புதிய குற்றக் களம் நோக்கி... - ‘பாதாள் லோக் 2’ சீரிஸ் ட்ரெய்லர் எப்படி?

புதிய குற்றக் களம் நோக்கி... - ‘பாதாள் லோக் 2’ சீரிஸ் ட்ரெய்லர் எப்படி?
Updated on
1 min read

சுதிப் ஷர்மா உருவாக்கத்தில், தருண் தேஜ்பாலின் ‘தி ஸ்டோரி ஆஃப் மை அஸாஸின்ஸ்’ புத்தகத்தை மையப்படுத்தி, அமேசான் ப்ரைம் வீடியோவில் ஹிட்டடித்த இந்தி வெப் சீரிஸ் ‘பாதாள் லோக்’ (Paatal Lok). அவினாஷ் அருண், புரோசித் ராய் இயக்கிய இந்த வெப் சீரிஸின் இரண்டாவது சீசனின் ட்ரெய்லர் வெகுவாக கவனம் ஈர்த்துள்ளது.

ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் இம்மாதம் 17-ம் தேதி வெளியாகும் ‘பாதாள் லோக் சீசன் 2’ (Paatal Lok Season 2) முழுக்க முழுக்க புத்தம் புது குற்றக் களத்தைப் பின்புலமாகக் கொண்டிருப்பதை ட்ரெய்லர் காட்டுகிறது. குறிப்பாக, நாகலாந்து மாநிலத்தில் கேங்ஸ்டர்களை நோக்கி, கதையின் நாயகனான சாமானிய போலீஸின் பயணம் அமைகிறது. முதல் சீசனைப் போலவே விறுவிறுப்பான த்ரில்லர் ரசிகர்களுக்கு புத்தாண்டாக அமையும் என்பதை உணர முடிகிறது.

வழக்கம்போலவே, சாமானிய காவல் அதிகாரியாக ஜெய்தீப் ஒட்டுமொத்தமாக கவனம் ஈர்க்கிறார். தன்மையாகப் பேசுவது தொடங்கி ஆக்ரோஷமாக செயல்படுவது வரை ட்ரெய்லரிலேயே தெறிக்கிறார். கூடவே, திலோத்தமா ஷோமும் இந்த சீசனின் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை கூட்டும் வகையில் அமைந்துள்ளது. முந்தைய சீசன் போலவே அரசியல், குற்றப் பின்னணி, சிஸ்டம் குறித்து ‘பாதாள் லோக் 2’ ஆழமாகப் பேசும் என்பதை ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள வசனங்களே சான்றாக அமைந்துள்ளன.

முதல் சீசனில் 9 எபிசோடுகளுமே பட்டாசாக இருந்தன. இந்தியாவின் மிகவும் பிரபலமான நட்சத்திர ஊடகவியலாளரைக் கொல்வதற்காக ஒரு கூலிப்படை டெல்லியில் ஏவிவிடப்படுகிறது. இது குறித்த தகவல் நேரடியாக டெல்லியின் உயர் காவலதிகாரிக்கு வருகிறது. தாக்குதலுக்குச் செல்லும் வழியில், நான்கு பேரைக்கொண்ட அந்தக் கூலிப்படை, உயர் காவலதிகாரியின் தலைமையிலான குழுவினரால் மடக்கிப் பிடிக்கப்படுகிறது.

அந்த ஊடகவியலாளரைக் கொல்லும் முயற்சிக்கான நோக்கம் என்ன? அந்தக் கூலிப்படையை ஏவியது யார்? அந்தக் கூலிப்படையில் இருக்கும் நான்கு நபர்களின் பின்னணி என்ன? போன்ற கேள்விகளுக்கான விடையைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு, ஹாதிராம் சௌத்ரி எனும் காவல் ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இந்தக் கேள்விகளுக்கான விடைகளையும், ஒரு பிரபலத்தின் மீதான தாக்குதல், அதுவும் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தை ஈர்த்த நாட்டின் முக்கிய வழக்கு, தன்னைப் போன்ற ஒரு சாமானிய காவல் ஆய்வாளரிடம் ஏன் ஒப்படைக்கப்பட்டது என்பதற்கான காரணத்தையும் கண்டுபிடிக்கும் ஹாதி ராமின் துப்பறியும் பயணமே ‘பாதாள் லோக்’ சீசன் 1.

இந்த வெப் சீரிஸின் ஆக்கமும், அதன் திரைமொழியும் நேர்த்தி மிகுந்தது. கிட்டத்தட்ட எட்டு மணிநேரத்துக்கு நீளும் இந்தத் தொடரை, இறுதிவரை விறுவிறுப்புடனும் பிடிப்புடனும் இருக்குமாறு அதன் இயக்குநர்களான அவினாஷ் அருணும் புரோசித் ராயும் உருவாக்கியிருப்பது அவர்களுடைய திரை மொழி ஆளுமைக்குச் சான்று. மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் பேசத் தயக்கம் காட்டப்படும் அரசியலையும் முதல் சீசன் பேசியிருந்ததும் கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in