Published : 19 Jul 2022 03:36 PM
Last Updated : 19 Jul 2022 03:36 PM

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் சிபிராஜின் ‘வட்டம்’ - என்ன ஸ்பெஷல்?

நடிகர் சிபிராஜ் நடித்துள்ள 'வட்டம்' திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கத்தில் நடிகர் சிபிராஜ் நடித்துள்ள படம் 'வட்டம்'. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபு ஆகியோர் தயாரித்துள்ளனர்.

படத்தில் ஆன்ட்ரியா, மஞ்சிமா மோகன், அதுல்யா ரவி, சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் குறித்து நடிகர் சிபிராஜ் கூறுகையில், ''வட்டம் எனது கேரியரில் மிக முக்கியமான படம், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸுடன், இது எனது முதல் படம். வட்டம் படத்தை சூது கவ்வும் புகழ் ஸ்ரீனிவாஸ் கவிநயம் எழுதி, மதுபானக்கடை புகழ் கமலக்கண்ணன் இயக்கியிருப்பது எனக்கு மிக மகிழ்ச்சியை தந்தது. இந்த இரண்டு படங்களின் புத்துணர்ச்சியையும் நகைச்சுவையையும் ரசித்ததால் என்னை இந்த படைப்பு மேலும் உற்சாகப்படுத்தியது.

எளிய இளைஞனாக நடிப்பதிலிருந்து மாறி, சாதாரண மனிதனாக நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசையை வட்டம் பூர்த்தி செய்துள்ளது. பெரிய லட்சியங்கள் ஏதுமில்லாமல் வாழக்கையை அதன் போக்கில் அந்த தருணத்தை அனுபவித்து வாழும் மனிதனாக நடித்துள்ளேன், நான் இப்படத்தில் கதாநாயகன் என்றாலும், மற்ற கதாபாத்திரங்களுக்கு, குறிப்பாக ஆண்ட்ரியா ஜெர்மியா மற்றும் அதுல்யா ரவி நடித்த கதாபாத்திரங்களுக்கும் படத்தில் சம அளவில் முக்கியத்துவம் உள்ளது. இப்படம் உங்களுக்கு ஒரு புதுமையான அனுபவம் தரும்'' என்றார்.

இயக்குனர் கமலகண்ணன் கூறுகையில், ''நம் வாழ்க்கை சக்கரத்தில் நம்பிக்கை ஒளி வந்து வந்து போகும். அதேபோல, நமது அன்றாட வாழ்க்கையும் அதே வழக்கமான முறையில்தான் இயங்குகிறது. நாம் ஒரே பாதையில் பயணிக்கிறோம், அதே நபர்களைச் சந்திக்கிறோம், ஒரே மாதிரி யோசிக்கிறோம். அதே பணிகளைச் செய்கிறோம், இதை மீண்டும் மீண்டும் நாள் முழுக்க செய்து கொண்டு இருக்கிறோம்.

இப்படி போய்கொண்டிருக்கும் வாழ்கையில் திடீரென ஏற்படும் ஒரு சிறிய மாற்றம் அந்த நாளை தலைகீழாக மாற்றிவிடும். நமது முழு பழக்கவழக்கங்களையும் கேள்விக்குள்ளாக்கும். மேலும் நம் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைக்கும். நாம் மீண்டும் அந்த சக்கரத்தின் ஆரம்ப புள்ளியை அடையும்போது, நம் பழக்கவழக்கங்கள் உட்பட, ஒரு பெரிய மாற்றத்தை அடைந்து இருப்பதை நாம் காணலாம். இதுதான் வட்டம் திரைப்படத்தின் மையக் கருவாக இருக்கும்.

ஒருவருக்கு ஒருவர் சம்பந்தம் இல்லாத பலர் மற்றவர்களுடைய வாழ்க்கையின் உள்ளே 24 மணி நேரத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களும், அதனால் அவர்கள் வாழ்க்கையில் பாதிப்புகளும் தான் திரைக்கதை'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x