

பிரதீப் ஆண்டனி, ஸ்மேஹா மணிமேகலை, சனம் ஷெட்டி, மகிழ் திருமேனி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்தொடர், ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஆபிஸ்’. அப்துல் கபீஸ் இயக்கியுள்ள இதை ஜெகன் பாஸ்கரன் தயாரித்துள்ளார்.
கார்ப்பரேட் அலுவலகப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த தொடர், இளம் தம்பதியான அறிவு மற்றும் ஐஸ்வர்யாவைச் சுற்றி நகர்கிறது. இருவரும் ஒரே ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். அந்த நிறுவனத்தின் கடுமையான விதிமுறையின்படி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாகப் பணிபுரியக் கூடாது.
இதனால் தங்களது வேலையையும் பொருளாதார நிலையையும் பாதுகாக்க, திருமண உறவை மறைத்து, அந்நியர்களைப் போல நடிக்க இருவரும் முடிவு செய்கின்றனர்.
இதற்காக அவர்கள் புதுப்புது பொய்களைக் கூற வேண்டிய நிலை ஏற்படுகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பதை மையப்படுத்தி இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது. நகைச்சுவைக்கு மத்தியில், இன்றைய சூழலில் பணிபுரியும் இளம் தம்பதிகளின் வாழ்க்கைப் போராட்டங்கள், பொருளாதார நெருக்கடிகள், உறவுச் சிக்கல்கள் மற்றும் கார்ப்பரேட் வாழ்க்கையின் அன்றாட யதார்த்தங்களை இந்தத் தொடர் பேசுகிறது.
இது ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் நவ.18-ம் தேதி முதல் வெளியாகிறது. ஒவ்வொரு புதன்கிழமையும் 4 புதிய எபிசோடுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.