

அமேசான் ப்ரைமில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘தி ஃபேமிலி மேன்’ தொடரின் மூன்றாவது சீசனுக்கான அறிவிப்பு டீசர் வெளியாகியுள்ளது.
ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான தொடர் ‘தி ஃபேமிலி மேன்’. மனோஜ் பாஜ்பாயி, ப்ரியாமணி பிரதான கதாபாத்திரங்களில் வெளியான இத்தொடர் இதுவரை இரண்டு சீசன்கள் வெளியாகியுள்ளது. இதன் இரண்டாவது சீசனில் முக்கிய கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருந்தார். இலங்கை தமிழர்கள் குறித்து பேசிய இந்த சீசனுக்கு தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இத்தொடரின் மூன்றாவது சீசன் பற்றிய அறிவிப்பு டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. பொறுப்பான குடும்பத் தலைவராகவும் இன்னொரு பக்கம் யாருக்கும் தெரியாமல் பயங்கரவாதிகளை வேட்டையாடும் அதிகாரியாகவும் இருக்கிறார். இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஜெய்தீப் அஹ்லாவத் நடிக்கிறார்.
இந்த அறிவிப்பு டீசரில் வரும் ஒரு காட்சியில் ரயிலில் டிக்கெட் பரிசோதகரிடம் ‘நான் வாழ்க்கை மற்றும் உறவுகள் ஆலோசகராக இருக்கிறேன்’ என்று சொல்லும் மனோஜ் பாஜ்பாயை ப்ரியாமணி பார்க்கும் பார்வையின் மூலம் இதிலும் நாட்டை காக்க ஒரு புதிய ஆபரேஷனில் இருப்பது உறுதியாகிறது. 3-வது சீசன் விரைவில் வெளியாகும் என்று இந்த டீசரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.