

வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாகி ரசிகர்கள் கவனம் ஈர்த்த படம், பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பி ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்த படம் என கலவையான ரசனைகளுடன் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் பட்டியல் இது.
ஹபீபி: மீரா கதிரவன் இயக்கத்தில் ஒரு மாறுபட்ட கதைக் களத்தில் வெளியானப் படம் ‘ஹபீபி’. இயக்குநர் கஸ்தூரி ராஜா முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தில், அவருடன் மாளவிகா மனோஜ், தனாஸ்ரீ சுதாகரன், அருள்குமார், அனுஸ்ரேயா ராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருந்திருந்தனர்.
இப்படம் ஜூன் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் செப்டம்பர் 25-ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஹாய்: விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாரா–கவின் நடிப்பில் வெளியான படம் ‘ஹாய்’. இந்தப் படத்தில் இவர்களுடன், பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
வெளியீட்டுத் தேதி மாறிக்கொண்டே இருந்த இந்தப் படம் ஆகஸ்ட் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது செப்டம்பர் 25-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
போட்டோகிராபர்: அஷ்ரஃப் அலி இயக்கி நடித்திருந்த சர்வைவல் த்ரில்லர் படம் ‘போட்டோகிராபர்’. இப்படத்தில் அவருடன் ஜனனி சமாதானம், கருணாகரன், தேவி மகேஷ், ஆடுகளம் நரேன், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் தற்போது, பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் செப்டம்பர் 25-ம் தேதி வெளியாக இருக்கிறது.
டாக்ஸிக்: கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ் நடிப்பில் ஆகஸ்ட் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘டாக்ஸிக்’. இதில், யஷுடன் கியாரா அத்வானி, நயன்தாரா, தாரா சுதாரியா, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்தப் படம் ரசிகர்களுக்கு ஏமாற்றமே அளித்தது. இந்நிலையில் தற்போது ‘டாக்ஸிக்’ படம் ஜீ5 ஓடிடி தளத்தில் செப்டம்பர் 25-ம் தேதி வெளியாக இருக்கிறது.
ரம்பா ஊர்வசி மேனகா: சந்திர மோகன் சிந்தாங் இயக்கத்தில் உருவான தெலுங்கு படம் ‘ரம்பா மேனகா ஊர்வசி’. இப்படத்தில் அல்லரி நரேஷ், சுர்பி, ரஷி சிங், விஷ்ணு ப்ரிய பிமினேனி, பிரிஷா சிங், நரேஷ் விஜய கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த நகைச்சுவைத் திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
அகதா: எம்.எஸ்.ராஜு இயக்கத்தில் வெளியான மர்மத் திரைப்படம் ‘அகதா’. இதில், காமட்சி பாஸ்கரலா, ஷ்ரவன் ரெட்டி, உல்கா குப்தா, ஜோவிகா உள்ளிட்டடோர் நடித்திருந்தனர். ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் செப்டம்பர் 25-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மேங்கோ பச்சா: விவேகா இயக்கத்தில் வெளியான கன்னடப் படம் ‘மேங்கோ பச்சா’. சஞ்சித் சஞ்சீவ் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம் மைசூரில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கிறது. இந்தப் படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகிறது.