Last Updated : 13 Oct, 2023 05:16 PM

1  

Published : 13 Oct 2023 05:16 PM
Last Updated : 13 Oct 2023 05:16 PM

ஓடிடி திரை அலசல் | OMG 2 - ஆன்மிக நெடி, பாலியல் கல்வியுடன் சுவாரஸ்ய கோர்ட் டிராமா!

நீதிமன்றத்தில் பாலியல் தொழிலாளியிடம் பங்கஜ் திரிபாதி, “உறவுகொள்ளும் நிலைகள் குறித்து உங்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்?” என்று கேட்க, அந்தப் பெண் “பாலியல் தொழில் செய்யும் மூத்த பெண் சொல்லிக் கொடுத்தார்” என்கிறார். “உங்களுக்கு இதில் இன்பம் கிடைக்குமா?” எனக் கேட்க, “ஆண்கள், எங்களிடம் அவர்களின் தேவைக்கு வருகிறார்களே தவிர, எங்களை சந்தோஷப்படுத்த அல்ல. சிலர் வெறியுடன் வருவார்கள். சிலர் துன்புறுத்துவார்கள். அவர்களின் முடியாத நிலை குறித்து எங்கள் தோளில் படுத்து அழும் ஆண்களும் உண்டு. எங்களிடம் வரும் யாருக்கும் பெண்ணுடைய உடலையும் உணர்வையும் பற்றி தெரியாது” என்கிறார் அந்தப் பெண்.

“ஆண்களை மகிழ்வுக்கும் உறவுநிலைகள் குறித்து உங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்களே...அதேபோல ஆண்களுக்கு பெண்களின் உடலையும், மனதையும் புரிந்துகொள்ள சொல்லிக் கொடுத்திருந்தால் இந்த வலியை நீங்கள் அனுபவிக்க வேண்டியதில்லை தானே?” என பங்கஜ் திரிபாதி கேட்டு முடிக்கும்போது நீதிமன்றம் முழுக்க அமைதி சூழ்கிறது. இவ்வளவுதான் மொத்தப் படத்தின் சாரமும்! பங்கஜ் திரிபாதியில் அழுத்தமான நடிப்பில் உருவாகியுள்ள ‘OMG 2’ நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

மத்தியப் பிரதேசம் உஜ்ஜைனில் சிவன் கோயிலுக்கு அருகே கடை வைத்திருக்கும் தீவிர சிவன் பக்தர் காந்தி ஷரன் முத்கல் (பங்கஜ் திரிபாதி). கோயில் ஒதுக்கிய நிலத்தில் தனது மனைவி மற்றும் மகன், மகளுடன் வாழ்ந்து வருகிறார். பதின்ம வயதிலிருக்கும் அவரது மகன் விவேக் பள்ளி கழிப்பறையில் சுய இன்பம் செய்துவிட, அதனை சக மாணவர்கள் வீடியோ எடுத்து பரப்ப, அது சர்சையாகிவிடுகிறது.

பள்ளியிலிருந்து விவேக் நீக்கப்படுகிறார். ஆரம்பத்தில் தயங்கி புரிதலுக்குப் பின், தன் மகனின் பக்கம் நிற்கும் காந்தி ஷரன் பள்ளியில் முறையான பாலியல் கல்வி சொல்லிக் கொடுக்கப்படாத காரணத்தால் மாணவனால் சரி, தவறு குறித்து அறிந்துகொள்ள முடியவில்லை என கூறி நீதிமன்றத்தை நாடுகிறார். மீண்டும் பள்ளியில் சேர்க்க வலியுறுத்துகிறார். இறுதியில் வழக்கு வென்றதா, இல்லையா என்பதுடன் இந்தக் கதையின் வழியே பாலியல் கல்விக்கான முக்கியத்துவம் குறித்து பேசுகிறது ‘OMG 2’.

பொதுவெளியில் பேசத் தயங்கும் விஷயங்களை அடுக்கி அதன் வழியே முரண்களையும், நியாயங்களையும் மோத விட்டு, இறுதியில் தெளிவுக்கு கொண்டு சென்று அதீத ஆன்மிக நெடியுடன் அழுத்தமாக பாலியல் கல்வியின் தேவையை பேசியிருக்கிறார் பாலிவுட் இயக்குநர் அமித்ராய். புதிர்கள் புதிர்போடும் பதின்ம வயதின் தொடக்கத்தில் அடியெடுத்து வைக்கும் மாணவன் பாலியல் கல்வியில்லாததால் குற்றவுணர்ச்சிக்கு ஆளாவதையும், இப்படியானவர்களை பயன்படுத்தி நடக்கும் போலி ‘மருத்துவ’ மோசடிகளையும் காட்சியப்படுத்தியிருந்த விதம் அடுத்து சொல்லபோகும் விஷயங்களுக்கு தூணாக தாங்கி நிற்கிறது.

உண்மையில் ‘குற்ற உணர்ச்சி’ சமூகத்தின் மிகப் பெரிய ஆயுதம். மொத்த உலகமும் அந்தப்பையனின் செயலுக்கு எதிராக இருக்க இருண்மையில் குற்றவுணர்ச்சியுடன் தவிக்கிறார் அந்த மாணவன். இவ்விடயத்தில் தாய், தங்கை, நண்பர்களைத் தாண்டி அவனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியவர் தந்தை என்பதை பங்கஜ் திரிபாதியின் மன மாற்றங்கள் வழியே சொல்கிறது படம். உள்ளம் ஊசலாடும் பதின்மவயது மாணவர்களுடன் ஒவ்வொரு தந்தையும் நண்பராக இருக்க வேண்டியது சுட்டிக்காட்டும் இடங்கள் சிறப்பு. விடலைப் பருவத்தில் தடுமாறும் மாணாக்களை நேர்வழிப்படுத்துவதில் பள்ளிகள் காட்ட வேண்டிய அக்கறையையும், அதில் பாலியல் கல்விக்கு உண்டான பங்கு குறித்து நீதிமன்றத்தில் வைக்கப்படும் விவாதங்களும் - எதிர்விவாதங்களும் படத்தை வேறொரு தளத்துக்கு கொண்டு செல்கின்றன.

கோர்ட் டிராமா காட்சிகளை போராடிக்காமல் சுவாரஸ்யமாக கொண்டு சென்றது அயற்சியை தவிர்க்கிறது. படம் முன்வைக்கும் பாலியல் கல்வி என்பது வெறும் உடலில் ஏற்படும் மாற்றங்களாக சுருங்கிவிடாமல், எதிர்பாலினத்தை உடல், மனதளவில் புரிந்துகொள்வது, அவர்களின் ஒப்புதலின் அவசியம், அந்தரங்க வீடியோக்களை பரப்புவதால் சம்பந்தபட்டவரிடம் ஏற்படும் பாதிப்பு, பாலியல் நோய் விழிப்புணர்வு, முறையான வழிகாட்டுதல், குட் டச், பேட் டச், மாதவிடாய் சுழற்சி, இப்படியான மொத்தத்தையும் மாணவர்களுக்கு பள்ளி சொல்லிக் கொடுக்கும்போது பாலியல் குற்றங்கள் தவிர்க்கப்படுவதோடு புரிதல் மேம்படும் என்பதை படம் நிறுவும் இடம் கவனிக்கவேண்டியது. மேலைநாடுகளில் உடல்சார்ந்த புரிதல்கள் எளிமையாக்கப்பட்டு கற்பிக்கப்படுவதை படம் சுட்டிக்காட்டுகிறது.

பண்டைய இந்திய நூல்களில் தன்பாலின ஈர்ப்பு குறித்து எழுதப்பட்டிருப்பதையும், பாலியல் காட்சிகள் சிற்பங்களாக்கப்பட்டிருப்பது குறித்தும், பள்ளிகளில் பாலியல் கல்வி தொடர்பான புத்தகங்கள் இருந்தும் அதனை சொல்லிக் கொடுக்க ஆசிரியர்கள் தயங்குவதையும் நேர்த்தியாக ஒவ்வொரு நீதிமன்ற விவாதங்களின்போதும் முன்வைப்பது, இந்திய குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுடன் பாலியல் குறித்து பேசுவதில் நீண்ட இடைவெளியை கடைபிடிப்பது என அழுத்தமான கன்டென்ட்டுக்கு பாராட்டு.

அக்‌ஷகுமார் படத்தில் இப்படியான கன்டென்டா என யோசிக்கும்போது, அதில் தவறாமல் குறைகளுடம் இடம்பெற்றுள்ளன. சிவனாக அக்‌ஷய்குமார், 10 நிமிடத்துக்கு ஒருமுறை ஒரு திரிசூலம், ஒரு சிவலிங்கம் அல்லது கடவுளின் உருவப்படம் எதேனும் ஒன்று வந்துகொண்டிருப்பது, சனாதனத்தால் உயர்ந்தோம், குருகுலங்களில் பாலியல் கல்வி சொல்லிக்கொடுக்கப்ட்டது இப்படியான தேவையில்லாத திணிக்கப்பட்ட ஆன்மிக காட்சிகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் இந்தப் படம் பேசும் கருத்தை எளிதில் புறந்தள்ள முடியாது.

அக்‌ஷய்குமார் அடிக்கடி கடவுளாக வந்து செல்கிறார் நடிப்பில் பெரிதாக வேலையில்லை. பங்கஜ் திரிபாதி மகனின் பிரச்சினையை புரிந்துகொண்டு உலகத்தை எதிர்த்து போராடும் தந்தையாக நடிப்பில் ஈர்க்கிறார். நீதிமன்ற காட்சிகளில் எதிர்வாதியான யாமி கௌதம் பங்கஜுடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்கின்றனர். பின்னணி இசையும், ஒளிப்பதிவும் கதையோட்டத்துக்கு பலம். ட்ரெய்லர் வீடியோ:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x