

கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி, பாகிஸ்தானில் பெரும் எதிர்ப்புகளை சந்தித்து, தடை செய்யப்பட்டு, பின்னர் சில பல வெட்டுக்களுடன் வெளியான படம் ‘ஜாய்லேண்ட்’ (Joyland) பாகிஸ்தானில் இருந்து சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதின் பரிந்துரைப் பட்டியலுக்குள் நுழைந்த முதல் படமும் இதுவே. உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது முபி மற்றும் அமேசான் ப்ரைம் வீடியோ (ரென்ட்டல்) ஓடிடி தளங்களில் வெளியாகியிருக்கிறது. இப்படத்தைப் பற்றிய ஒரு விரைவுப் பார்வை.
லாகூரில் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சுற்றி கதை சுழல்கிறது. குடும்பத்தின் தலைவரான 70 வயது அப்பாஜி (சல்மான் பிர்ஸாடா)-க்கு இரண்டு மகன்கள். இருவருமே திருமணமானவர்கள். மூத்த மகனுக்கு நான்கு பெண் குழந்தைகள். இளைய மகன் ஹைதருக்கு (அலி ஜுனேஜோ) குழந்தை இல்லை என்ற மனக்குறை குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே இருக்கிறது.
ஹைதரின் மனைவி மும்தாஜ் (ரஸ்தி ஃபரூக்) ஒரு பியூட்டி பார்லரில் வேலை பார்க்கிறார். குடும்பத்தில் அவருடைய வருமானமும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. ஹைதருக்கு வேலையில்லை. ஒருகட்டத்தில் முஜ்ரா நடனக் குழுவில் அவருக்கு டான்சர் வேலை கிடைக்கிறது. இதனால், மும்தாஜின் வேலை குடும்பத்தினரால் பறிக்கப்படுகிறது. நடனக் குழுவின் தலைவியான திருநங்கை பிபா (அலினா கான்) உடன் ஹைதர் காதலில் வீழ்கிறார். இது அந்த குடும்பத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே ‘ஜாய்லேண்ட்’ படத்தின் கதை.
மேம்போக்காக பார்த்தால் ஒரு திருநங்கை மீதான ஓர் ஆணின் காதல் கதையாக தோன்றலாம். ஆனால், இப்படம் அதுமட்டுமே அல்ல. ஆண் குழந்தையை எதிர்பார்க்கும் குடும்பத்துக்காக நான்கு பெண் குழந்தைகளை பெற்றெடுத்த நுச்சியின் கதை. கணவன் இறந்த பிறகு தனது பழைய (ஒருதலை) காதலனுடன் வாழ முடிவெடுக்கும் மூதாட்டி ஃபய்யாஸின் கதை. சுயமரியாதைக்காக போராடும் பிபாவின் கதை.
இவ்வாறு பல உணர்வுபூர்வ கிளைக்கதைகளை கொண்டிருக்கிறது ‘ஜாய்லேண்ட்’. மிக முக்கியமாக இது மும்தாஜின் கதை. ‘திருமணத்துக்கு முன்பு மும்தாஜிடம் நீ வேலைக்கு செல்வதற்கு நான் தடையாக இருக்கமாட்டேன்’ என்று உறுதியளிக்கிறான் ஹைதர். ஆனால், தனக்கு வேலை கிடைக்கும் சமயத்தில் குடும்பத்துக்கு எதிராக பேசமுடியாமல் ஊமையாகிறான். நடனக் குழுவில் பிபாவின் காதலில் ஹைதர் மூழ்கி திளைக்கும்போது, கர்ப்பமாகும் மும்தாஜ் மன அழுத்தத்துக்கும், உளைச்சலுக்கும் ஆளாகிறாள்.
பிபாவாக நடித்திருக்கும் திருநங்கை அலினா கான் மிகச் சிறப்பான நடிப்பு. எப்போது தன்னைச் சுற்றி ஒரு வளையத்தைப் போட்டுக் கொண்டு, காண்போரிடமெல்லாம் எரிந்து விழும் கதாபாத்திரம். ஹைதரிடம் காதலில் விழும்போது ஒட்டுமொத்தமாக நடிப்பில் வெறொரு பரிணாமம் எடுக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக மும்தாஜாக வரும் ரஸ்தி ஃபரூக், சற்றே ‘டாம்கேர்ள்’ தன்மை கொண்ட கதாபாத்திரத்துடன் ஈர்க்கிறார்.
இயக்குநர் சயீம் சாதிக்-க்கு இது முதல் படம் என்று சொல்லவே முடியாத அளவுக்கு தனது நேர்த்தியான காட்சியமைப்புகள் மூலம் முத்திரைப் பதிக்கிறார். தனது பைக்கில் பிபாவின் மிகப் பெரிய உருவ பொம்மையை ஹைதர் சுமந்து செல்லும் காட்சி, ரயிலில் பிபாவை அவமதிக்கும் பெண்ணுக்கு ஹைதர் ஒரு வார்த்தை கூட பேசாமலே பதிலடி கொடுப்பது என ஒவ்வொரு காட்சியின் வியக்கவைக்கின்றன. பாகிஸ்தானிலிருந்து இப்படி ஒரு படம் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய ஒரு முயற்சி.
மனித மனங்களின் சிக்கல்களையும், குடும்ப உறவுகளின் உணர்வுப் போராட்டத்தையும் பேசும் ‘ஜாய்லேண்ட்’ உங்களை சிரிக்கவைக்கலாம், அழவைக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக படம் முடிந்தபின்னரும் உங்களை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கலாம்.
Joyland (2022) | Pakistani | MUBI