

காமிக்ஸ் வடிவில் உருவாகி பின்னர் திரைப்படமாக தழுவப்பட்ட ஏராளமான கதாபாத்திரங்களை பார்த்திருப்போம். ஆனால், திரைக் கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டு, அது பெற்ற புகழால் காமிக்ஸ் வடிவில் பின்னர் வெளியான கதாபாத்திரம் ‘இண்டியானா ஜோன்ஸ்’. 70-களில் ஜார்ஜ் லூகாஸ், பிலிப் காஃப்மேன் எழுதிய கதைக்கு, 1981-ஆம் ஆண்டு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் திரை வடிவம் கொடுத்தார். ‘ரைடர்ஸ் ஆஃப் தி லாஸ்ட் ஆர்க்’ என்ற பெயரில் திரைப்படமாக வெளியான இதில், ஹாரிச ஃபோர்டு இண்டியானா ஜோன்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு இண்டியானா ஜோன்ஸ் படங்கள், ’டெம்பிள் ஆஃப் டூம்’, ‘தி லாஸ்ட் க்ருஸேட்’, ‘கிங்டம் ஆஃப் தி கிரிஸ்டல் ஸ்கல்’ என அடுத்தடுத்த பாகங்களாக வெளியானது. இவை அனைத்திலுமே ஹாரிசன் ஃபோர்டே பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இந்த வரிசையில், 81 வயதாகும் ஹாரிசன் ஃபோர்டு நடிப்பில் கடைசி பாகமாக வெளியாகியிருக்கும் படம் ‘இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி’ (Indiana Jones and the Dial of Destiny).
இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருக்கும் சமயம், நாஜிப் படையினர் இண்டியானா ஜோன்ஸையும் அவரது நண்பரும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக தொல்லியல் பேராசியரான பேசில் ஷா என்பவரையும் கைதிகளாக பிடிக்கின்றனர். இயேசுவை குத்த பயன்படுத்தப்பட்ட குறுவாள் ஒன்றை திருட வந்ததாக இருவர் மீதும் நாஜிக்கள் குற்றம் சுமத்துகின்றனர். ஆனால் அந்த கத்தி போலி என்றும், அதற்கு பதில் ஆர்க்கிமிடிஸ் உருவாக்கிய, காலப் பயணத்தை சாத்தியமாக்கக் கூடிய ஒரு கடிகாரத்தின் பாதியை தான் கண்டெடுத்திருப்பதாகவும், நாஜிப் படையின் முக்கிய அங்கமாக இருக்கும் யூர்கன் வால்லர் என்பவர் தனது உயரதிகாரிகளிடம் கூறுகிறார். அங்கு நடக்கும் சண்டையில், அந்த கடிகாரத்தின் ஒரு பாதியை எடுத்துக் கொண்டு தனது நண்பரையும் காப்பாற்றி அங்கிருந்து தப்பிக்கிறார் இண்டியானா ஜோன்ஸ்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கடிகாரத்தைத் தேடி பேசில் ஷாவின் மகள் இண்டியானா ஜோன்ஸிடம் வருகிறார். இன்னொரு பக்கம் அந்த கடிகாரத்தை அபகரிக்க வால்லரும் அவரது ஆட்களும் ஜோன்ஸை துரத்துகின்றனர். அந்த காலப்பயண கடிகாரம் வில்லனின் கைகளில் கிடைத்ததா? அதன் மூலம் அவர் செயல்படுத்த நினைக்கும் நோக்கம் என்ன என்பதே இப்படத்தின் கதை.
சில கதாபாத்திரங்கள் சில நடிகர்களுக்காகவே உருவாக்கப்பட்டது போலிருக்கும். அவற்றில் வேறு ஒருவரை நம்மால் பொருத்திப் பார்க்கவே முடியாது என்ற அளவுக்கு அதில் நடித்த நடிகர்களுக்கு பார்வையாளர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி விடுவார்கள். உதாரணமாக வொல்வொரின் கதாபாத்திரத்தில் நடித்த ஹ்யூ ஜாக்மேன், அயர்ன்மேனாக நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர் ஆகியோரை சொல்லலாம். அதே போல அன்று முதல் இன்று வரை இண்டியானா ஜோன்ஸ் என்றால் அது ஹாரிசன் ஃபோர்ட் தான். சாகசமும், நகைச்சுவையும் கலந்த அந்த கதாபாத்திரத்துக்கு தன்னுடைய 81 வயதிலும் சிறப்பாக பொருந்திப் போகிறார்.
படத்தின் முதல் அரை மணி நேரம் வரும் காட்சிகளில் இளவயது ஹாரிசன் ஃபோர்டை டீ-ஏஜின் டெக்னாலஜி மூலம் கண்முன் நிறுத்தியிருக்கிறார்கள். ஒரு சிறிய பிசிறு கூட இல்லாத அளவுக்கு உடல் மொழி, முக அசைவுகள் என பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்கள். இந்த 30 நிமிட காட்சிகளைத் தவிர படம் முழுக்க முதியவராகவே ஹாரிசன் ஃபோர்ட் வருகிறார். ஆனால் எந்த இடத்திலும் நம்மால் அவரை ஒரு வயதான நபர் என்று உணர முடியாத அளவுக்கு அதே நக்கல் கலந்த நடிப்பு, ஆக்ஷன் என அசத்துகிறார். பேசில் ஷாவின் மகள் ஹெலெனாவாக வரும் ஃபீப் வாலர் ப்ரிட்ஜ்ஜும், ஃபோர்டும் வரும் காட்சிகளும் இருவரும் பேசிக் கொள்ளும் வசனங்கள் மிக சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. இனிவரும் இண்டியானா ஜோன்ஸ் படங்கள் ஃபோர்டு இல்லாமல் எழுதப்பட்டால் அதில் ஃபீப் வாலர் ப்ரிட்ஜ் மிகச் சிறப்பான தேர்வாக இருப்பார்.
முந்தைய இண்டியான ஜோன்ஸ் படங்களுக்கு சற்றும் குறைவில்லாத அல்லது அதைவிட ஒரு படி மேலாகவே சேஸிங், சாகச காட்சிகள் இதில் உண்டு. குறிப்பாக ஆட்டோ ரிக்ஷா போன்ற ஒரு வாகனத்தில் நடக்கும் சேஸிங் காட்சியை படமாக்கிய விதம் அபாரம். சாலை, கடல், வானம் என படம் முழுக்க சேஸிங் மயம் தான். ஆனால் எந்தவிதத்திலும் அவை ஓவர் டோஸ் ஆகாமல் பார்த்துக் கொண்ட விதத்தில் இயக்குநர் ஜேம்ஸ் மேங்கோல்ட் ஜெயிக்கிறார்.
டைம் ட்ராவல் என்றவுடன் முழுக்க சயின்ஸ் ஃபிக்ஷன் பாணியில் படத்தை கொண்டு செல்லாமல் அதனை ஒரு சிறிய பகுதியாக மட்டும் எடுத்துக் கொண்டு, இண்டியானா ஜோன்ஸ் ரசிகர்கள் எதைத் தேடி இந்த படத்தை பார்க்க வருவார்களோ அதை குறையின்றி கொடுத்துள்ளார் இயக்குநர்.
1981 முதல் ஏறக்குறைய 40 ஆண்டுகளாக உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களை இண்டியானா ஜோன்ஸ் கதாபாத்திரம் மூலம் ஈர்த்து வந்த ஹாரிஸன் ஃபோர்ட் என்ற ஆளுமைக்கு ஒரு மிகச்சிறந்த பிரியாவிடையாக அமைந்துள்ளது ‘இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி’. மூளைக்கு பெரியளவில் வேலை கொடுக்காமல் படம் பார்க்க விரும்பும் சாகச பட ரசிகர்கள் அவசியம் பார்க்கலாம். இப்படம் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.