‘கட்டா குஸ்தி 2’ ஓடிடியில் ஜூலை 31-ல் ரிலீஸ்

‘கட்டா குஸ்தி 2’ ஓடிடியில் ஜூலை 31-ல் ரிலீஸ்
Updated on
1 min read

‘கட்டா குஸ்தி 2’ படம் ஜூலை 31-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கட்டா குஸ்தி’ படத்தின் இரண்டாவது பாகமாக ஜூலை 3-ம் தேதி திரையரங்குகளில் ‘கட்டா குஸ்தி 2’ படம் வெளியானது. முதல் பாகத்தை போலவே இரண்டாவது பாகமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. எனினும், பல்வேறு விமர்சனங்களையும் எதிர்கொண்டது.

இந்த நிலையில் ‘கட்டா குஸ்தி 2’ நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 31-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் காணக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது பாகத்தில் மனைவி குஸ்தி போட்டியில் ஜெயிப்பதற்காக வீட்டுப் பொறுப்புகளை கவனித்துக் கொள்ளும் கணவன், சந்தர்ப்ப சூழ்நிலையால் மனைவி போட்டியில் இருந்து விலக காரணமாகிறான். மீண்டும் தன் மனைவியை எப்படி வெற்றி பெற வைக்கிறான் என்பதை குடும்ப நகைச்சுவை கலாட்டாவாக சொல்லியிருக்கிறார்கள்.

எனினும், ஒரு தடகள வீராங்கனை தாயான பிறகும் தன் கனவைத் தொடர்வது, ஓர் ஆண் வீட்டைப் பார்த்துக்கொள்ளும் தந்தையாக இருப்பது, தேர்தலில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டின் முக்கியத்துவம் என சில முற்போக்கான விஷயங்கள் ஆங்காங்கே தூவப்பட்டிருந்தாலும், அவை யாவும் படத்தின் உள்ளே இருக்கும் ஆணாதிக்க முகமூடியை மறைப்பதற்காக செய்யப்பட்ட போலி முயற்சிகளோ என்று தோன்றாமல் இல்லை என்ற விமர்சனப் பார்வையும் எழுந்தது.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல், விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், முனீஸ்காந்த், காளி வெங்கட், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். செல்ல அய்யாவு இயக்கியுள்ளார்.

‘கட்டா குஸ்தி 2’ ஓடிடியில் ஜூலை 31-ல் ரிலீஸ்
ஆக.7-ல் சசிகு​மாரின் ‘வதந்தி சீசன் 2’ வெப் சீரிஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in