

'செவன்', 'ஸோடியாக்’, ‘தி கேர்ள் வித் தி டிராகன் டாட்டூ’ போன்ற த்ரில்லர் படங்களின் மூலம் முத்திரை பதித்த டேவிட் ஃபின்ச்சரின் அடுத்த படைப்பாக ஓடிடியில் வெளியாகி இருக்கிறது ‘தி கில்லர்’. தொழில்முறை கொலைகாரன் ஒருவனின் பார்வையில் சொல்லப்படும் கதையில் சுவாரஸ்யம் கிட்டியதா என்பதை பார்க்கலாம்.
கதையின் நாயகன் பணத்துக்காக கொலை செய்யும் ஒரு தொழில்முறை ஹிட்மேன் (மைக்கேல் ஃபாஸ்பெண்டர்). படத்தில் அவருடைய பெயர் எங்கும் குறிப்பிடப்படுவதில்லை. எனவே, படத்தின் தலைப்பான ‘கில்லர்’ என்பதையே அவரது பெயராகக் கொள்ளலாம். பாரிஸில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் கதை தொடங்குகிறது. ‘சலிப்பை சகித்துக் கொள்ளமுடியவில்லை என்றால், இது உங்களுக்கான தொழில் அல்ல’ என்ற நாயகனின் ஆரம்ப மைண்ட்வாய்ஸுக்கு ஏற்றபடி, தன்னுடைய ‘டார்கெட்’டுக்காக மிகப் பொறுமையாக காத்திருக்கிறார் கில்லர். எதிரே இருக்கும் ஒரு ஹோட்டலில் இருக்கும் தன்னுடைய இலக்குக்காக காத்திருக்கும் வேளையில், தன்னுடைய ஸ்னைப்பர் ரைஃபிளை தயார் செய்கிறார், யோகா செய்கிறார், தி ஸ்மித்ஸ் பாடலை கேட்கிறார். அவரது மனநிலை அவரது மைண்ட்வாய்ஸ் வழியாக நமக்கு கேட்கிறது.
ஒருவழியாக தன்னுடைய டார்கெட்டை கொல்லும் நேரம் வரும்போது, விதிவசத்தால் குறிதவறி டார்கெட்டின் அறையில் இருக்கும் பாலியல் தொழிலாளி மீது குண்டு பாய்கிறது. அங்கிருந்து அவசரமாக தப்பிக்கும் கில்லர், நூலிழையில் போலீஸிடமிருந்து தப்பித்து விடுகிறார். அங்கிருந்து தனது காதலியை பார்க்க, டொமினிகன் குடியரசில் இருக்கும் தன்னுடைய ரகசிய வீட்டுக்குச் செல்கிறார். ஆனால், அங்கு அவரது மர்ம நபர்கள் சிலரால் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து பழிவாங்க புறப்படுகிறார் கில்லர். கில்லரின் காதலியை தாக்கியவர்கள் யார்? கில்லர் அவர்களை பழிவாங்கினாரா என்பதே படத்தின் திரைக்கதை.
பிரெஞ்சு எழுத்தாளர் Alexis Nolent-ன் ‘தி கில்லர்’ கிராஃபிக் நாவலை தழுவி இப்படத்தை உருவாக்கியுள்ளார் டேவிட் ஃபின்ச்சர். அவரது முந்தைய படங்களைப் போல சீட்டின் நுனிக்கு கொண்டு வரும் பரபர காட்சிகளோ, முகத்தில் ரத்தம் தெறிக்கும் வன்முறையோ, அதிர்ச்சி மதிப்பீடுகளோ இப்படத்தில் இருக்காது. ஆனால் நாயகனின் மைண்ட்வாய்ஸின் பின்னணியில், சிறு தூறலாக தொடங்கி ஆர்ப்பரித்து கொட்டும் பெருமழையைப் போல நம்மை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கிறது. பழிவாங்கும் கதை, தொழில்முறை கொலைகாரன் என்றதும் படத்தின் நாயகன் ‘ஜான் விக்’, ‘ஹிட் மேன்’ போன்ற படங்களில் வரும் ஹீரோக்கள் போல நூறு பேர் வந்தாலும் அசால்டாக போட்டுத் தள்ளிவிட்டுச் செல்லும் அசகாய சூரன் அல்ல. கொலை செய்வதற்கு முன்பாக மனதை ஒருநிலைப்படுத்த இசை கேட்டு, யோகா செய்பவன். குறி தவறிவிடாமல் இருக்குற கையில் இருக்கும் ஸ்மார்ட்வாட்ச்சில் தொடர்ந்து இதயத் துடிப்பை கண்காணிப்பவன். ஹாலிவுட் ஹிட்மேன்களைப் போல கருப்பு நிறத்தில் ஜம்ப்சூட் போன்ற உடைகளை அணியாமல், நம்மை போல கேசுவல் ஆடைகளையே அணிபவன்.
2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு மைக்கேல் ஃபாஸ்பெண்டர் எந்த படங்களிலும் தலைகாட்டாமல் இருந்துவந்தார். அந்த நான்கு இடைவெளியை இட்டு நிரப்பும் வகையில், ஒட்டுமொத்தமாக படத்தை தூக்கி சுமக்கும் கதாபாத்திரம். படம் முழுக்க ஹீரோவின் பார்வையிலேயே சொல்லப்படுவதால் மற்ற கதாபாத்திரங்களுக்கு வேலையே இல்லை. முழுக்க முழுக்க இது மைக்கேல் ஃபாஸ்பெண்டரின் ஒன் மேன் ஷோ. எந்தவொரு உணர்வையும் வெளிப்படுத்தாத, குரூரமான கில்லர் கதாபாத்திரத்தில் மிக நுணுக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆரம்பத்தில் வரும் பாரிஸ் காட்சியில் மிகமிக மெதுவாக ஆரம்பிக்கும் திரைக்கதை, ஃபின்ச்சரின் அடர்த்தியான கதை சொல்லல் முறையால் மெல்ல மெல்ல நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது. ஆர்ப்பாட்டம் இல்லாமல் நகரும் திரைக்கதையில் வெகுவாக ரசிக்க வைப்பது நாயகனின் மைண்ட்வாய்ஸ் ஆக வரும் வசனங்கள்தான். அவை ஒவ்வொன்றும் பல ஆண்டுகளுக்கு 'Quote’களாக சமூக வலைதளங்களில் வலம் வரும்.
படத்தின் நீளம் ஒரு பெரும் குறை. நீளம் என்பது இங்கு படம் ஓடும் நேரம் அல்ல. படத்தின் நேரம் என்பது இரண்டு மணி நேரம்தான் என்றாலும், இடை இடையே நீள நீளமான காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன. தனது காதலி தாக்கப்பட்டதற்கு காரணமானவர்களை நாயகன் தேடிச் செல்கையில், ஒவ்வொருவருக்கான காட்சியையும் அவ்வளவு விரிவாக காட்டியிருப்பது சலிப்படைய வைக்கிறது. அதேபோல நாயகனின் மைண்ட்வாய்ஸ் ஓரிடத்தில் ’இரக்கம் என்பது பலவீனம். பலவீனம் என்பது பாதிப்பு’ என்று சொல்கிறது. அதன்படியே இரக்கமில்லாம நடக்கவும் செல்கிறது.
இத்தனை உணர்ச்சி இல்லாத ஒரு மனிதனாக காட்டப்படும் அதே நாயகன், தான் காதலிக்கும் பெண்ணுக்காக உலகம் முழுக்க பறந்து சென்று பழிவாங்குவது, அவர் பேசும் வசனங்களுக்கு முரணாக இருக்கிறது. அந்த பாரீஸில் நடக்கும் சம்பவத்தை தவிர்த்து நாயகனுக்கு பெரிய அளவில் இடையூறுகள் எதுவும் ஏற்படுவதில்லை. நினைத்த இடங்களுக்கு நினைத்த நேரத்தில் சென்று கொலைகளை செய்கிறார்.
Erik Messerschmidt-ன் ஒளிப்பதிவு ஒரு சோஷியாபாத்தின் அடர்த்தியான மனநிலையை பார்க்கும் நமக்கும் பிரதிபலிக்கிறது. படத்தில் ஆங்காங்கே நாயகன் கேட்கும் பாடல்களே பயன்படுத்தப்பட்டிருப்பதால், பின்னணி இசைக்கு பெரிய வேலை இல்லை. ஃபின்ச்சரின் முந்தைய படங்களோடு ஒப்பிடுகையில், இதில் விறுவிறுப்பும், பரபரப்பும் குறைவு. என்றாலும் அடர்த்தியான திரைக்கதை மற்றும் ஆழமான வசனங்களுடன் ஒரு ‘ஸ்லோ- பர்னர்’ ஆக நம்மை கட்டிப் போட்டு விடுகிறது ’தி கில்லர்’. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இப்படம் தமிழிலும் காணக் கிடைக்கிறது.