Published : 23 Feb 2024 02:19 PM
Last Updated : 23 Feb 2024 02:19 PM

ஓடிடி திரை அலசல் | Avatar: The Last Airbender - கார்ட்டூன் ரசிகர்களுக்கு திருப்தியா, ஏமாற்றமா?

2005-ம் ஆண்டு வாக்கில் உலகம் முழுவதும் உள்ள கார்ட்டூன் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமான தொடர் ‘அவதார்: தி லாஸ்ட் ஏர்பெண்டர்’ (Avatar: The Last Airbender). அனிமே பாணியில் அமெரிக்காவின் நிக்கலோடியோன் அனிமேஷன் நிறுவனம் உருவாக்கிய இத்தொடர் மிகச் சிறந்த கார்ட்டூன் தொடர்களின் ஒன்றாக பாராட்டப்பட்டது. மேலும் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது. தமிழிலும் இத்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. புகழ்பெற்ற கார்ட்டூன் படங்களுக்கு உயிர்கொடுக்கப்படும் காலகட்டத்தில் லைவ்-ஆக்‌ஷன் வெப் தொடராக அதே பெயரில் வெளியாகியுள்ள இந்த சீரிஸ் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

காற்று, நெருப்பு, தண்ணீர், நிலம் ஆகிய சக்திகளை தனித்தனியே கொண்ட நான்கு பிரிவு மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நான்கு பிரிவுகளுக்கும் நான்கு தலைவர்கள் (அவதார்கள்) உண்டு. நான்கு பிரிவினரும் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில், நெருப்பு சமூக மக்களால் மற்ற சமூகங்கள் இன்னலுக்கு ஆளாகின்றனர். இதில் காற்றை வசப்படுத்தும் சமூகத்தின் அவதாராக இருந்தவர் ஆங் என்ற சிறுவனாக மறுபிறவி எடுக்கிறார். இதனிடையே நெருப்பு சமூக மக்களால் காற்று சமூகத்தினர் வாழும் ஊர் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் தப்பிக்கும் ஆங், பனிப்பாறையில் உறைந்த நிலையில் 100 ஆண்டுகளாக சிக்கியிருக்கிறார்.

100 ஆண்டுகளுக்குப் பிறகு சாக்கா என்ற இளைஞனும், அவரது சகோதரியான கடாராவும் ஆங்-ஐ கண்டெடுக்கின்றனர். மீண்டும் உயிர்பெறும் ஆங், தான் நான்கு சக்திகளையும் வசப்படுத்தும் ஒரு அவதார் என்பதை உணர்ந்து கொள்கிறார். அவதார் மீண்டும் வந்துவிட்டார் என்பதை தெரிந்து கொள்ளும் நெருப்பு சமூகத்தின் மன்னராக இருக்கும் ஓஸாய் மற்றும் அவரது மகன் உள்ளிட்டோர் ஆங்-ஐ பிடிப்பதற்காக தேடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களிடமிருந்து ஆங் தப்பித்தாரா? இறுதியில் என்னவானது என்பதை எட்டு எபிசோட்களில் சொல்கிறது ‘அவதார்: தி லாஸ்ட் ஏர்பெண்டர்’.

2010-ஆம் ஆண்டு இதே கார்ட்டூனை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் நைட் ஷ்யாமளன் ஒரு முழுநீள திரைப்படத்தை இயக்கினார். ஒரு கார்ட்டூனை எப்படி திரைப்படமாக எடுக்கக் கூடாது என்பதற்கு இன்றளவும் அந்தப் படம் ஒரு உதாரணமாக திகழ்ந்து வருகிறது. தற்போது அந்த வரிசையில் இன்னொரு உதாரணமாக இந்த தொடரும் சேர்ந்துள்ளது ‘அவதார்’ ரசிகர்களுக்கு சோகம்.

அண்மையில், புகழ்பெற்ற ‘மாங்கா’ சீரிஸ்களின் ஒன்றான ‘ஒன் பீஸ்’ கார்ட்டூனை லைவ் ஆக்‌ஷன் வெப் தொடராக நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டது. ஒவ்வொரு எபிசோடும் எந்த இடத்திலும் போரடிக்காத வகையில், காட்சிக்கு காட்சி விறுவிறுப்போடும், ஒரிஜினல் வெர்ஷனை பார்க்காதவர்களும் திருப்தியடையும் வகையில் அத்தொடர் உருவாக்கப்பட்டிருந்தது. சுமாரான கிராபிக்ஸ், புதிய நடிகர்கள் என்றாலும் கூட அதன் சுவாரஸ்யமாக திரைக்கதை நம்மை எந்த இடத்திலும் சோர்வடைய வைக்காது. 1000க்கும் மேற்பட்ட எபிசோட்கள் கொண்ட மாங்கா சிரீஸ், மிக கூர்மையாக 10 எபிசோட்களாக, அதே நேரத்தில் நேர்த்தி குறையாமல் கையாளப்பட்டிருந்தது.

ஆனால், இங்கு வெறும் 3 சீசன்கள், 61 எபிசோட்களைக் கொண்ட ‘அவதார்’ கார்ட்டூன் தொடரை முழுக்க முழுக்க எந்தவித கிரியேட்டிவிட்டியும் இன்றி காட்சிக்குக் காட்சி ஜெராக்ஸ் எடுத்து வைத்துள்ளனர். குறிப்பாக ‘அவதார்’ கார்ட்டூனை பல ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்தவர்களுக்கு ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை இம்மி பிசகாமல் கணிக்க முடிவது மிகப்பெரிய பலவீனம். இதனால் பார்க்கும் நம்மால் எந்த ஒரு இடத்திலும் ஒன்ற முடியவில்லை.

கார்ட்டூனாக பார்த்தபோது இருந்த உணர்வுகளை, லைவ் -ஆக்‌ஷன் தொடராக கொண்டு வரும்போது கோட்டை விட்டுள்ளனர். இதே பிரச்சினையை டிஸ்னியும் கடந்த சில ஆண்டுகளாக சந்தித்து வருவதை பார்க்க முடிகிறது. கார்ட்டூன்களாக பார்க்கும்போது அந்த கதாபாத்திரங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை, அதே கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களால் பார்வையாளர்களுக்கு முழுமையாக தரமுடிவதில்லை. அதேதான் ‘அவதார்’ விஷயத்திலும் நடந்துள்ளது. ‘ஆங்’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கோர்டன் கார்மியர், மன்னரின் சகோதரராக வரும் இரோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பால் சுன் ஹ்யூன் லீ (கிம்’ஸ் கன்வீனியன்ஸ் வெப் தொடரின் மூலம் புகழ்பெற்றவர்) தவிர மற்ற கதாபாத்திரங்களின் நடிப்பு அனைத்தும் படுசெயற்கையாக தோன்றுவதை தவிர்க்கமுடியவில்லை.

தொழில்நுட்ப ரீதியாகவும் குறிப்பிட்டுப் பாராட்டும்ப்டி எதுவும் இல்லை. ஆங்-ன் பறக்கும் எருது உள்ளிட்ட சில விஷயங்கள் தவிர கிராபிக்ஸ் சுமாராகவே உள்ளது. வெளிப்பகுதிகளில் எடுக்க வாய்ப்பிருந்தும் கூட வலுக்கட்டாயமாக கிரீன் மேட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் துருத்திக் கொண்டு தெரிகின்றன. கார்ட்டூனை அப்படியே நகலெடுக்கும் முயற்ச்யில் பொருந்தாத விக், படம் முழுக்க ஒரே காஸ்ட்யூம், எடுபடாத நகைச்சுவை வசனங்கள் என தொடர் முழுக்க அபத்தங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

தொடரின் நினைவுக்கூரத்தக்க காட்சிகள் என்று சொன்னால், தனது பால்யகால நண்பனான பூமியை நூறு வருடங்களுக்குப் பிறகு ஆங் சந்திப்பதும் அதனைத் தொடர்ந்து வரும் காட்சிகளும் ரசிக்கும்படி உள்ளன. அதேபோல ஆக்‌ஷன் இயக்குநர்களின் பங்கும் பாராட்டத்தக்கது. குறிப்பாக ஒமான்ஷு நகரில் நெருப்பு சமூகத்தினருக்கும் ஆங்-க்கும் இடையே நடக்கும் சண்டை காட்சிகள் சிறப்பு.

மொத்தத்தில் இரண்டு முறை முயற்சி செய்தும் ஒரிஜினல் ‘அவதார்’ கார்ட்டூன் தொடரை ஒரு நல்ல லைவ் ஆக்‌ஷன் படைப்பாக திரைக்கு வரமுடியவில்லை என்பதே அதன் நேர்த்தியான உருவாக்கத்துக்கு சான்று. ஒருகாலத்தில் வெளியாகி கிளாசிக் ஆக அறியப்படும் படைப்புகளில் நல்ல திரைக்கதை இல்லாமல் இனியும் கை வைக்க வேண்டாம் என்பதே ரசிகர்களின் அவா. ’அவதார்: தி லாஸ்ட் ஏர்பெண்டர்’ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x