சில்வா இயக்கியுள்ள ‘சித்திரைச் செவ்வானம்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
‘ஸ்டன்ட்’ சில்வா இயக்கியுள்ள ‘சித்திரைச் செவ்வானம்’ படம் வரும் டிசம்பர் 3ஆம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.
‘ஸ்டன்ட்’ சில்வா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரீமா கல்லிங்கல், பூஜா கண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘சித்திரைச் செவ்வானம்’. இயக்குநர் விஜய் தயாரித்துள்ள இப்படம் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
அப்பா - மகள் பாசப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தை, முழுக்க பொள்ளாச்சியில் படமாக்கியுள்ளார் இயக்குநர் சில்வா. இப்படம் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான பிரத்யேக போஸ்டரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சண்டை இயக்குநராகப் பல படங்களில் பணிபுரிந்த ஸ்டன்ட் சில்வா இப்படத்தில் அறிமுக இயக்குநராகக் களமிறங்கி இருப்பதும், நடிகை சாய் பல்லவியின் தங்கைதான் பூஜா கண்ணன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
