

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சினிமா ரசிகர்களின் ஒரே பொழுதுபோக்கு வடிகாலாக இருந்தவை திரையரங்குகள் மட்டுமே. அதன் பிறகு விசிஆர், சிடி, டிவிடி, ஸ்மார்ட்போன் என சினிமா பல்வேறு வடிவங்களில் ரசிகர்களைத் தேடி வந்தபோதும் தியேட்டர்களுக்கான மவுசு அப்படியேதான் இருந்தது. ஆனால் மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் பின்னுக்குத் தள்ளி இன்று திரையரங்குகளுக்கு கடும் போட்டியாக உருவாகிக் கொண்டிருப்பவை ஓடிடி தளங்கள். மேற்கூறிய அனைத்திலும் நமக்கு வேண்டிய சினிமாவை நாம்தான் தேடிப் போகும் நிலை இருந்தது. ஆனால் ஓடிடி தளங்களோ ஒரு படி மேலே சென்று நமக்கு என்ன வகையான சினிமா தேவை என்பதைத் தெரிவு செய்து, அதை நம் உள்ளங்கைகளில் கொண்டுவந்து சேர்த்து விடுகிறது.
அதிலும் கரோனா பரவலுக்குப் பின்பு ஓடிடி தளங்கள் அசுரத்தனமான வளர்ச்சியைப் பெற்றன. அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில் வருடாந்திர சேவை, மாதாந்திர சேவை, வாராந்திர சேவை, இவ்வளவு ஏன் சில தளங்கள் ஒரு படத்துக்கு இவ்வளவு கட்டணம் என்கிற ப்ரீபெய்டு திட்டங்களைக் கூட அறிமுகப்படுத்தியுள்ளன. அந்த அளவுக்கு ஓடிடி தளங்களின் பயன்பாடு உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறது.
அதேநேரம் கரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டபோது மக்களின் நேரத்தையும், தூக்கத்தையும் விழுங்கும் முக்கியக் காரணிகள் ஒன்றாகவும் இந்த ஓடிடி தளங்கள் மாறிப் போயுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமூக வலைதளங்களில் சமீபகாலமாக அதிகம் புழங்கப்படும் சொற்களில் ஒன்று ‘பிஞ்ச் வாட்ச்’ (Binge Watch). அதாவது பல திரைப்படங்களை அல்லது ஒரு வெப் தொடரின் பல எபிசோட்களை ஒரே அமர்வில் பார்த்து முடிப்பது. நம்மில் பலரும் நமக்கு மிகப் பிடித்தமான ஒரு தொடரையாவது இப்படி கண்கள் சிவக்க சிவக்கப் பார்த்துத் தீர்த்திருப்போம். ஆனால், இது எப்போது ஒரு பிரச்சினைக்குரிய விஷயமாக மாறுகிறது?
இப்படி ‘பிஞ்ச் வாட்ச்சிங்’ செய்வது நம் அன்றாடக் கடமைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்போது அதுவும் புகை, குடி போன்ற ஓர் அடிமைத்தனமாக மாறுவதாக உளவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நாம் ஓடிடி தளங்களுக்கு அடிமையாகிவிட்டோம் என்று எவ்வாறு தெரிந்துகொள்வது?
* ஒருவரது வாழ்வில் ஓடிடி தளங்கள் மிகவும் முக்கியமான ஓர் அம்சமாக மாறுவது.
* ஒருவர் தன்னுடைய மனநிலையை மாற்றுவதற்கு ஓடிடி தளங்களைப் பயன்படுத்துவது. உதாரணமாக, தன்னுடைய வாழ்வில் நடந்த ஒரு எதிர்மறையான நிகழ்வு தந்த அதிர்ச்சியிலிருந்து தப்பிக்க ஓடிடி தளங்களைப் பார்ப்பது.
* ஒருவர் தன் வாழ்வின் முக்கியக் கடமைகளான உறவுகள், வேலை, கல்வி ஆகியவற்றை ஓடிடி தளங்களுக்காக சமரசம் செய்வது.
* ஓடிடி தளங்களில் படமோ அல்லது வெப் தொடரோ பார்க்கும் நேர அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வது.
* அப்படி ஓடிடி தளங்களைப் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டால், அவர்களிடம் மனதளவிலோ அல்லது உடலளவிலோ மாற்றங்கள் தென்படுவது.
இதுபோன்ற தாக்கங்கள் அனைத்தும் ஓடிடி தளங்கள் உங்களுக்கு ஏற்படுத்தியுள்ளனவா? அப்படியென்றால், நீங்கள் ஓடிடி தளங்களுக்கு அடிமையாகியிருக்கிறீர்கள் என்று பொருள். புகை, குடி, போதை உள்ளிட்ட அடிமைப் பழக்கங்களைப் போல ஓடிடி தளங்களுக்கு அடிமையாகுதல் என்பது மனநல நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்ட பிரச்சினையாக இன்னும் மாறவில்லை. எனினும் இது தொடர்பான ஆய்வுகள் உலகமெங்கும் அதிகமாக நடந்து வருகின்றன.
போலந்து நாட்டில் சமீபத்தில் 645 இளைஞர்களிடம் நடத்தப்பட்ட இது தொடர்பாக ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் அனைவரும் ஒரே அமர்வில் குறைந்தபட்சம் இரண்டு எபிசோட் பார்ப்பவர்கள். ஆய்வாளர்கள் அவர்களிடம் ஒரு சில கேள்விகளை முன்வைத்தனர். அவற்றில் சில:
* ஓடிடி தளங்களில் வெப் தொடர்கள் பார்ப்பதற்காக எத்தனை முறை நீங்கள் உங்கள் அடிப்படைக் கடமைகளைப் புறக்கணிக்கிறீர்கள்?
* உங்களால் வெப் தொடர்களைப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டால் எத்தனை முறை உங்களுக்கு வருத்தம் அல்லது எரிச்சல் ஏற்படுகிறது?
* வெப் தொடர் பார்ப்பதற்காக எத்தனை முறை உங்கள் தூக்கத்தைத் தவிர்த்திருக்கிறீர்கள்?
இவற்றுக்கு ஒன்று முதல் ஆறு வரையிலான அளவீட்டில் பதிலளிக்குமாறு அந்த இளைஞர்களிடம் ஆய்வாளர்கள் கேட்டுக் கொண்டனர். ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் செல்லும் பதில்கள் பிரச்சினைக்குரிய பிஞ்ச் - வாட்ச் என்று கருதப்படும்.
இளைஞர்கள் அளித்த பதிலின் அடிப்படையில், உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதில் சிரமம், முன்கூட்டியே திட்டமிடல் மற்றும் பின்விளைவுகளை ஆராய்வதில் உள்ள இயலாமை, சொந்தப் பிரச்சினைகளை மறப்பதற்காக ஓடிடி பார்த்தல், தனிமையைத் தவிர்ப்பதற்காகப் பார்த்தல் ஆகியவை அதிகம் சொல்லப்பட்ட பதில்களாக இருந்தன.
இந்த ஆய்வின் முடிவில் மணிக்கணக்கில் ஓடிடி தளங்களில் செலவிடுவதற்கும் மனச்சோர்வு மற்றும் கவலை ஆகியவற்றுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இதேபோல தைவான், அமெரிக்கா, போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளும் கவலை, மன அழுத்தம், சமூகத் தொடர்பிலிருந்து விலகியிருத்தல், தனிமை, தூக்கமின்மை ஆகியற்றுக்கு ஓடிடி தளங்கள் முக்கியக் காரணமாக இருப்பதாக தெரிவிக்கின்றன.
சரி... தீர்வு என்ன?
ஒரே அமர்வில் பல எபிசோட்களைப் பார்ப்பதிலிருந்து தப்பிக்க நினைக்கிறீர்களா? அப்படியென்றால், ஒரு எபிசோட் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதைப் பாதியில் நிறுத்திவிடச் சொல்கின்றனர் ஆய்வாளர்கள். காரணம், பெரும்பாலான தொடர்களில் ஒவ்வொரு எபிசோடின் முடிவும் மிகவும் சஸ்பென்ஸான வகையில், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று பார்வையாளரைத் தூண்ட விடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒரு எபிசோடுடன் நிறுத்துவது இயலாத காரியம்.
ஒரு நாளைக்கு இத்தனை மணி நேரம் மட்டுமே ஓடிடி தளங்களைப் பார்க்க வேண்டும் என்று உங்கள் மனதில் ஒரு தீர்மானம் செய்து கொள்ளுங்கள். ஆரம்பத்தில் இது சற்று கடினமாக இருந்தாலும் தொடர்ந்து இதைப் பின்பற்றுவதன் மூலம் ஓடிடி தளங்களில் செலவழிக்கும் நேரத்தைக் குறைக்கலாம்.
ஆர்வத்துக்கும் அடிமைத்தனத்துக்கும் இருக்கும் வித்தியாசத்தை எப்போதும் நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். ஆர்வம் என்பது நம் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு வித்திடும் ஒன்று. ஆனால், அடிமைத்தனம் என்பது வாழ்க்கையிலிருந்து மகிழ்ச்சியை முற்றிலுமாக பிரித்தெடுத்து விடும். இதைக் கவனத்தில் கொண்டு நம் மனதும் உடலுக்கும் பாதிப்பில்லாத வகையில் ஓடிடி தளங்களைப் பயன்படுத்துவோம்.
> உறுதுணைக் கட்டுரை: The Conversation