

மம்மூட்டி நடித்துள்ள ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படம் பிப்ரவரி 23-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு இந்தியா சார்பில் அதிகாரபூர்வமாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட ‘ஜல்லிக்கட்டு’ மலையாளம் படம் மூலம் கவனம் பெற்றவர் லிஜோ ஜோஸ். இவரது இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் கடந்த மாதம் ஜனவரி 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’. ரம்யா பாண்டியன், அசோகன், பூ ராமு, ராஜேஷ் ஷர்மா உள்ளிட்ட பலர் நடிந்திருந்த இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
மம்மூட்டியும், லிஜோ ஜோஸும் இணைந்து தயாரித்த இப்படம் கேரள திரைப்பட விழாவில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பரவலான ரசிகர்களாலும் படம் பாராட்டப்பட்டது. இந்நிலையில், படம் வரும் பிப்ரவரி 23-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.