Published : 04 Jul 2023 04:36 PM
Last Updated : 04 Jul 2023 04:36 PM

ஓடிடி திரை அலசல் | Afwaah - வதந்‘தீ’யின் அபாயம் காட்டும் அழுத்தமான படைப்பு!

வாக்கு வங்கி அரசியலுக்காக முன்பின் தெரியாதவர்களான விளம்பரத் துறை ஆளுமை ரஹப்பையும், அரசியல் வாரிசான நிவியையும் இணைத்து சமூக வலைதளத்தில் பரப்பப்படும் ஒரு வதந்தி எப்படி கலவரமாக மாறுகிறது என்பதுதான் ‘ஆஃப்வா’ (Afwaah) இந்தி திரைப்படத்தின் ஒன்லைன்.

ஷிவா பாஜ்பாய், நிசர்க் மேத்தாவுடன் இணைந்து எழுதி சுதிர் மிஸ்ரா இயக்கியிருக்கும் திரைப்படம். 'Afwaah' என்பதற்கு வதந்தி என்பது பொருள். துணிச்சலான இந்தப் படத்தின் தலைப்புக்காகவே இயக்குநரை தனியாகப் பாராட்டலாம். சமகால அரசியலில் புரையோடிக் கிடக்கும் பிரச்சினையை எடுத்துக்கொண்டு, அதை சமரசமின்றி தனது நேர்த்தியான திரைமொழியால் கடத்தும் இடங்களில் எல்லாம் சுதிர் மிஸ்ரா வியப்பைத் தந்திருக்கிறார். பான் இந்தியா திரைப்படங்கள் என்ற பெயரில் தனிநபர் துதிபாடுதலை விட்டு விலகி சமூகப் பிரச்சினையை மையப்படுத்தி அரசியல்வாதிகளின் சுயநல பதவி வெறி முகமூடிகளை கிழித்தெறிந்து அம்பலப்படுத்துகிறது இத்திரைப்படம்.

குறிப்பாக, எளிதாக்கப்பட்ட செல்போன், இணையம், சமூக வலைதளங்கள் முதலான பேராயுதத் தாக்குதலை அரசியல்வாதிகள் எப்படி தங்களுக்கான உடைமையாக்கி வெற்றி கொள்கின்றனர் என்பதை உரக்கப் பேசுகிறது இத்திரைப்படம். கூட்டணி பேரத்துக்காகவும், வாக்கு வங்கி அரசியலுக்காகவும், உயிருள்ள மனித உடலை கறி தனியாகவும், எலும்பு தனியாகவும் வெட்டி இறைச்சிக் கடைகளின் முன்பு தொங்கவிடுவதை போல் தொங்கவிட்டிருக்கிறது படத்தின் திரைமொழி.

உண்மைக்கு சற்றும் பொருந்தாத பொய்களைப் பரப்பி ஊரையே பற்றி எரியச் செய்யும் சக்தி படைத்த சமூக ஊடக அரசியல் அவலத்தை கண்முன் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர். காட்டுத்தீ போல பரவும் அந்தப் பொய்யை அப்பாவி மக்கள் எப்படி நம்ப வைக்கப்படுகின்றனர். சமூக ஊடகத்தில் பரவுவது உண்மையா, பொய்யா என சிறிதும் யோசிக்க விடாமல் அவர்கள் எவ்வாறு தூண்டிவிடப்படுகின்றனர் என்பதை இத்திரைப்படம் பேசியிருக்கிறது. இந்த வதந்திகளும், பொய்களும் ஒரு பாவமும் அறியாத அப்பாவி தனி மனிதர்களுக்கு எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது குறித்தும் விரிவாக பேசுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் பதவி வெறி பிடித்த இளம் அரசியல்வாதி விக்ரம் சிங் (சுமித் வியாஸ்) ஊர்வலமாக பரப்புரை மேற்கொள்கிறார். இந்த ஊர்வலத்தின்போது அவருடைய வலதுகரமான சந்தன் என்ற அடியாள் விக்ரம் சிங் மீது கல்வீசி தாக்குகிறார். இவையெல்லாமே விக்ரம் சிங்கின் ஏற்பாடுதான். இந்தச் சம்பவம் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகிறது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதி கலவர பூமியாகிறது. விக்ரம் சிங்குக்கும் பிரபல அரசியல்வாதியான கியான் சிங்கின் மகள் நிவிக்கும் (புமி பெட்னேகர்) திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. பதவிக்காக மனிதர்களை பலிகொள்ளும் அரசியலை விரும்பாத நிவிக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை.

விக்ரம் சிங்கை திருமணம் செய்வதைவிட வீட்டைவிட்டு வெளியேறுவது மேல் என முடிவு செய்து அங்கிருந்து வெளியேறுகிறார். அந்த சமயத்தில் மனிதாபிமானத்தின் அடிப்படையில் உதவுகிறார் ரஹப் (நவாசுதின் சித்திக்). ரஹப், நிவியை இணைத்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்படுகிறது. அது என்ன மாதிரியான வதந்தி? இந்த வதந்தியால் ஏற்படும் பிரச்சினைகள் என்ன? ரஹப் நிவி இந்தப் பிரச்சினையை எவ்வாறு எதிர்கொள்கின்றனர்? காவல் துறை இந்தப் பிரச்சினைகளை எப்படி கையாள்கிறது? இந்த வதந்தியால் பலி ஆடுகளாக்கப்படுவது யார்? - இதுவே இப்படத்தின் திரைக்கதை.

‘Serious men’ படத்துக்குப் பிறகு, நவாசுதின் சித்திக்கின் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் 'Afwaah'. தனது இயல்பான நடிப்பால் காட்சிகளின் வலியை எளிதாகக் கடத்தியிருக்கிறார். பல காட்சிகளில் அவரது உடல்மொழிகளின் மூலம் கதை சொல்லியிருக்கிறார். புமி பெட்னேகரும் சளைக்கவில்லை. விக்ரம் சிங் அவரது ஆட்களிடம் சண்டைபோடும் இடங்கள் தொடங்கி இறுதிக் காட்சி வரை தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி கவனிக்க வைத்திருக்கிறார்.

பதவி வெறிக்காக எதையும் செய்யத் துணியும் கதாப்பாத்திரத்தில் வரும் சுமித் வியாஸும், காவல் அதிகாரிகளாக வரும் ஷரீப் ஹாஸ்மியும், சுமித் கவுலும் சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளனர். மாரிஸோ விடலின் ஒளிப்பதிவில் ராஜஸ்தான் மண்ணின் தொன்மை பளிச்சிடுகிறது. இசையமைப்பாளர் கேரல் ஆன்டோனின் இசையில் பாடல்கள் கலங்கடிக்கிறது. கதைக்களத்துக்கான பின்னணி இசைகோர்ப்பும் நிறைவைத் தருகிறது.

படத்தில் வரும் திருப்பக் காட்சிகள் பார்வையாளர்களை எங்கேஜிங்காக வைத்திருக்கிறது. இருந்தாலும், இடைவேளைக்குப் பிறகு படம் கொஞ்சம் இழுவையாக இருப்பது போன்ற உணர்வைத் தருகிறது. அதேபோல், க்ளைமாக்ஸில் லாஜிக் இடிக்கும் சில சம்பவங்களும் உண்டு.

அரசியல்வாதிகளின் பதவி ஆதிக்க ஆதாயத்துக்கு துணைபோகும் சமூக ஊடக வைரல் பதிவுகளின் பின்னணியை மிக நுட்பமாக அணுகியிருக்கும் விதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படைப்பாக நிற்கிறது. கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் ஜூன் 30-ம் தேதி முதல் நெட்பிஃளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x