

மலையாள சினிமா உலகின் முதல் வெப் சீரிஸான ‘கேராள க்ரைம் பைல்ஸ்’ இணையத் தொடர் விரைவில் வெளியாகும் என டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் அறிவித்துள்ளது.
சினிமா பரிணாம வளர்ச்சியடைந்து வந்த காலத்தில் திரைப்படத்திலிருந்து இணையத் தொடருக்கு அதனை கடத்திச் சென்றவர்கள் மேற்கத்திய திரைப்பட இயக்குநர்கள். அவை பல்கிப்பெருகி பல ஆண்டுகளுக்குப் பிறகு அதனை இந்தியாவில் இந்தி திரையுலகம் கையிலெடுத்தது. இணையத் தொடர் கலாசாரத்தை தமிழ் சினிமா கையிலெடுக்க நீண்ட காலம் பிடித்தது. ஆரம்பத்தில் க்ரைம் த்ரில்லர் பாணியில் சிக்கியிருந்த தமிழ் சினிமா ‘அயலி’ போன்ற முற்போக்கு களத்தை தற்போது தொட்டிருக்கிறது.
தெலுங்கிலும் அவ்வப்போது வெப் சீரிஸ்கள் வெளியாகி வருகின்றன. இந்த வெப்சீரிஸ் கலாசாரத்தில் தன்னை நுழைத்துக்கொள்ளாத திரையுலகமாக மலையாள திரையுலகம் இருந்ததுவந்தது. நல்ல சினிமாக்களை கொடுக்க முனைந்த அம்மண்ணின் இயக்குநர்கள் இணையத் தொடர்களில் பெரிதும் கவனம் செலுத்தாமல் இருந்தனர்.
இந்நிலையில், மலையாள சினிமாவின் முதல் இணைய தொடருக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. க்ரைம் - த்ரில்லரை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்தத் தொடருக்கு ‘கேரளா க்ரைம் ஃபைல்ஸ்’ என பெயரிடபட்டுள்ளது. அஜூ வர்கீஸ், லால் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தத் தொடரை ‘ஜூன்’, ‘மதுரம்’ படங்களை இயக்கிய அஹமது கபீர் இயக்குகிறார். இந்தத் தொடர் விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.