

சென்னை: தொழிலதிபரும், நடிகருமான அருள் சரவணனின் 'தி லெஜண்ட்' திரைப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் மார்ச் 3 முதல் ஸ்ட்ரீம் ஆகும் என்ற அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் மூலம் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார் அவர்.
விளம்பர படங்களில் நடித்த அருள் சரவணன், பின்னர் வெள்ளித்திரையில் ஹீரோவானார். அவர் நடிப்பில் உருவான 'தி லெஜண்ட்' திரைப்படம் சுமார் 600 திரை அரங்குகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியாகி இருந்தது. படம் வெளியாகி பல நாட்கள் ஆன போதும் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்த சூழலில் இந்தப் படம் மார்ச் 3 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளத்தில் இந்தப் படம் ஸ்ட்ரீம் ஆகும் என தெரிகிறது.
இந்தப் படத்தை ஜே.டி மற்றும் ஜெரி இயக்கி இருந்தனர். அருள் சரவணன், கீதிகா திவாரி, ஊர்வசி ரவுடேலா, விவேக், சுமன், நாசர், பிரபு, விஜயகுமார், லதா, தம்பி ராமையா ஆகியோர் இதில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த அறிவிப்பை அருள் சரவணன் ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார். அவரிடம் ரசிகர்கள் சிலர் அடுத்தப்பட அறிவிப்பு குறித்த அப்டேட் எப்போது என பதில் ட்வீட் போட்டு கேட்பதை பார்க்க முடிகிறது.