Published : 14 Feb 2025 11:30 PM
Last Updated : 14 Feb 2025 11:30 PM

ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க வேண்டிய 10 வெப் தொடர்கள்: ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ முதல் ‘பென்குயின்’ வரை

ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளங்கள் கூட்டாக இணைந்து ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான ‘ஜியோஹாட்ஸ்டார்’ என்ற தளத்தை இன்று (பிப்.14) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தற்போதி இத்தளத்தில் டிஸ்னி, ஹாட்ஸ்டார், எச்பிஓ, மார்வெல், நேஷனல் கியோகிராபிக் ஆகியவற்றின் உள்ளடக்கங்கள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கின்றன. இதில் தவறவிடக்கூடாத 10 முக்கிய ஆங்கில வெப்-தொடர்களை பார்க்கலாம்.

1) கேம் ஆஃப் த்ரோன்ஸ்: உலக அளவில் இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. 8 சீசன்கள் அடங்கிய இந்த தொடர் வேறு ஒரு உலகத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை.

2) ஹவ் ஐ மெட் யுவர் மதர்: சிட்காம் தொடர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உலகமெங்கும் உண்டு. காரணம் குறைந்த ரன் டைம், கவலைகளை மறந்து வயிறு குலுங்கு சிரிக்க வைக்கும் காமெடி வசனங்கள் இவற்றின் ஸ்பெஷாலிட்டி. அந்த வகையில் ‘ஹவ் ஐ மெட் யுவர் மதர்’ நம்மை ஏமாற்றாது.

3) லோகி: ‘எண்ட்கேம்’ படத்துக்குப் பிறகு மார்வெல் நிறுவனம் திரைப்படங்கள் தாண்டி வெப் தொடரிலும் கவனம் செலுத்த தொடங்கியது. அந்த வகையில் மார்வெல் படைப்புகள் ‘லோகி’ ஒரு தவிர்க்க முடியாதது. மார்வெல் படங்களில் தற்போது இடம்பெறும் மல்டிவெர்ஸ் என்ற கான்செப்ட்டுக்கு அடித்தளமிட்ட ஒரு தொடர் இது.

4) தி லாஸ்ட் ஆஃப் அஸ்: போஸ்ட் அபோகலிப்டிக் வகை படங்களுக்கென்று ஒரு தனி ஈர்ப்பு உண்டு. அதாவது உலகமே கிட்டத்தட்ட அழிந்து போய் மீண்டும் மனித குலம் மெல்ல தலையெடுப்பது போன்ற கதைக்களத்தை இந்த வகை படைப்புகள் கொண்டிருக்கும். ஏற்கெனவே வீடியோ கேமாக வெளியாகி சக்கை போடு போட்ட இது, வெப் தொடராக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

5) ப்ரிசன் ப்ரேக்: ஆங்கில் தொடர்களின் ரசிகர்களுக்கு மிகவும் பேவரிட் ஆன தொடர் இது. தன்னுடைய அண்ணனை சிறைச்சாலையில் இருந்து விடுவிக்க தாமாகவே சிறைக்கு செல்லும் தம்பியை பற்றிய கதை. முதல் எபிசோடிலிருந்து கடைசி வரை பரபரவென செல்லும் இத்தொடர் தவறவிடக்கூடாத ஒன்று.

6) மாடர்ன் பேமிலி: மற்றொரு பிரபலமான சிட்காம். அவ்வப்போது இது தொடர்பான மீம்களை சமூக வலைதளங்களில் பார்த்திருக்கலாம். தன் பாலின ஈர்ப்பு, உறவுச் சிக்கல்கள், மத்திய வயது பிரச்சினைகள் உள்ளிட்ட சீரியசான விஷயங்களை மிகவும் நகைச்சுவையாக சொல்லியிருக்கும் இத்தொடர் ஒரு கிளாசிக்.

7) செர்னோபில்: உலகையே உலுக்கிய உக்ரைனின் செர்னோபில் அணு உலை வெடிப்பை அடிப்படையாக கொண்டு உருவான தொடர் இது. லிமிடெட் சீரிஸான இது செர்னோபில் அணு உலை கொடூரங்களை மிக தத்ரூபமாக நம் கண்முன்னே கொண்டு வரும்.

8) வெஸ்ட்வேர்ல்ட்: டிஸ்டோபியன் வகை அறிவியல் புனைவு தொடரான இது, வழக்கமாக நாம் பார்க்கும் சயின்ஸ் பிக்‌ஷன் தொடராக இருக்காது. கிறிஸ்டோபர் நோலனின் சகோதரர் ஜானதன் நோலனின் எழுத்தில் உருவான இத்தொடர் எம்மி உள்ளிட்ட ஏராளமான விருதுகளை குவித்துள்ளது.

9) ட்ரூ டிடெக்டிவ்: ஹாலிவுட்டில் பல அசத்தலான துப்பறியின் கதைகள் வெளியாகியிருந்தாலும், அவற்றில் ‘ட்ரூ டிடெக்டிவ்’ தொடர் என்றுமே தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கும். மேத்யூவ் மெக்கானாகே, உடி ஹாரல்சன் நடிப்பில் வெளியான இத்தொடர்கள் அதிர வைக்கும் பல மர்மங்களையும், ட்விஸ்ட்களையும் உள்ளடக்கியது.

10) பென்குயின்: டிசி காமிக்ஸின் முக்கிய வில்லனான பென்குயின் கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு வெளியான தொடர் இது. படங்கள் முன்பின் இருந்தாலும் வெப் தொடர்களில் தான் எப்போதுமே கில்லாடி என்பதை டிசி மீண்டும் ஒருமுறை இத்தொடரின் மூலம் நிரூபித்ததுள்ளது. இத்தொடருக்காக கோலின் ஃபெர்ரல் சிறந்த வெப் தொடர் நடிகருக்கான கோல்டன் குளோப் விருதை வென்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x