

2024-ல் வெளிவந்த அனிமேஷன் திரைப்படம் ‘ஃப்ளோ’ (Flow). ஜிண்ட்ஸ் சில்பலோடிஸ் இயக்கத்தில் சில்பலோடிஸ் மற்றும் மேடிஸ் காசா எழுத்தில் உருவான இந்தத் திரைப்படம், சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.
ஒரு காட்டில் தனித்து வாழும் பூனை, திடீரென நிகழும் வெள்ளம், புயல் மற்றும் இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்படும் சுற்றுச்சூழலில், பல விலங்குகளுடன் இணைந்து ஒரு பாதுகாப்பான இடத்தை தேடுகிறது. வழியில் நாய்கள், கேபிபரா, லாப்ரடோர் ரெட்ரீவர், திமிங்கலம் மற்றும் பிற விலங்குகளை சந்திக்கும் அந்தப் பூனை, அவற்றுடன் நட்பும் உறவையும் ஏற்படுத்துகிறது.
ஒவ்வொரு விலங்கும் தனது தனிப்பட்ட இயலாமைகள் மற்றும் பலங்களுடன் பூனையின் பயணத்தில் பங்கு வகிக்கின்றன. இந்தப் பயணத்தில் வெள்ளம், புயல், துரத்தல்கள், நீச்சல், மீன்கள் பிடித்தல், கனவுகள், பிரிவுகள் என பல்வேறு மனரீதியான, உடல் ரீதியான சவால்களை எதிர்கொள்கிறது அந்தப் பூனை.
மிகப் பெரிய கல் தூண்கள் மற்றும் மர்மமான நிகழ்வுகள் மூலம் கதைக்குத் திருப்புமுனை வரும். இது இயற்கையின் சோதனைகளுக்கும், நட்பின் மதிப்புக்கும், தனிமை மற்றும் இணைப்புக்கும் இடையேயான பயணமாகும். இந்த அனிமேஷன் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ ஒடிடி தளத்தில் காணலாம். > ட்ரெய்லர் வீடியோ