

‘ரெட்ரோ’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை சேர்த்து ‘லிமிடட் வெப் சீரிஸ்’ ஆக வெளியிட கார்த்திக் சுப்பராஜ் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ரெட்ரோ’. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. இப்படம் ஓடிடியில் வெளியான பின்பு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். மேலும், சூர்யாவின் நடிப்புக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதனிடையே ஓடிடி வெளியீட்டுக்கு பின் கார்த்திக் சுப்புராஜ் அளித்த பேட்டியொன்றில், அவரது புதிய எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். “ஓடிடி தளத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். ஓடிடி வெளியீட்டில் இருந்து 3-4 மாதங்களுக்குப் பிறகு, படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை எல்லாம் ஒன்றாக இணைத்து லிமிடட் வெப் சீரிஸ் பாணியில் வழங்குவதாக ஓடிடி நிறுவனத்திடம் கூறினேன். அதற்கு அவர்கள் உடன்படவில்லை. ஆனால், தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்.
‘ரெட்ரோ’ படத்தின் புதிய காட்சிகளின் உணர்ச்சிகள் மிகவும் ஆழமானதாக இருக்கும். மேலும், சண்டைக் காட்சிகளில் அதிக விவரமானதாக இருக்கும். Love, Laughter மற்றும் War பற்றிய பல அற்புதமான காட்சிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் சுமார் 40 நிமிடங்கள் இருக்கும். அதை வெளிக்கொண்டு வர என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்று தெரிவித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.