

லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் ‘டிசி’ திரைப்படம் செப்டம்பர் 4-ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்த தகவலை சன் நெக்ஸ்ட் அதன் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ‘வெள்ளித்திரையில் இருந்து உங்கள் வீட்டுத் திரைக்கு. ப்ளாக் பஸ்டர் திரைப்படமான ‘டிசி’ செப்டம்பர் 4-ம் தேதி சன் நெக்ஸ்ட் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் உங்கள் வீட்டுக்கு வருகிறது’ என்று தெரிவித்துள்ளது.
‘டிசி’ படம் ஆகஸ்ட் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்துக்கு, அவரின் பின்னணி இசை மிகப் பெரிய பலமாக அமைந்திருப்பதாக பாராட்டப்பட்டது. அதேபோல் லோகேஷ் கனகராஜின் நடிப்பும், வாமிகா கபியின் சந்திரா கதாபாத்திரமும் வெகுவான பாராட்டுக்களைப் பெற்றது.