

புஷ்பா 2 - தி ரூல்: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிச.5 அன்று வெளியான திரைப்படம் ‘புஷ்பா 2 - தி ரூல்’. புஷ்பா முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, பிரமாண்ட பொருட்செலவில் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. செம்மரக் கடத்தலில் மாஃபியாக்களாக மாறிய புஷ்பா (அல்லு அர்ஜுன்) தனது வியாபாரத்தை ஜப்பான் வரை விரிவாக்குகிறார். அவர் ஓர் அமைச்சரின் உதவியுடன், செம்மரக் கடத்தலை முன்னெடுத்து, முதல்வரைச் சந்திக்க முயல்கிறார்.
முதல்வர் அவமானப்படுத்தியாதால் புஷ்பா தனது ஆதரவு அமைச்சரை முதல்வராக மாற்ற முயல்கிறார். இது, காவல் அதிகாரி ஃபகத் பாசிலுடன் மோதலாக மாறுகிறது. புஷ்பா தனது திட்டங்களில் வெற்றி அடைந்தாரா என்பதே திரைக்கதை. பாக்ஸ் ஆபீஸில் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ள இப்படம் இன்று முதல் நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் 23 நிமிட கூடுதல் காட்சிகளுடன் ஸ்ட்ரீம் ஆகிறது.
மேக்ஸ் (Max): 2024-ம் ஆண்டு வெளியான கன்னட அதிரடி திரில்லர் திரைப்படம்தான் ‘மேக்ஸ்’. இது, தமிழ் மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கியுள்ளார். சுதீப் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேக்ஸ் (சுதீப்) ஒரு நேர்மையான மற்றும் தன்னலமற்ற போலீஸ் அதிகாரி. இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு அவர் புதிய காவல் நிலையத்தில் பணியில் சேருகிறார். அங்கு, இரண்டு அமைச்சர்களின் மகன்களை கைது செய்வதால், எதிர்பாராத சிக்கல்களை எதிர்கொள்கிறார். அவர்கள் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் இறப்பதால், மேக்ஸ் மற்றும் அவரது குழு கடினமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டியிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை ஜன.31 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் காணலாம்.
பயாஸ்கோப்: சங்ககிரி ராஜ்குமார் எழுதி, இயக்கி, நடித்துள்ள ‘பயாஸ்கோப்’ படம், கிராமத்து மனிதர்களின் பங்கேற்புடன் உருவாகியிருக்கும் முயற்சி. தமிழ் சினிமா பேசத் தயங்கும் பொருளை, சமரசமில்லாமலும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் விமர்சனம் செய்திருப்பதில் காத்திரமான படைப்பு. சினிமாவைப் பற்றி வெளிவந்த சினிமாக்களில் இது முக்கியப் படைப்பு. சத்யராஜ், சேரன் மற்றும் மாணிக்கம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வந்து செல்கின்றனர். ‘பயாஸ்கோப் திரைப்படத்தை ஜன.31 முதல் ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் காணலாம்.
ஐடென்டிட்டி (Identity) த்ரிஷா,டோவினோ தாமஸ், வினய் ஆகியோர் நடிப்பில் அகில் பால் மற்றும் அனாஸ் கான் இயக்கத்தில் வெளியான மலையாள திரைப்படம் ‘ஐடென்டிட்டி’. இப்படத்தின் தொடக்கத்தில் ஆடை மாற்றும் அறையில் பெண்களின் அந்தரங்க வீடியோக்களை எடுத்து மிரட்டும் ஒருவன், மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறான். அந்தக் கொலையை அலிஷா (திரிஷா) நேரில் பார்த்து விடுகிறார். இந்த வழக்கை விசாரிக்க போலீஸ் அதிகாரியாக அலன் (வினய்) நியமிக்கப்படுகிறார்.
அலன் தனது உதவிக்காக ஹரன் சங்கரை (டோவினோ தாமஸ்) நாடுகிறார். அலிஷா அடையாளம் காண முடியாத Face Blindness) பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஹரன் அவரின் விளக்கங்களை கொண்டு குற்றவாளியின் உருவத்தை வரைகிறார். ஆனால், இந்த உருவம் ஹரனின் முகத்துடன் ஒத்திருக்க, கதையில் மேலும் மர்மம் உருவாகிறது. கொலைக்கான உண்மையான குற்றவாளி யார்? அவரின் நோக்கம் என்ன?என்பதே திரைக்கதை. இப்படம் ஜன.21 முதல் ஜீ5 ஒடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.
‘தி சீக்ரட்ஸ் ஆஃப் தி ஷிலேடார்ஸ்’ - ‘இந்திய வரலாற்றின் மறைக்கப்பட்ட ரகசியங்களை ஆராயும் ஓர் அதிரடி தொடர்’ அறிமுகக் குறிப்புகளுடன் ‘தி சீக்ரட்ஸ் ஆஃப் தி ஷிலேடார்ஸ் (The Secret of the Shiledars) எனும் வெப் சீரிஸ் வெளியாகிறது. சத்ரபதி சிவாஜியின் மறைக்கப்பட்ட செல்வத்தை பாதுகாக்கும் ‘ஷிலேடார்’ எனப்படும் வீரர்களின் கதையை சொல்லும் இந்த வெப் சீரிஸ் ஜன.31 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.