

உத்தராகண்டில் சார்தாம் எனப்படும் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு முக்கிய இந்து வழிபாட்டுத் தலங்களை இணைக்கும் வகையில் பணிகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, பிரம்மகால் - யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில், சில்க்யாரா மற்றும் தண்டல்கான் இடையே மலையைக் குடைந்து சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்றது. இப்பணியின்போது ஏற்பட்ட விபத்தில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
கடந்த 2023-ம், ஆண்டு நடந்த இந்த விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 நாட்களுக்குப் பிறகு பல்வேறு முயற்சிகளுக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டனர். இச்சம்பவத்தை மையமாகக் கொண்டு ‘டன்னல் மேன்’ என்ற வெப் தொடர் உருவாகிறது. யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ‘த ரயில்வே மேன்’ வெப் தொடரை இயக்கிய சிவ் ராவைல் ஷோ ரன்னராக செயல்படுகிறார். அம்பிகா பண்டிட், மனன் ராவத் இயக்குகின்றனர்.
நெட் பிளிக்ஸ் தளத்துக்காக உருவாகும் இதில் மாதவன், சந்தீப் கிஷன், மகேஷ் மஞ்சரேக்கர் உள்பட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் இத்தொடரில் நடிகை தபு இணைந்துள்ளார். அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் மூலம் அவர் முதன்முறையாக வெப் தொடரில் நடிக்கிறார்.