

அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமி முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள வெப் தொடர் ‘லவ்’. இன்றைய டிஜிட்டல் உலகில் காதல், டேட்டிங், உறவுகள் மற்றும் உணர்வுகள் எப்படி மாறியிருக்கின்றன என்பதை நகைச்சுவையுடனும் உணர்வுப் பூர்வமாகவும் பேசும் இத்தொடரை, பாலாஜி மோகன் இயக்கியுள்ளார்.
அக்.2-ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கும் இந்த வெப் தொடருக்கு சவுந்தர்யா ரஜினிகாந்த், ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நெட்பிளிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மோனிகா ஸ்ரீவாஸ்தவ் உள்பட படக்குழுவினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இயக்குநர் பாலாஜி மோகன் பேசும்போது, “காதல் என்பது உலகில் யாராலும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத விஷயம். அதனால்தான் நான் மீண்டும் மீண்டும் காதலைப் பற்றி கதைகள் சொல்லி வருகிறேன்.
ஆண்கள், பெண்களைப் பற்றியும், பெண்கள், ஆண்களைப் பற்றியும் தெரிந்துகொள்வது என்பது பல தலைமுறைகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு பயணம். இன்னும் பல ஆண்டுகள் சென்றாலும் காதலை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்பதுதான் அதன் சிறப்பு.
எனக்கும் காதலைப் பற்றி முழுமையாகத் தெரியாது. மற்ற அனைவரையும் போலவே நானும் அதை புரிந்துகொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அதனால்தான் காதல் கதைகளைத் தொடர்ந்து திரையில் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது.
அதே நேரத்தில், திரைப்படங்களில் வரும் காதல் கதைகளைப் பார்த்து நிஜ வாழ்க்கையிலும் அதேபோன்ற எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.
முடிந்தவரை என்னுடைய கதைகளை நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமாகவும், அதே நேரத்தில் பார்வையாளர்கள் தங்களுடன் தொடர்புப்படுத்திக் கொள்ள முடிகிற வகையிலும் உருவாக்க முயல்கிறேன்.
‘லவ்’ தொடரையும் அப்படித்தான் உருவாக்கியுள்ளோம். காதலைப் பற்றிய சில கனவுகளையும், நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமான உணர்வுகளையும் இணைத்து இந்தக் கதையைச் சொல்ல முயற்சித்துள்ளோம்” என்றார்.