

ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன் உள்பட பலர் நடித்து வெற்றிபெற்ற படம், ‘துரந்தர்’. ஆதித்யா தார் இயக்கிய இப்படத்தின் அடுத்த பாகம், ‘துரந்தர்: த ரிவெஞ்ச்’ என்ற பெயரில் கடந்த மார்ச் மாதம் வெளியானது. இந்தியில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது.
இப்படமும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. 2-ம் பாகமான ‘துரந்தர்: த ரிவெஞ்ச்’, இந்தியாவில் மட்டும் நிகர வசூலாக ஆயிரம் கோடி ரூபாயைக் கடந்த முதல் பாலிவுட் படம் என்ற மைல்கல்லை எட்டியது. இரண்டு பாகங்களும் இணைந்து உலகளவில் ரூ.3,100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
ஓடிடி தளத்திலும் இப்படம் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், நெட்பிளிக்ஸ் வெளியிட்ட தரவுகளின்படி, இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரை, ‘துரந்தர்’ படம் 3.7 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும், நெட்பிளிக்ஸின் ஆங்கிலம் அல்லாத திரைப்படங்களுக்கான பட்டியலில், 22 நாடுகளில் இப்படம் முதலிடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளது. இதை அதன் இணை தலைமை நிர்வாக அதிகாரி ரெட் சரண்டோஸ் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நெட்பிளிக்ஸில், இந்தியத் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கான சர்வதேச அளவிலான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறிய அவர், 2024-ம் ஆண்டு முதல், ஒவ்வொரு வாரமும் உலகளாவிய டாப் 10 பட்டியலில் குறைந்தபட்சம் ஓர் இந்தியத் திரைப்படம் அல்லது தொடர் இடம்பெற்று வருகிறது என்றும் சொன்னார். இந்திய சினிமா தற்போது சர்வதேச பொழுதுபோக்கு சந்தையில் வலுவான இடத்தைப் பிடித்திருப்பதற்கு ‘துரந்தர்’ வெற்றி முக்கியமான உதாரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.