Published : 07 Oct 2023 03:04 PM
Last Updated : 07 Oct 2023 03:04 PM

ஓடிடி திரை அலசல் | Sex Education S4: சில பிரிவுகள்... சில மாற்றங்கள்... ஈர்த்ததா இறுதி சீசன்?

கடந்த 2019-ஆம் ஆண்டு லாரி நன் எழுத்தில் உருவாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற தொடர் ‘செக்ஸ் எஜுகேஷன்’ (Sex Education). பாலுறவு, பாலியல் கல்வி, மனநலம், தனியுரிமை குறித்து கட்டமைத்து வைக்கப்பட்டுள்ள பல கற்பிதங்கள் உடைத்துப் பேசிய இத்தொடரின் நான்காவது மற்றும் இறுதி சீசன் குறித்த பார்வை இது.

மூன்றாவது சீசனின் இறுதியில் தன் மேற்படிப்பை தொடர்வதற்காக அமெரிக்காவுக்கு மேவ் (எம்மா மெக்கே) செல்வதுடன் முடிக்கப்பட்டிருந்தது. இந்த சீசனில் அமெரிக்காவில் இருந்தபடியே செல்போன் வழியில் தன் ஓடிஸ் (அஸா பட்டர்ஃபீல்ட்) உடனான காதலை தொடர்கிறார் மேவ். புகழ்பெற்ற எழுத்தாளரான மாலாய் (டான் லெவி) இடமிருந்து தனக்கான இன்டெர்ன்ஷிப் பெறுவதே மேவ்-வின் நோக்கமாக இருக்கிறது.

மூர்டேல் பள்ளியின் நீச்சல் சாம்பியனான ஜாக்ஸன் (கேடர் வில்லியம் ஸ்டெர்லிங்) தனது உடலில் ஏற்பட்டிருக்கும் புதிய பிரச்சினை குறித்தும், தனது தந்தை யார் என்பது குறித்தும் தீவிர தேடுதலில் இறங்குகிறார். முன்னாள் தலைமை ஆசிரியரின் மகன் ஆடம் (கானர் ஸ்வின்டெல்ஸ்), பள்ளிப் படிப்பை கைவிட முடிவு செய்து, ஒரு குதிரை லாயத்தில் வேலைக்குச் சேர்கிறார். புதிய பணிச்சூழலின் சவால்களுக்கு இடையே தந்தை உடனான உறவை புதுப்பிக்க முயல்கிறார்.

இன்னொரு பக்கம், புதிய கல்லூரியில் புதிய நண்பர்களை தேடும் முயற்சியில் ரூபி, தனது தாயின் வேண்டுகோளுக்கு இணங்க தேவாலயத்தில் ஞானஸ்நானம் பெற தயாராகும் எரிக், முதிய வயதில் குழந்தை பெற்றெடுத்து அதனை பராமரிப்பதில் ஏற்படும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஓடிஸ்-சின் அம்மா ஜீன். பல வருடங்களுக்குப் பிறகு ஜீனுக்கு மற்றொரு சுமையாய் வந்து சேரும் அவரது தங்கை ஜோனா, புதிய கல்லூரியில் பாலியல் ஆலோசனை மையம் ஆரம்பிக்க நினைக்கும் ஓடிஸுக்கு போட்டியாக வரும் ஓ என்ற இளம்பெண் என ஏராளமான கதாபாத்திரங்களை பல்வேறு கோணங்களில் அலசியுள்ளது ‘செக்ஸ் எஜுகேஷன் 4’.

‘செக்ஸ் எஜுகேஷன்’ தொடரின் சிறப்பே பாலியல், மனநலம், பாலின சமத்துவம், தாய்மை, தன்பாலின ஈர்ப்பு, உறவுச் சிக்கல்கள், நட்பு, காதல் போன்ற விஷயங்களை எந்தவித பிரச்சார நெடியோ, வசனத் திணிப்புகளோ எதுவுமின்றி மென்மையாக அதே நேரம் மிகவும் அழுத்தமாக பேசும் அதன் தன்மைதான். அது இந்த சீசனிலும் மிகச் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. அதேபோல இத்தொடர் கதாபாத்திரங்களை கையாளும் விதம் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். நினைவில் வைக்க முடியாத அளவு ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும், அழுத்தமான பின்னணி, ஆழமான வடிவமைப்பு என ஒவ்வொரு கதாபாத்திரமும் பார்வையாளர்கள் மனதில் தைக்கும்படி சிறப்பாக எழுதப்பட்டிருக்கும்.

இந்த சீசனில் ஓடிஸ் - மேவ் இடையில் ஏற்படும் விரிசல், எரிக்கின் புதிய நண்பர்கள், ஓடிஸ் உடனான பழைய காதலை மறக்காத ரூபி, ஓ - ரூபி இடையில் இருக்கும் முன்கதை, ஆடம் - மைக்கேல் க்ராஃப் உணர்வுப் போராட்டம், ஜீன் - ஜோனா இடையிலான சிக்கல் ஆகியவை பிரதானமாக பேசப்பட்டுள்ளது. இது தொடர்பான காட்சிகள் வழக்கம்போலவே உணர்வுபூர்வமாக எழுதப்பட்டுள்ளன.

குறிப்பாக, முதல் சீசனில் யாருக்கும் அடங்காத இளைஞனாக வந்த ஆடம் கதாபாத்திரம், சிறுகச் சிறுக மாற்றம் அடைந்து இந்த சீசனில் முழுமையாக ஒரு பக்குவமான மனிதனாக மாறியதை எழுதிய விதம் சிறப்பு. ஆடம் மட்டுமின்றி அவரது தந்தை மைக்கேல் கிராஃப் கதாபாத்திரம் அடையும் மாற்றமும், மகனுக்கு தன் மீது இருக்கும் கோபத்தை மாற்ற அவர் எடுக்கும் சிரத்தைகளும் அப்ளாஸ் ரகம். அதேபோல தனது தங்கையை ஆரம்பத்தில் வெறுக்கும் ஜீன் மெல்ல மெல்ல அவரை நேசிக்க தொடங்கும்வது, ஓ - ரூபி இருவருக்குமான பின்னணி ஆகிய காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

முந்தைய சீசன்களில் பாலியல் தொடர்பான விஷயங்கள் அதிகளவில் பேசப்பட்ட நிலையில், இதில் அதனை வெகுவாக குறைத்து உறவுகளுக்கு இடையிலான உணர்வுரீதியான சிக்கல்கள் அதிகளவில் அலசப்பட்டுள்ளது. இதுபோன்ற பாசிட்டிவ் அம்சங்களை இந்த சீசனில் குறைகளும் அநேகம் உண்டு.

குறிப்பாக, முந்தைய சீசன்களின் வெற்றிக்கு உதவிய பல முக்கியக் கதாபாத்திரங்கள் இந்த சீசனில் கழட்டிவிடப்பட்டுள்ளன. லில்லி, ஓலா, ஒலிவியா, அன்வர், ரஹீம் போன்ற கதாபாத்திரங்கள் எந்தவொரு முடிவுமின்றி அந்தரத்தில் விடப்பட்டு அழுத்தமில்லாத பல புதிய கதாபாத்திரங்கள் இந்த சீசனில் சேர்க்கப்பட்டது ஈர்க்கவில்லை. அதேபோல முந்தைய சீசன்களில் இருந்த நகைச்சுவை அம்சமும் இதில் பெருமளவில் மிஸ்ஸிங். ‘செக்ஸ் எஜுகேஷன்’ தொடரின் பலமே அதன் மெல்லிய நகைச்சுவை வசனங்கள்தான். அவை இதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே இருப்பது ஏமாற்றம். மாறாக, மேவ் அம்மாவின் மரணம், மகப்பேறுக்கு பிறகான ஜீனின் மன அழுத்தம், ஜாக்சனின் உடல்நல பிரச்சினை உள்ளிட்ட விஷயங்கள் மிக சீரியசாக பேசப்பட்டுள்ளன.

இந்த சீசனின் மற்றொரு முக்கிய பிரச்சினையாக தோன்றுவது, அதன் வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகள். முதல் சீசனிலிருந்தே அதிகம் பில்டப் செய்யப்பட்டு, ரசிகர்களை அதிகம் காக்கவைத்து, ஏங்கவைத்த ஓடிஸ் - ரூபி ஜோடியை பிரித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் காட்சிகளை வைத்திருப்பது எடுபடவில்லை. உதாரணமாக, ஓடிஸ் - மேவ் இடையே போனில் வரும் பிரச்சினைகள், ஒரு முக்கியமான தருணத்தில் ஓடிஸ் குற்ற உணர்ச்சியில் ரூபி குறித்த ஒரு விஷயத்தை சொல்வது போன்றவை அப்பட்டமாக வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகள். முந்தைய சீசனில் ஓடிஸ் - ரூபி தங்கள் காதலை சொல்லி இணையும் காட்சி மிகவும் உணர்வுபூர்வமாக எழுதப்பட்டு வரவேற்பை பெற்ற நிலையில், இயக்குநர்களே அதனை மண்ணைப் போட்டு மூடியது போல இருக்கிறது.

தொடரின் நடுவே வரும் சில எபிசோடுகளும் மிகவும் தொய்வாக எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக, மேவ் அம்மா மரணத்தைத் தொடர்ந்து வரும் இறுதிச் சடங்கு நிகழ்வுக்கு ஒரு முழு எபிசோடையே ஒதுக்கியிருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் இறுதி எபிசோடுகளை முடிக்க வேண்டுமே என்று அவசரமாக முடித்தது போன்ற உணர்வு எழுந்ததை தடுக்க முடியவில்லை. மூன்றாவது, சீசனின் முடிவே ஒரு ஃபைனல் சீசன் போன்று எழுதப்பட்டிருந்தது. ஆனால், உண்மையான இறுதி சீசனான இது முடியும்போது வழக்கமான நிறைவை அளிக்கத் தவறியுள்ளது என்பதே உண்மை.

வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகளையும், இடையில் ஏற்படும் தொய்வையும் தவிர்த்து இருந்தால், நான்கு ஆண்டுகளாக உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களை உணர்வுபூர்வமாக கவர்ந்து வந்த ‘செக்ஸ் எஜுகேஷன்’ தொடருக்கு இந்த இறுதி அத்தியாயம் ஒரு மிகச் சிறந்த பிரியாவிடையாக இருந்திருக்கும். ‘செக்ஸ் எஜுகேஷன்’ தொடர் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணக்கிடைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x