

சப்-ஜெயிலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள வெப் தொடர், ‘காக்கி சர்கஸ்’. இதில் முனீஷ்காந்த், சுபாஷ் செல்வம், ராஜேஷ் மாதவன், கவுதமி நாயர், வின்சு ரேச், சாவித்திரி, அம்ருதா, அப்துல் லீ, மருது பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அமீன் பாரிஃப் எழுதி இயக்கியுள்ள இந்த வெப் தொடரை ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் நிதி சாகர் தயாரித்துள்ளார். எதிர்பாராத சுவாரஸ்யங்களும், பரபரப்பும், வித்தியாசமான நகைச்சுவையும் கலந்த வெப் தொடரான இது, தமிழ் மற்றும் மலையாள ஜீ 5 தளங்களில் ஏப்.10 முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.
இத்தொடர் பற்றி முனீஷ்காந்த் கூறும்போது, “நான் இதுவரை நடித்ததில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அனுபவமாக இத்தொடர் இருந்தது. இது கணிக்க முடியாத, வேகமாக நகரும், அதே நேரத்தில் நகைச்சுவையுடனும், நிஜத் தன்மையுடனும் நிறைந்த கதாபாத்திரங்களைக் கொண்ட வெப் தொடர். நம் மண்ணின் வாசனையுடன் கூடிய கதை, மிகவும் வேடிக்கையானதும் கூட” என்றார்.