தமிழின் முதல் வெர்டிக்கல் வெப் தொடர்! - புதிய முயற்சியில் இயக்குநர் குழந்தை வேலப்பன்

தமிழின் முதல் வெர்டிக்கல் வெப் தொடர்! - புதிய முயற்சியில் இயக்குநர் குழந்தை வேலப்பன்
Updated on
2 min read

சமூக வலைதளங்கள் இப்போது நம்மை கொஞ்சம் கொஞ்சமாக இழுத்துவிட்டன. பேஸ்புக், யூடியூப் ஷார்ட்ஸ், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என மக்கள் ஃபோனில் அனைத்தையும் பார்க்க பழகிவிட்டார்கள். இதன் அடிப்படையில் போனில் மட்டுமே பார்க்கக் கூடிய ‘வெர்டிக்கல்’ திரைப்படங்கள் வெளிநாடுகளில் உருவாகத் தொடங்கி இருக்கின்றன.

இந்நிலையில் தமிழில் புதிய முயற்சியாக, வெர்டிக்கல் வெப் தொடர் ஒன்றை இயக்கி முடித்திருக்கிறார் இயக்குநர் குழந்தை வேலப்பன். ‘ஆண்மை தவறேல்’, ‘யாக்கை’ படங்களை இதற்கு முன் இயக்கியிருக்கும் அவரிடம் இந்த வெப் தொடர் பற்றி பேசினோம்.

எப்படி இந்த ஐடியா தோணுச்சு?

கேன்ஸ் பட விழாவுக்கு போயிருந்த நேரத்துல, அங்க ‘வெர்டிக்கல்’ சினிமா பற்றிய ஒரு கருத்தரங்கம் நடந்தது. அதுல கலந்துகிட்டேன். அப்ப, ‘வெர்டிக்கல் சினிமாதான் எதிர்காலமா இருக்கும்’னு பேசினாங்க. அந்த மாதிரி நாம ஏன் முயற்சிப் பண்ணக் கூடாதுன்னு ஒரு நாலஞ்சு வருஷமா அது தொடர்பா ஆய்வு பண்ணினேன். அப்படி ஆரம்பிச்சதுதான் இந்த வெப் தொடர். இதுக்கு ‘யுகம்’னு பெயர் வச்சிருக்கோம்.

இதை செல்போனுக்கான தொடர்னு சொல்லலாமா?

இப்ப ஃபோன் தவிர்க்க முடியாததா ஆயிருச்சு. அது இல்லாம முடியாது. அதுலயே எல்லாத்தையும் பார்த்துப் பார்த்துப் பழகிட்டோம். அதனால உலகம் முழுவதுமே ஃபோனுக்கான படங்கள் அதாவது ‘வெர்டிக்கல்’ படங்கள், வெப் தொடர்களைத் தயாரிக்க தொடங்கிட்டாங்க. கடந்த 5 வருஷமா, ‘வெர்டிக்கல்’ திரைப்பட விழாக்கள்னே ஒரு 60, 70 விழாக்கள் பல நாடுகள்ல நடந்துகிட்டிருக்கு.

இந்த முறையில படமாக்கும்போது என்ன சவாலை சந்திச்சீங்க?

இந்த ‘பார்மெட்’ல வெப் தொடர் உருவாக்கறது சவாலாகத்தான் இருந்தது. என்ன சவாலா இருந்தாலும் கதை தானே முக்கியம். இந்த வெப் சீரிஸ் எனக்கு திருப்தியா இருந்தது. அதனால டொரன்டோவுல நடந்த பட விழாவுக்கு அனுப்பினோம். அதுல சிறந்த ‘வெர்டிக்கல்’ படம், சிறந்த நடிகைக்கான விருது கிடைச்சது. இத்தாலியில நடந்த விழாவுலயும் விருது வாங்குச்சு.

இதுல நீங்க முதன்முறையா நடிச்சிருக்கீங்களே?

அதுக்கு காரணம் இருக்கு. இந்த வெப் தொடரை நாங்க பரீட்சார்த்த முறையிலதான் பண்ணினோம். வேற நடிகர்களை, இந்த தொடருக்கான ‘வெர்டிக்கல்’ பிரேமுக்குள்ள கொண்டு வந்தா, அதை அவங்க எப்படி எடுத்துப்பாங்கன்னு எனக்குத் தெரியல. அதுமட்டுமில்லாம என் மனைவி நர்மதா பாலு கதாநாயகியா நடிச்சிருக்காங்க. அவங்க நடிக்கிறதால, கொஞ்சம் சவுகரியமான ஆள் தேவைப் பட்டது. அதனால முயற்சி பண்ணுவோமேன்னு நானே நடிக்க ஆரம்பிச்சுட்டேன். இதுல என் கூட கவிதா பாரதி, ஹரிணி நடிச்சிருக்காங்க. எங்க நாலு பேரைச் சுற்றிதான் கதை நடக்கும்.

வெப் சீரிஸ்னாலே த்ரில்லர்னு ஆகிடுச்சு. இதுவும் அப்படித்தானா?

இல்லை. இது சயின்ஸ் பிக்ஷன் ஃபேன்டஸி கதையை கொண்ட படம். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கோம். அடுத்து மெல்பர்ன் உள்பட பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு இந்தப் படத்தை அனுப்ப இருக்கிறோம். தொடர்ந்து இந்த மாதிரி ‘வெர்டிக்கல்’ சினிமா நிறைய வர வாய்ப்பிருக்கு. இது சினிமாவுக்கு மாற்று இல்ல. சினிமாவுல ஒரு ‘பார்ட்’.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in