

நஸ்ரியா நசீம், பசில் ஜோசப் நடிப்பில் எம்.சி.ஜிதினின் இயக்கத்தில் கவனம் ஈர்த்த மலையாளத் திரைப்படமான ‘சூக்சுமதர்ஷினி’ (Sookshmadarshini) இப்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
‘த்ரிஷ்யம்’, ‘த்ரிஷ்யம் 2’, ‘கிஷ்கிந்தா காண்டம்’ முதலான படங்களின் வரிசையில் ஊகிக்க முடியாத திருப்பங்களால் ஆன திரைக்கதைக் கொண்டு நஸ்ரியா நசீம், பசில் ஜோசப் நடிப்பில் எம்.சி.ஜிதினின் இயக்கிய இந்தப் படம் ஜனவரி 11-ல் ஹாட் ஸ்டாரில் வெளியானது.
படம் எப்படி? - குறைந்த ஆள்நடமாட்டமுள்ள வசிப்பிடப் பகுதியில், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ப்ரியா என்கிற பிரியதர்ஷினி வசிக்கிறார். அவர் வீட்டருகே மேலும் சில தோழிகளும் அவருக்கு உண்டு. மேனுவேலும் அவருடைய வயதான தாய் கிரேஸும் ஓர் இடைவெளிக்குப் பிறகு தங்களின் சொந்த பங்களா வீட்டுக்குத் திரும்பிவந்து தங்குகின்றனர். இவர்களின் வீடு, ப்ரியாவின் பக்கத்து வீடு!
எதையும் ஆராயும் குணமுள்ள பிரியதர்ஷனி, மேனுவேல் வீட்டில் நடக்கும் சில அசாதாரண நிகழ்வுகளை ஆராய்கிறார். அந்த நிகழ்வுகளின் முடிச்சுகளை அவரால் அவிழ்க்க முடிகிறதா அல்லது அவரே அதில் சிக்கிக் கொள்கிறாரா என்பதே திரைக்கதை.
பக்கத்து பங்களாவில் நிகழும் சம்பவங்களில் ப்ரியாவின் துப்பறிதலில் நாமும் கொஞ்சம் கொஞ்சமாகப் பங்கேற்கத் தொடங்கிவிடுவது திரைக்கதையின் முதல் வெற்றி. ஒருவரது பார்வையில் மட்டும் கதையை நகர்த்தாமல் பல்வேறு கோணங்களில் சொல்வது, தெரிந்த முடிச்சுகளைத் தக்கச் சமயத்தில் உறுத்தாமல் அவிழ்ப்பது போன்ற உத்திகள் சரிவர அமைந்துள்ளன.
படத்தின் எல்லாப் புள்ளிகளும் கோவையாக இணையும் இறுதிப் புள்ளியில் வெளிப்படும் அதிர்ச்சியும், அதில் சொல்லப்படும் சமூக அரசியல் கதையோடு இணைந் திருப்பதும் சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கின்றன. மர்மம், திகில், பயம் உணர்வுகளைக் கடத்தும் ‘ஒர்த்’தான படைப்பு இது.