

ஜப்பானிய எழுத்தாளரான ஹெய்கோ ஹிகாஷினோ கடந்த 2005-ஆம் ஆண்டு எழுதி உலகம் முழுவதும் வரவேற்பை பெற்ற நாவல் ‘தி டிவோஷன் ஆஃப் சஸ்பெக்ட் எக்ஸ்’. இதை தழுவி சுஜோய் கோஷ் இயக்கத்தில் ஓடிடியில் வெளியாகியுள்ளது ‘ஜானே ஜான்’ (Jaane Jaan) இந்தி திரைப்படம்.
மேற்கு வங்கத்தின் இந்திய - நேபாள எல்லையில் அமைந்துள்ள கலிம்பாங் என்ற மலை நகரத்தில் தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார் மாயா டிசோஸா (கரீனா கபூர்). 14 ஆண்டுகளுக்கு முன்பு பார் டான்சராக இருந்த மாயா தன் கொடுமைக்கார போலீஸ் கணவனிடமிருந்து தப்பித்து வந்து, தற்போது ஒரு சிறிய கஃபே நடத்தி வருபவர். அந்த ஊரில் உள்ள ஒரு பள்ளியில் கணக்கு வாத்தியாராக இருப்பவர் நரேன் (ஜெய்தீப் அஹ்லாவத்). ஊரே ‘டீச்சர்’ என்று மதிக்கும் அவருக்கு மாயாவின் மீது ஈர்ப்பு. மாயாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் அவர், மாயாவின் அன்றாட நிகழ்வுகளை தொடர்ந்து கவனித்து வருகிறார். அமைதியாக செல்லும் மாயாவின் வாழ்க்கையில் 14 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பிரிந்து வந்த கணவர் அஜித் (சவுரம் சச்தேவா) தலையிடுகிறார்.
கணவனால் தன் மகளுக்கு ஆபத்து வருவதை அறிந்த மாயா, கோபத்தில் எதிர்பாராமல் கணவனை கொன்றுவிடுகிறார். செய்வதறியாமல் தவித்து நிற்கும் மாயாவுக்கு அவரது மகளுக்கும் உதவ தானாய் முன்வருகிறார் டீச்சர் நரேன். கொலையை மறைக்க சில பல சம்பவங்களை இருவரும் செய்கின்றனர். இந்தக் கொலையை விசாரிக்க மும்பையிலிருந்து கலிம்பாங் நகருக்கு வரும் போலீஸ் அதிகாரி கரண் (விஜய் வர்மா) கொலை பற்றி தீவிரமாக விசாரிக்கிறார். கொலையாளியை கரண் கண்டுபிடித்தாரா என்பதே ‘ஜானே ஜான்’ படத்தின் திரைக்கதை.
ஜப்பானிலிருந்து வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்பை பெற்ற ஒரு நாவலை இந்திய ரசிகர்களுக்கு ஏற்ப மாற்றி, அதே நேரம் மூல நாவலின் கருவும் சிதைந்துவிடாமல் கவனமாக கையாண்டுள்ளார் இயக்குநர் சுஜாய் கோஷ். ஏறக்குறைய ஜீத்து ஜோசப்பின் ‘த்ரிஷ்யம்’ பாணி திரைக்கதைதான். ஆனால், எந்த இடத்தில் அப்படத்தின் சாயல் வந்துவிடக் கூடாது என்பது ஜாக்கிரதையாக செயல்பட்டிருக்கிறார் இயக்குநர். மெயின் கதைக்குள் நுழைய ஒரு சில நொடிகள் மட்டுமே எடுத்துக் கொள்கிறது ‘ஜானே ஜான்’. அதன்பிறகு ஜெட் வேகத்தில் பறக்கிறது திரைக்கதை. படத்தின் ஓரிரு ‘லைட்’ ஆன தருணங்கள் தவிர்த்து மொத்தப் படமும் ஒரு ‘டார்க்’ ஆன பதைபதைக்க வைக்கும் தீவிரத்தன்மையுடனே செல்கிறது.
கரீனா கபூரின் ஓடிடி அறிமுகம் என்றே இப்படம் விளம்பரத்தப்பட்டது. அதற்கான நியாயத்தையும் அவர் செய்திருக்கிறார். மகளை காப்பாற்ற ஆக்ரோஷம் கொண்டு கணவனை கொலை செய்யும்போதும், செய்த கொலையை மறைக்க அல்லாடும்போதும் தேர்ந்த நடிகையாக மிளிர்கிறார். ஆனால் உண்மையில் இது ஜெய்தீப் அஹ்லாவத்தின் படம். தனிமையில் காலத்தை கழிக்கும் நடுத்தர வயது கணக்கு வாத்தியாராக வாழ்ந்துள்ளார் ஜெய்தீப். ’பாதாள் லோக்’, ‘ஆன் ஆக்ஷன் ஹீரோ’ ஆகியவற்றில் தனி முத்திரை பதித்திருந்தாலும் இதனை தனது வாழ்நாள் நடிப்பாக அவர் சொல்லிக் கொள்ளலாம். முகத்தில் எப்போதும் ஒரு கலவரத்துடன் வலம் வரும் வெளிப்படுத்தும் சின்னச் சின்ன உணர்வுகள் கூட அபாரம்.
கொலையை விசாரிக்க வரும் கூலான போலீஸ் அதிகாரியாக விஜய் வர்மா வரும் காட்சிகள் இறுக்கமாக செல்லும் படத்தை இலகுவாக்குகிறது. கரோக்கி பாரில் கரீனாவும் விஜய் வர்மாவும் இணைந்து ‘ஜானே ஜான்’ பாடல் பாடும் காட்சி ஓர் உதாரணம். இந்த மூவரை சுற்றியே கதை நகர்வதால் மற்றவர்களுக்கு பெரிதாக வேலையில்லை.
பார்ப்பவர்களை படம் முழுக்க ஒருவித திகில் மனநிலையிலேயே வைத்திருக்கிறது சச்சின் - ஜிகரின் பின்னணி இசை. அவிக் முகோபாத்யாயாவின் கேமரா கலிம்பாங் நகரத்தின் பனிமூட்டம் சூழ்ந்த மலைகளையும், இருள் நிறைந்த தெருக்களையும் கச்சிதமாக காட்சிப்படுத்தியிருக்கிறது.
முதல் பாதியில் நேர்த்தியாகவும் விறுவிறுப்பாக சென்ற திரைக்கதை, இரண்டாம் பாதியில் ஒரே இடத்தில் சுழன்று கொண்டிருப்பது போன்ற உணர்வு எழுகிறது. ஜெய்தீப்புக்கும், விஜய் வர்மாவுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள் ஒரு கட்டத்துக்கு மேல் நெளிய வைக்கின்றன. கரீனா மீதான ஜெய்தீப்பின் ஈர்ப்புக்கு நியாயம் சேர்க்கும் வகையிலான காட்சிகள் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம். இதனால் கரீனாவுக்கு உதவியதற்கு க்ளைமாக்ஸில் ஜெய்தீப் சொல்லும் காரணமும் ஏற்கும்படி இல்லை.
அதேபோல வழக்கில் எதையும் கண்டுபிடிக்க முடியாமல் ஊருக்குத் திரும்ப இருக்கும் நேரத்தில் கொலை குறித்து முக்கிய துப்பு, விஜய் வர்மாவுக்கு கிடைக்கும் காட்சியும் வலிந்து திணிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது.
படத்தின் மிகப் பெரிய சொதப்பல் க்ளைமாக்ஸ். நாவலில் படிக்கும்போது வேண்டுமானால் இப்படி ஒரு க்ளைமாக்ஸ் எடுப்பட்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால், திரையில் அது எந்தவிதத்திலும் கைகொடுக்கவில்லை. இதனால் க்ளைமாக்ஸில் அவிழ்க்கப்படும் முடிச்சுகள் பார்க்கும் நமக்கு எந்தவித அதிர்ச்சி மதிப்பீடுகளையும் ஏற்படுத்தவில்லை. ‘த்ரிஷ்யம்’ பாணியில் திரைக்கதையை பில்டப் செய்து கடைசியில் க்ளைமாக்ஸில் கோட்டை விட்டிருக்கிறார்.
ஒரு திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் சிறப்பாக அமைந்தாலே அது பாதி வெற்றி என்று சொல்லப்படுவதுண்டு. திராபையான திரைக்கதைகள் கொண்ட பெரும்பாலான படங்கள் ‘எஸ்கேப்’ ஆவது அந்த வகையில்தான். ஆனால், ஆரம்பம் முதல் திரைக்கதையை விறுவிறுப்பாக எழுதிவிட்டு க்ளைமாக்ஸில் சொதப்பியதால் முழு நிறைவு தராவிட்டாலும், ஒட்டுமொத்தமாக ஓரளவு திருப்தி தரவல்லதுதான் இந்த ‘ஜானே ஜான்’.