IMDb டாப் 10 த்ரில்லர் படங்கள் @ ஓடிடி: ‘மகாராஜா’ முதல் ‘கில்’ வரை

IMDb டாப் 10 த்ரில்லர் படங்கள் @ ஓடிடி: ‘மகாராஜா’ முதல் ‘கில்’ வரை
Updated on
3 min read

த்ரில்லர் படங்களை விரும்பி பார்ப்பவரா நீங்கள்? 2024-ம் ஆண்டில் வெளியாகி, தற்போது ஓடிடி தளங்களில் காணக் கிடைக்கும் ஐஎம்டிபி தளத்தின் மதிப்பீட்டின்படி, டாப் 10 த்ரில்லர் படங்களின் அணிவகுப்பு இதோ...

மகாராஜா (Maharaja): நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், சாச்சனா, மம்தா மோகன்தாஸ், நட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு ஜூன் 14 அன்று திரையரங்குகளில் வெளிவந்த திரைப்படம் ‘மகாராஜா’. நான்-லீனியர் திரைக்கதையில் உருவான ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் இது.

தன் மகளுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்குக் காரணமான குற்றவாளியைக் கண்டறிய முயலும் ஒரு சாமானியன், சாணக்கியத் தனமான முயற்சியால் எவ்வாறு வெற்றியடைகிறான் என்பதை, திரைக்கதையின் திடீர் விலகல்களை மீறிப் படபடப்புடன் பார்வையாளர்கள் பார்த்து வியந்தனர். பார்வையாளர்கள் பலரும் மனம் பதைபதைத்தனர். கலவையான எதிர் விமர்சனங்களை ஆகிருதியுடன் எதிர்கொண்டு நின்ற படம். இப்படம் வசூல் ரிதீயாகவும், விமர்சன ரிதீயாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இது விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. IMDb-யில் 8.4 மதிப்பீடுகளை பெற்றுள்ள இப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் ஒடிடி தளத்தில் காணலாம்.

ஆட்டம் (Aatam): ஆனந்த் ஏகார்ஷி இயக்கத்தில் வினய் போர்ட், கலாபவன் ஷாஜோன், ஜரின் ஷிஹாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'ஆட்டம்'. இத்திரைப்படம் 2024 மார்ச் 12-ஆம் தேதி அன்று ப்ரைம் வீடியோ ஒடிடி தளத்தில் வெளியானது. 'ஆட்டம்' திரைப்படம், ரெஜினால்ட் ரோஸ் எழுதிய "Twelve Angry Men" என்ற நீதிமன்றத் த்ரில்லரின் மலையாள மொழி மறு ஆக்கமாகும்.

கதை, ஒரு குற்றவாளியின் குற்றம் நிரூபிக்கப்பட்டதா அல்லது இல்லையா என்பதை தீர்மானிக்க 12 ஜுரர்ஸ் இடையே நடைபெறும் விவாதங்களை மையமாகக் கொண்டது. இந்த விவாதங்கள், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகளை வெளிப்படுத்துகின்றன. IMDb-யில் 8.2 மதிப்பீடுகளை பெற்றுள்ள இத்திரைப்படத்தை தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் காணலாம்.

மஞ்ஞும்மல் பாய்ஸ் (Manjumel Boys): சிதம்பரம் இயக்கத்தில் சவுபின் ஷாஹீர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’. 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியானது. 2006-ஆம் ஆண்டில், மஞ்ஞும்மல் என்ற கிராமத்தைச் சேர்ந்த நண்பர்கள் குழு, கொடைக்கானல் பயணிக்கின்றனர். அவர்கள் ‘குணா குகைகள்’ எனப்படும் ஆழமான குகைகளில் வலம் வரும்போது, சுபாஷ் (ஸ்ரீநாத் பாஷி) என்ற நண்பர் ஆழத்தில் விழுந்து விடுகிறார்.

இது, அவர்களின் நண்பரைக் காப்பாற்றும் முயற்சியில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை மையமாகக் கொண்டது. மொத்ததில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்' நண்பர்களின் உறவு மற்றும் உயிர் பிழைத்தல் ஆகியவற்றை மையமாக கொண்ட ஒரு த்ரில்லர் அனுபவமாகும். IMDb-யில் 8.2 மதிப்பீடுகளை பெற்றுள்ள இத்திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி-யில் காணக் கிடைக்கிறது.

கிஷ்கிந்தா காண்டம் (Kishkindha kaandam): ஒளிப்பதிவாளர் பாகுல் ரமேஷ் எழுதி, தின்ஜித் அய்யதன் இயக்கிய சைக்கலாஜிக்கல் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘கிஷ்கிந்தா காண்டம்’. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஆசிஃப் அலி, அபர்ணா பாலமுரளி, விஜயராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரரான அப்பு பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தை சுற்றி இப்படத்தின் கதை நகர்கிறது. அப்பு பிள்ளையின் இரண்டாவது மகன் அஜய் சந்திரன், அவரது மனைவி அபர்ணா உள்ளிட்டோர் வாழும் அந்த வீட்டில் அப்பு பிள்ளையின் துப்பாக்கி மாயமாகிறது. இந்தத் தேடலில், அக்குடும்பத்தினரால் நீண்ட நாட்களாக மறைக்கப்பட்டு வரும் ரகசியம் வெளிச்சத்துக்கு வருகிறது. IMDb-யில் 8.0 மதிப்பீடுகளை பெற்றுள்ள இத்திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

ஷக்காஹாரி (Shakhahaari): சந்தீப் சுன்கட் இயக்கத்தில் ரங்காயண ரகு, கோபால்கிருஷ்ண தேஷ்பாண்டே, சுஜய் ஷாஸ்திரி, ஹரிணி ஸ்ரீகாந்த் மற்றும் வித்யா ஹெக்டே நடிப்பில் உருவான கன்னட த்ரில்லர் திரைப்படம் 'ஷக்காஹாரி'. "ஷக்காஹாரி" திரைப்படம், சைவ உணவகத்தில் நடைபெறும் ஒரு கொலை வழக்கை மையமாகக் கொண்டது. காவல் துறை அதிகாரி மல்லிகார்ஜுன் (கோபால்கிருஷ்ண தேஷ்பாண்டே) ஒரு கொலை வழக்கை விசாரித்து வருகிறார்.

இந்த வழக்கின் குற்றவாளி சிறையில் இருந்து தப்பி விடுகிறார். மல்லிகார்ஜுன், இந்த குற்றவாளியை பிடித்து, தனது பணியிட மாற்றத்தை உறுதிப்படுத்த முயல்கிறார். இந்தச் சம்பவங்கள், சைவ உணவகத்தில் நடைபெறும் கொலை வழக்கை மையமாகக் கொண்டது. IMDb-யில் 7.9 மதிப்பீடுகளை பெற்றுள்ள இத்திரைப்படத்தை தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் ப்ரைம் வீடியோ ஒடிடி தளத்தில் காணலாம்.

கலிங்கா (Kalinga): த்ருவா வாயு இயக்கத்தில் பிரக்யா நயன், ஆடுகளம் நரேன் மற்றும் த்ருவா வாயு ஆகியோர் நடிப்பில் உருவான தெலுங்கு திரைப்படம் 'கலிங்கா'. கலிங்கா கிராமத்தை சேர்ந்த லிங்கா (த்ருவா வாயு) என்ற இளைஞனின் காதல் கதை மற்றும் அவனது வாழ்க்கையை மையமாகக் கொண்டது. லிங்கா, பட்டு (பிரக்யா நயன்) என்ற பெண்ணை காதலிக்கிறார். ஆனால், பட்டு உடைய தந்தை லிங்காவை தங்கள் குடும்ப கடன்களை தீர்க்கும் சவாலுக்கு அழைக்கிறார். லிங்கா, கிராமத்தின் தலைவரான பட்டேல் (ஆடுகளம் நரேன்) விலக்கு நிலங்களை மீட்டெடுப்பதற்கான சவாலுக்கு எதிர்கொள்கிறார். IMDb-யில் 7.9 மதிப்பீடுகளை பெற்றுள்ள இத்திரைப்படத்தை தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் ப்ரைம் வீடியோ ஒடிடி தளத்தில் காணலாம்.

சூக்‌ஷமதர்ஷினி (Sookshmadarshini): எம்.சி. ஜித்தின் இயக்கத்தில் நஸ்ரியா, பசில் ஜோசப் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான திரைப்படம் 'சூக்‌ஷமதர்ஷினி'. பிரியா (நஸ்ரியா) வசிக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள தனது பழைய வீட்டிற்கு குடி வருகிறார் மனுவேல் (பசில் ஜோசப்). பிரியா பொதுவாக துப்பறியும் குணம் உடையவள். தனது அண்டை வீட்டுக்காரர் மனுவேலின் நடத்தை மீது பிரியாவிற்கு சந்தேகம் வருகிறது. அவர் ஏதோ தவறு செய்வதாக பிரியா கணிக்கிறார். அவர் என்ன தவறு செய்தார் என்பதை பிரியா கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே கதை. IMDb-யில் 7.8 மதிப்பீடுகளை பெற்றுள்ள இத்திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

ஏ.ஆர்.எம் (A.R.M): வினு பிரகாஷ் இயக்கத்தில் டொவினோ தாமஸ், கிருத்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஏ.ஆர்.எம்’. 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.எம் திரைப்படம் மூன்று காலகட்டங்களில் (1900, 1950, 1990) நடைபெறும் பரபரப்பான கதையை பற்றி கூறுகிறது.

1900-ஆம் ஆண்டில், ஒரு விண்கல் விழுந்து, அதிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு புனித விளக்கு (ச்யோதிவிலக்கு) பலரின் வாழ்க்கையை மாற்றுகிறது. 1950-ஆம் ஆண்டில், மணியன் (டொவினோ தாமஸ்) என்ற திருடன், இந்த விளக்கை திருட முயலுகிறான். 1990-ஆம் ஆண்டில், அஜயன் (டொவினோ தாமஸ்) என்ற இளைஞன், இந்த விளக்கின் பின்னணியை அறிந்து, தனது குடும்பத்தின் பழிவாங்கும் முயற்சிகளை எதிர்கொள்கிறான். IMDb-யில் 7.8 மதிப்பீடுகளை பெற்றுள்ள இத்திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

பிரம்மயுகம் (Brahmayugam): ராகுல் சதாசிவன் இயக்கத்தில், மம்மூட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ஹாரர் - த்ரில்லர் திரைப்படம் ‘பிரம்மயுகம்’. 17-ம் நூற்றாண்டில் நடக்கும் மர்மங்களைக் கொண்டதுதான் இந்தப் படம். கொடுமன் பொட்டி கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருக்கிறார். அவர் தனது சுயநலனுக்காக மந்திர, தந்திரங்களைப் பயன்படுத்துகிறார். தேவன் என்ற பாணன் கதாபாத்திரத்தில் அர்ஜுன் அசோகன் நடித்துள்ளார். மர்மமான இருண்ட உலகத்தில் தேவன் சிக்கிக்கொள்கிறார். கொடுமான் பொட்டியிடம் இருந்து தேவன் எப்படி தப்பிச் செல்கிறார் என்பதே இப்படத்தின் கதை. IMDb-யில் 7.8 மதிப்பீடுகளை பெற்றுள்ள இத்திரைப்படம் சோனி லிவ் ஒடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

கில் (Kill): நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் ராகவ் ஜுயல், லக்‌ஷயா மற்றும் தன்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'கில்'.

"கில்" திரைப்படம், ஒரு ரயிலில் நடைபெறும் ஆக்‌ஷன் சம்பவங்களை மையமாகக் கொண்டது. படம் முழுவதும் இடையறாது ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெறுகின்றன. ரயிலில் நடக்கும் இந்த சம்பவங்கள், கதையின் மையமாக அமைந்துள்ளன. IMDb-யில் 7.5 மதிப்பீடுகளை பெற்றுள்ள இத்திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in