ப்ரியா பவானி சங்கர் நடித்த 'பிளட் மணி' - வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
சர்ஜுன் இயக்கத்தில் ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள 'பிளட் மணி' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
‘லக்ஷ்மி’, ‘மா’ உள்ளிட்ட குறும்படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் சர்ஜுன் கே.எம். இப்படங்களைத் தொடர்ந்து நயன்தாரா நடித்த ‘ஐரா’ படத்தை இயக்கியிருந்தார். நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ஆந்தாலஜி படமான ‘நவரசா’வில் ‘துணிந்த பின்’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.
இந்நிலையில் ப்ரியா பவானி சங்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள புதிய படம் ஒன்றை சர்ஜுன் இயக்கியுள்ளார். இப்படத்துக்கு ‘பிளட் மணி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கிஷோர், ஷிரிஷ், பஞ்சு சுப்பு, ‘ராட்சசன்’ வினோத் சாகர், ஶ்ரீலேகா ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
எம்பரர் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்துக்கு சதிஷ் ரகுநந்தன் இசையமைக்க, சங்கர் தாஸ் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.
இப்படம் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் கூறுகையில், “ 'பிளட் மணி' படத்தில் நான் ஒரு பத்திரிகையாளராக நடிக்கிறேன். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல பத்திரிகையாளராக வாழ்க்கையை ஆரம்பித்த நான் இப்படத்தில் பத்திரிகையாளராக நடிக்கிறேன். பல ஆச்சர்யங்களும், திருப்பங்களும் நிறைந்த, இந்த அற்புதமான சஸ்பென்ஸ் டிராமா படத்தில் நானும் பங்கேற்றிருப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி" என்றார்.
இப்படம் வரும் டிசம்பர் 24 அன்று நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
