

வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா கொனிடேலா உள்ளிட்டோர் நடிப்பில், பி.ஜெகதீஷ் தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘மெட்ராஸ்காரன்’. சாம் சி. எஸ் இசையமைத்த இப்படம், கடந்த ஜனவரி மாதம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ஊரார் வியக்கவும் பெற்றோர், உறவினர்கள் மகிழவும் தனது திருமணத்தைப் புதுக்கோட்டை அருகேயுள்ள சொந்த கிராமத்தில் நடத்த ஏற்பாடு செய்கிறார், சென்னையில் வேலை செய்யும் சத்யா (ஷேன் நிகம்). அவருடைய காதலியும் மணப்பெண்ணுமான மீரா (நிஹாரிகா), திருமணத்துக்காக, முதல்நாளே புதுக்கோட்டை வந்து சேர்கிறார்.
விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அவரைக் காண, செல்போன் பேசியபடி காரை ஓட்டிச் செல்கிறார் சத்யா. வழியில் நிறைமாதக் கர்ப்பிணியான கல்யாணி (ஐஸ்வர்யா தத்தா) மீது காரை மோதிவிடுகிறார். அந்த ஊர் மக்கள் சத்யாவைப் பிடித்துக் கொள்கிறார்கள். பிறகு அவரின் திருமணம் நடந்ததா? கல்யாணிக்கும் வயிற்றிலிருக்கும் அவரது குழந்தைக்கும் என்னவானது என்பதை நோக்கிக் கதை நகர்கிறது.
பார்வையாளர்களிடம் இருந்து வந்த கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம், வணிக ரீதியிலும் குறிப்பிடத்தக்க வெற்றி பெறவில்லை. ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை ஆஹா தமிழ் ஒடிடி தளம் கைப்பற்றியிருந்து. அதன்படி, இன்று முதல் ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படத்தை ஆஹா தமிழில் காணலாம்.