

ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ (Elephant Whisperers) என்ற ஆவணப்படம் இடம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ஆஸ்கர் இறுதிச் சுற்று வரை சென்றிருக்கும் நிலையில் அதன் சுவாரஸ்ய பின்னணி குறித்து பார்ப்போம்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள ஆசியாவின் பெரிய வளர்ப்பு யானைகள் முகாமான தெப்பக்காட்டில், காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதி யானை பராமரிப்பாளர்களாக பணிபுரிகின்றனர். 2017-ம் ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சரகம் அய்யூர் பகுதியில் தாயிடமிருந்து பிரிந்த ஆண் குட்டி யானை காயத்துடன் சுற்றித்திரிந்தது. இந்த யானையை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு வந்து, ரகு என பெயர் வைத்து பொம்மனும், பெள்ளியும் பராமரித்து வருகின்றனர். மேலும், 2018-ம் ஆண்டு தாயைபிரிந்த மற்றொரு யானை பொம்மியையும் பராமரித்து வருகின்றனர்.
தாயைப் பிரிந்து தவித்த இரண்டு யானை குட்டிகளை பராமரிக்கும் பழங்குடியினத் தம்பதியின் கதையை ஆவணப்படமாக்கி இருக்கிறார் உதகையைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ். இது தொடர்பாக பாகன் பொம்மன் கூறும்போது, "எனக்கு 54 வயசு ஆகுது. 40 வருஷத்துக்கு மேல யானை அனுபவம் இருக்கு. குட்டி யானைங்க மேல ரொம்ப இஷ்டம். தாயைப் பிரிஞ்ச குட்டியை எப்படியாவது தாயோட சேர்க்கத்தான் போராடுவோம். தாய் யானைகிட்ட குட்டிய கொண்டுபோனால், குட்டி நம்மகூடயே திரும்ப ஓடி வரும். அதைப் பார்த்த மத்த யானைங்க நம்மள விரட்டும். பெரும் போராட்டமா இருக்கும். ஒருவழியா தாயோடசேர்த்துட்டா, அதுல கிடைக்கிற சந்தோஷத்துக்கு அளவே இருக்காது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை பக்கத்துல கரன்ட் ஷாக் அடிச்சு இறந்துபோன யானையோட குட்டி, தாயைப் பிரிஞ்சு தவிக்குதுன்னு என்னை கூட்டிட்டு போனாங்க. ஊருக்குள்ள வந்த குட்டியை நாய்ங்க கடிச்சதால, உடல் முழுவதும் காயம். அந்த மூணு மாசக்குட்டி பிழைக்கறதே கஷ்டம்னு சொல்லிட்டாங்க. எனக்கு மனசே கேக்கல. அங்கேயே15 நாள் தங்கி, குழந்தை மாதிரி கூடவே இருந்து பார்த்து, கொஞ்சம் சரியானதும் முதுமலைக்கு கொண்டு வந்துட்டோம்.
குட்டி பிழைக்காதுன்னு பராமரிக்க யாருமே முன்வரலை. சரி, நாமளே பார்த்துக்கலாம்னு முடிவெடுத்தேன். அந்த குட்டிக்குரகு என பேர் வச்சு, நானும் மனைவி பெள்ளியும் கராலில் (காட்டு யானைகளை அடைக்கப்படும் மரக்கூண்டு) தங்கி 24 மணி நேரமும் பார்த்துக்க ஆரம்பிச்சோம். காயமெல்லாம் சரியாகி புல் சாப்பிட ஆரம்பிச்ச பிறகு எந்தத் தொந்தரவும் இல்லை. நாங்களும் குழந்தை மாதிரிதான் ரகுவை பார்த்துக்கிட்டோம்.
அந்த சமயத்திலதான் ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி வந்தாங்க. எங்களைப் படம் எடுக்க பெரிய அதிகாரிங்ககிட்ட அனுமதி வாங்கியிருக்கறதா சொன்னாங்க. நாங்களும் சரின்னு ஒத்துக்கிட்டோம். இதுல நடிப்பு எதுவுமே கிடையாது. நாங்க வழக்கமா செய்யற வேலைகள எல்லாமே ரெண்டு வருஷமா வீடியோ எடுத்தாங்க" என்றார். ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்த ஆவணப்படம் விருது பெற வேண்டும் என பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.