமான முறையில் இறந்து போகிறார். ஹசனின் விசாரணை தீவிரமடைகிறது.

பிரபு ஷெட்டி மீது தாக்குதல் நடத்தியது யார்? எப்படி தாக்கப்பட்டார்? இந்த தாக்குதலில் பிரபுவுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன? இந்த சம்பவத்தை அரவிந்த் ஷெட்டி எப்படி எடுத்துக் கொள்கிறார்? காவல்துறை அதிகாரி ஹசன் குற்றவாளிகளை கண்டுபிடித்தாரா? இல்லையா? சுவாதியின் ரெஸ்டாரன்ட் கனவு என்ன ஆனது? என்பதுதான் இந்த வெப் சீரிஸின் திரைக்கதை. பொதுவாக ஒரு சூப் தயாரிக்க சிறிதும் பெரிதுமாக பல பொருட்கள் தேவைப்படும். அதுபோல இந்த சீரிஸில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் பார்த்து பார்த்து சேர்த்திருக்கிறார் இயக்குநர்.

பிரியாணி போன்ற உணவுகளை சாப்பிடும்போது தெரியாமல் பற்களில் கடிபடும் கிராம்பும், ஏலக்காயும் அந்த உணவை சாப்பிட்டு முடித்தப்பிறகும் அந்த உணர்வு நம்மை ஏதோ செய்யும். அதுபோலத்தான் இந்த வெப் சீரிஸில் கொங்கனா சென் சர்மாவின் நடிப்பும் உள்ளது. தவறுக்கு மேல் தவறு செய்யும் அவரது கதாப்பாத்திரம் மீது நமக்கு கோபம் வராமல், எங்காவது மாட்டிக்கொள்ளப் போகிறாரோ? என பரிதவிக்க வைக்கிறது. அவரது நடிப்பும் இருப்பும், வெயில் காலத்து குளத்தங்கரை நீரில் குழைந்து கிடக்கும் சேற்றில்பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளி போல இந்த சீரிஸ் முழுக்க மின்னுகிறது. மனோஜ் பாஜ்பாய், ஷாயாஜி ஷிண்டே, நாசர், லால் என அத்தனை பேருடன் காம்பினேசன் காட்சிகளிலும் மனுஷி பின்னியெடுத்திருக்கிறார்.

மனோஜ் பாஜ்பாய் பிரபு ஷெட்டியாக வரும்போது கால் தாங்கி வாக்கிங் ஸ்டிக் உடன் வரவேண்டும். உமேஷாக மாறு கண்ணுடன் வரவேண்டும். ஆள் மாறாட்டத்துக்குப் பிறகு ஒரு கண்ணை மறைத்துக் கொண்டு காலை தாங்கி தாங்கி வாக்கிங் ஸ்டிக் உடன் நாக் அவுட் செய்திருக்கிறார். அண்ணனுக்கு பயந்த தம்பியாக, கணவனாக, தொழிலதிபராக, மசாஜ் செய்பவராக, தந்தையாக, அப்பாவி காதலனாக சீரிஸ் முழுவதும் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறார்.

இந்த இரண்டு கேரக்டர்களுக்கு இணையான ரோலில் நாசர் வருகிறார். சினிமாக்களில் வெகுநாட்களாக தென்படாத அவரை இந்த சீரிஸில் பார்ப்பதே பலருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். வில்லத்தனம் இல்லாத நகைச்சுவை கலந்த துப்பறியும் கதாப்பாத்திரத்தை நாசர் அனுபவித்து நடித்திருக்கிறார். அவரது விசாரணை முறையும், முயற்சியும் ஒவ்வொரு முறை தோல்வியுறும்போது தன்னைத்தானே தட்டிக்கொடுத்து மீண்டும் மீண்டும் முன்னோக்கிச் செல்லும் இடங்களில் தனது நடிப்பால் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறார்.

இவர்கள் தவிர, ஷாயாஜி ஷிண்டே, லால், அனுலா நவ்லேகர், கனி குஷ்ருதி, ராஜீவ் ரவிந்திரநாதன், பக்ஸ், அன்புதாசன் என அனைவருமே தங்களது சிறப்பான பங்களிப்பை செய்துள்ளனர். ஒரே வருத்தம் ஷாயாஜி ஷிண்டேவின் நம்பகத்தனமாக அடியாளாக லாலை பயன்படுத்தியிருப்பது. பெரிய ஸ்கோப் எதுவுமே இல்லாமல் லால் வீணடிக்கப்பட்டது நெருடல். அனுஜ் ராகேஷ் தவணின் ஒளிப்பதிவும் யாஷ் பாண்டே மற்றும் சந்தேஷ் ராவின் இசையும் கண்களையும் காதுகளையும் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. சன்யுக்த கஸா மற்றும் மேக்னா மான்சந்னா சென் ஆகியோரது கட்ஸ், வெப் சீரிஸின் விறுவிறுப்புக்கு வலு சேர்க்கின்றன.

வயது வந்தோருக்கான காட்சிகள் உள்ளன. தமிழ் டப்பிங் உள்ளது. பல இடங்களில் மியூட் போட வேண்டிய வசனங்கள் வருகிறது. குழந்தைகளுடன் பார்ப்பதை தவிர்க்கவும். மொத்தத்தில், அனுபவம் வாய்ந்த நடிகர் - நடிகைகளின் பாத்திரத் தேர்வும், துரோகம், ஆள்மாறாட்டம், பழியுணர்ச்சி, காதல், களவு, சூழ்ச்சி, நகைச்சுவை, சஸ்பென்ஸ் குறையாத திரைக்கதையில் சரியான பக்குவத்தில் சேர்த்து பரிமாறப்பட்டிருக்கும் எங்கேஜிங்கான க்ரைம் த்ரில்லர்தான் இந்த Killer Soup வெப் சீரிஸ். நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x