

நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கிய படங்களை முன்வைத்து இயக்குநர் வசந்தபாலன் காட்டமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
2026-ம் ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸ் கைப்பற்றியுள்ள தமிழ் படங்களின் ஓடிடி உரிமை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் வசந்தபாலன். அதில், “சிறு தயாரிப்பாளர்களுக்கு, புதிய, மத்திம நாயகர்களுக்கு, புதிய அலை இயக்குநர்களுக்கும், திரையரங்குகளும் கிடைப்பதில்லை. ஓடிடி இணையங்களும் இல்லை. தொலைக்காட்சி சேனல்களும் இல்லை. படத்தை எடுத்து வைத்து கொண்டு கோடம்பாக்கத்தின் வீதிகளில் குறுக்கும் நெடுக்குமாக நடக்க வேண்டியிருக்கிறது.
ஓட ஓட சினிமாவை விட்டு விரட்டுகிறார்கள், முட்டி மோதி மண்டை உடைந்து தெருவில் கிடக்க வேண்டும்.அது தான் அவர்களின் எதிர்பார்ப்பு. பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், பெரிய கதாநாயகர்களுக்கு மட்டுமே எல்லா கதவுகளும் திறக்குமென்றால் இங்கே ஜனநாயகம் எங்கேயிருக்கிறது.?
நல்ல திரைப்படம், அழகான கவித்துவமான கதை, நல்ல திரைக்கதை என்பதெல்லாம் பேச்சேயில்லை. பெரு நிறுவனப்படங்களை பெரிய நடிகர்களின் திரைப்படங்களை மட்டுமே வாங்குவோம் மற்றவர்களெல்லாம் வெளியேறுங்கள் என்கிறது நெட்ஃப்ளிக்ஸ் போன்ற இணையங்களும், தொலைக்காட்சி சேனல்களும், திரையரங்குகளும்.
சொந்த நாட்டிலேயே அகதியாக நிற்பது போன்ற ஒரு நிலை. நான்கு வருடங்களாக படம் இயக்க முடியாத நிலை. இயக்கினாலும் எங்கே விற்பது? யாரிடம் சென்று கையேந்தி நிற்பது? யார் வாங்குவார்கள்? எங்கு திரையரங்கு கிடைக்கும் என்றொரு பரிதாபமான நிலை எனக்கு மட்டுமில்லை. தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் தொண்ணூறு சதவீதத்தினரின் நிலைமை இதுவே.
நெட்ஃப்ளிக்ஸ் எல்லா ஆண்டுகளும் புதிய படங்களை, சிறிய படங்களை, நல்ல இயக்குநர்களின் திரைப்படங்களைப் புறக்கணிக்கிறது. போன ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் வாங்கிய திரைப்படங்களின் தரங்களை நீங்களே இணையத்தில் தேடிப்பாருங்கள். ஒரு சிறு தயாரிப்பாளராக தேசிய விருது பெற்ற இயக்குநராக நெட்ஃப்ளிக்ஸுக்கு என் ஆழ்ந்த கண்டனங்கள்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன்.