ஓடிடி வெளியீட்டில் வரவேற்பை பெறும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’

ஓடிடி வெளியீட்டில் வரவேற்பை பெறும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’
Updated on: 
1 min read

சென்னை: பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான 'பத்தா' திரைப்படம், தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி டிஜிட்டல் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி - பாலாஜி தரணிதரன் கூட்டணியில் மூன்றாவது படமாக இப்படம் உருவாகியுள்ளது.

70களின் காலக்கட்டத்தின் மெட்ராஸ் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்த கதைக்களத்தில், ஊரையே அச்சுறுத்தும் 'பத்தா' என்ற ரவுடி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் எதிர்பாராதவிதமாகப் பள்ளிக் கழிப்பறைக்குள் பூட்டப்படும் அவர், அங்கிருந்து வெளியேற முடியாமல் பசியினாலும் தனிமையினாலும் தவிக்கும் சூழ்நிலை உருவாகிறது. ஒரு தாதாவின் அதிகாரமும் பயமும் செல்லுபடியாகாத அந்த சூழலில் ஏற்படும் சுவாரசியமான திருப்பங்களும், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான நிகழ்வுகளுமே படத்தின் மையக்கரு.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் லிஜோமோல் ஜோஸ், மாஸ்டர் சாய் பிரித்விராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், சினே1 ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்க, செல்வகுமார் எஸ்.கே.ஒளிப்பதிவையும், ஆர்.கலைவாணன் படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்ற இப்படம் சுமாரான வசூலையே பெற்றது. தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது. திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடியிலும் விஜய் சேதுபதியின் நடிப்பு மற்றும் படத்தின் தனித்துவமான கதைக்களத்துக்கு வட மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஓடிடி வெளியீட்டில் வரவேற்பை பெறும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’
பத்தா: விமர்சனம் - இயல்பாய் ஈர்த்து மனிதம் பேசும் ஓர் அரிய படைப்பு!

X