Published : 25 Sep 2023 02:57 PM
Last Updated : 25 Sep 2023 02:57 PM

ஓடிடி திரை அலசல் | Thottappan - மாயமான தந்தைக்கான காத்திருப்பும், காலம் தரும் அனுபவங்களும்!

எப்போதாவது தூக்கம் வராமல் செல்போனைத் துரத்திக் கொண்டிருக்கும்போது, அதிரடி சூப்பர் சீன், சூப்பர் ஹிட் காட்சி, மெர்சலான மாஸ் சீன் என்ற பெயரில் சில திரைப்படக் காட்சிகள் காணக் கிடைக்கும். உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால், "Now You See Me 2" (2016) திரைப்படத்தில் வரும் அந்த சீட்டுக்கட்டின் கார்டு ஒன்றை 4 பேர் சோதனையின்போது மாறிமாறி மறைக்கும் காட்சி.

இதுபோன்ற காட்சிகளை பகிரும்போது, அந்த வீடியோவின் மேல் சம்பந்தப்பட்ட காட்சி இடம்பெற்ற படத்தின் பெயர் இருக்காது. உடனடியாக கமெண்ட்ஸில் சென்று தேட வேண்டும். சில நேரங்களில் படத்தின் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கிடைக்கும். சில நேரங்களில் கிடைக்காது. அப்படி தேடிக் கிடைத்து பார்த்த படங்கள் பிரமிப்பை ஏற்படுத்தும், இத்தனை நாட்களாக இந்தப் படத்தைப் பார்க்காமல் விட்டுவிட்டோமோ என்ற குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தும். அப்படியான தேடலில் பார்த்த திரைப்படம்தான், 2019-ல் வெளியான ‘தொட்டப்பன்’ (Thottappan) மலையாளத் திரைப்படம்.

கேரளாவின் கொச்சி கடற்கரையை சுற்றியுள்ள தீவு கிராமம் ஒன்றில் சாதாரண வாழ்க்கையை வாழும் எளிய மனிதர்களின் வாழ்க்கை யதார்த்தங்களை எடுத்துக்கொண்டு மயக்கும் வகையில் இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ஈரநிலத்து மண்ணின் சாயலையும் மணத்தையும் சுவாசித்து வாழ்கின்றன. எளிதில் ஈர்க்கக்கூடிய சுற்றுபுறச் சூழல், கிராமத்து எளிய மனிதர்களின் தினசரி வாழ்க்கை, பழக்கவழக்கங்கள், காதல், அரசியல் என பலவற்றையும் பேசியிருக்கிறது இந்தத் திரைப்படம்.

தொட்டப்பன் என்பதற்கு ‘காட்ஃபாதர்’ (Godfather) என்று பொருள் கூறப்படுகிறது. அதாவது கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் ஞானஸ்ஞானம் என்ற சடங்கு வழக்கத்தில் இருந்து வருகிறது. குழந்தையின் பெற்றோர் இல்லாமல், அக்குழந்தைக்கு ஞானப் பெற்றோர் என்பவர்கள் இருப்பர். ஞானத் தகப்பனாக வரும் நபரின் அறிவும் திறனும் தங்கள் குழந்தைக்கும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஞானப் பெற்றோர் தேர்வில் கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர் மிகுந்த கவனமாக இருப்பர். அந்த வகையில், இந்தத் திரைப்படம், ஒரு ஞானத் தகப்பன் பற்றிய கதைதான்.

ஆனால், இது கிறிஸ்தவ மதம் சார்ந்த திரைப்படம் அல்ல. இது ஒரு சஸ்பென்ஸ் டிராமா. இத்தாக் (விநாயகன்) மற்றும் ஜோனப்பன் (திலீஷ் போத்தன்) இருவரும் இணைபிரியாத நண்பர்கள். இருவரும் திருட்டு மற்றும் கொள்ளையடித்து வாழ்க்கையை நடத்துகிறார்கள். ஜோனப்பன் தனது மனைவியின் விருப்பத்துக்கு எதிராக ஞானஸ்நானத்தின் போது அவரது மகள் சாராவுக்கு ( பிரியம்வதா கிருஷ்ணன்) காட்பாதர் (உள்ளூர் மொழியில் 'தலத்தொட்டப்பன்') பாத்திரத்தை வழங்குகிறார்.

அவர்களின் மகிழ்ச்சியான இந்த வாழ்க்கை ஓட்டத்துக்கு திடீரென முற்றுப்புள்ளி வைத்ததுபோல் திருட்டு பொருள் ஒன்றுக்கு பேரம் பேசச்செல்லும் ஜோனப்பன் சந்தேகத்துக்கிடமான முறையில் காணாமல் போகிறார். அதன்பிறகு, தொட்டப்பன் இத்தாக்கின் அரவணைப்பில் வளர்கிறாள் சாரா. சாராவை கவனித்துக்கொள்வதும் அவளுக்கு ஆதரவளிப்பதுமே இத்தாக்கின் வாழ்க்கை பணியாகிறது. சாராவுடன் தொட்டப்பனின் பிணைப்பு மற்றும் ஜோனப்பனின் வருகைக்கான காத்திருப்புகளுக்கு இடையே இவர்களது வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதுதான் இந்த தொட்டப்பன் திரைப்படம்.

நடிப்பைப் பொறுத்த வரையில் படத்தைப் பார்க்கும் பார்வையாளர்கள் மத்தியில் தனித்து நிற்பவர் விநாயகன் என்பதில் சந்தேகமில்லை. தொட்டப்பன் என்னவாக இருக்க வேண்டுமோ அதற்கு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ எதையும் அவர் செய்யவில்லை. அந்த நடிகனின் உடல்மொழி வசனம் இல்லாத காட்சிகளில் எல்லாம் பேசுகிறது. அதேபோல் ப்ரியம்வதா அடிவானத்தில் வளரும் ஒரு நட்சத்திரம் என்பதை யாருமே மறுக்க முடியாது. இப்படத்தில் அவரது தோற்றம், கதாபாத்திரத்தைப் பற்றிய புரிதல் மற்றும் ஒரு அனுபவமிக்க நடிகையின் கச்சிதமான நுணுக்கங்களால் பார்வையாளர்களை ஆட்கொள்கிறார். இந்த 'தொட்டப்பன்' படத்தில்தான் ப்ரியம்வதா அறிமுகம் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். ரோஷன் மேத்யூ, திலீஷ் போத்தன், சுனில் சுகதா, மனோஜ் கே ஜெயன், லால், என அனைவரும் தங்கள் பங்களிப்பை துல்லியமாக செய்துள்ளனர்.

தொட்டப்பன் என்ற பெயரில் ஃபிரான்சிஸ் நோரன்ஹா எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டே இத்திரைப்படம், எடுக்கப்பட்டுள்ளது. ஃபிரான்சிஸ் நோரன்ஹா மற்றும் பி.எஸ்.ரஃபீக் எழுதி, ஷானவாஸ் கே.பவாகுட்டி இயக்கத்தில் வந்துள்ள திரைப்படம் தொட்டப்பன். சுரேஷ் ராஜனின் ஒளிப்பதிவு, தொட்டப்பன் வாழும் அந்த தீவு கிராமத்தின் வாழ்க்கையையும், அம்மக்களின் வாழ்வியல் சாயலையும் உள்வாங்கிக் கொண்டு, ஒவ்வொரு காட்சிகளுக்கும் ஒரு மாயாஜால ஒளியை பூசுகிறது.

திரைப்படத்துக்கான ஒளிப்பதிவு என்பதை தாண்டி, காட்சிகளில் இடம்பெறும் மனிதர்களின் சுய உணர்வுகளை இயற்கையாக வெளிப்படுத்துகிறது. லீலா எல் கிரிஷ் குட்டனின் பின்ணி இசையும் பாடல்களும் அருமை. படத்தின் தொடக்கப் பாடல் அடிபொளி ரகம். படத்தின் இரண்டாம் பாதி சற்றே தடுமாறினாலும், காத்திரமான இறுதிக்காட்சி அதை சரிசெய்து விடுகிறது.

இவர்கள் மட்டுமின்றி, தொட்டப்பனின் உலகத்தில் வாழும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் மகத்தான பங்களிப்பை வழங்கும் எண்ணற்ற பெயரற்ற கதாபாத்திரங்களும் இத்திரைப்படத்தில் உள்ளன. படத்தில் வரும் அந்த நாயும் பூனையும் கூட இந்த படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களிடம் நெருங்க வைத்து விடுகிறார் இயக்குநர்.

இப்படியான சிறந்த திரைப்பட கலையை வடிவமைக்கும் அனைத்தையும் இத்திரைப்படம் கொண்டுள்ளது. தொட்டப்பனின் அந்த தீவு கிராமத்தின் இரவுகள் பல ரகசியங்களை மறைத்துக் கொண்டு நீண்டு செல்லும் ஒத்தையடி பாதையில் இளம்பெண் சாரா அழுகையுடன் நடந்துசெல்ல, நமக்குள் ஏற்படும் கனத்த மவுனத்துடன் இந்தப் படம் முடிகிறது. நெட்பிஃளிக்ஸ் ஓடிடி தளத்தில் இத்திரைப்படம் காணக் கிடைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x