

ஆழமான நடிப்பைத் தருவதில் சிறந்து விளங்கும் திரைக் கலைஞர் பசுபதி. கடந்த மாதம் வெளியாகி வெற்றி பெற்ற ‘பைசன்’ படத்தில் துருவ் விக்ரமின் கிராமத்து அப்பாவாக வாழ்ந்திருந்தார்.
தற்போது அவரது நடிப்பில் சோனி லிவ் ஓடிடி தளத்தின் அசல் தொடராக டிசம்பர் 5-ஆம் தேதி வெளியாகிறது ‘குற்றம் புரிந்தவன்: தி கில்டி ஒன்’.
செல்வமணி இயக்கத்தில் ஹாப்பி யூனிகான் - ஆக்புல்ஸ் இணைந்து தயாரித்துள்ள இத்தொடர் குறித்து இயக்குநரிடம் கேட்டபோது: “மெர்சி என்கிற 14 வயதுச் சிறுமி காணாமல் போகிறாள். அவள் காணாமல் போனதில் அவளுடைய பக்கத்து வீட்டுக்காரர் மீது காவல் துறையின் சந்தேகக் கண் விழுகிறது.
அந்தச் சிறுமிக்கு என்ன ஆனது, அவள் உயிருடன் இருக்கிறாளா என்பதை நோக்கித் தொடர் விரியும். பாதிக்கப்படும் சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரராக பாஸ்கர் என்கிற முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பசுபதி.
மெர்சியின் அம்மா எஸ்தராக தேசிய விருது பெற்ற லட்சுமி பிரியா நடித்திருக்கிறார். சிறுமி காணாமல் போன வழக்கை விசாரிக்கும் காவல் அதிகாரியாக விதார்த் வருகிறார்.
நம்பிக்கைக்கும் சட்டத்துக்கும் நடுவே சிக்கிக்கொள்ளும் ஒரு நடுத்தர வர்க்க மனிதனின் குற்றவுணர்ச்சியின் வரைபடம்தான் இந்தத் தொடர்.
ஒருவர் தன்னுடைய சொந்தப் பிரச்சினைக்காக எந்த எல்லைக்குச் செல்வார். உண்மையில் இது அவர் ஆடும் ஆட்டமா அல்லது அவரை வைத்துப் பிறர் ஆடும் ஆட்டமா என்பதைப் பதற்றத்துடன் காணலாம்” என்கிறார்.