

கோவா: “முன்பு சுயாதீன படங்களுக்கு ஆதரவளித்து வந்த ஓடிடி தளங்கள் கூட இப்போது அந்தப் படங்களை ஏற்றுக்கொள்வதில்லை. சுயாதீன திரைப்படங்களை தவிர்த்துவிட்டால் சினிமா என்பது வெறும் வியாபாரமாக மட்டுமே இருக்கும்” என பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் தெரிவித்துள்ளார்.
இந்திய சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20-ம் தேதி கோவாவில் தொடங்கியது. இரண்டாம் நாளா இன்று, சுயாதீன திரைப்படங்கள் குறித்து அமர்வில் நடிகர் மனோஜ் பாஜ்பாய் பேசினார். அவர் கூறுகையில், “சுயாதீன படங்களை பொறுத்தவரை அதற்கான பாதை என்பது எப்போதும் கடினமாகவே இருந்துள்ளது. இடையில் சில காலம் மட்டும் நன்றாக இருந்தது. ஆனால் இப்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிட்டது. முன்பு சுயாதீன படங்களுக்கு ஆதரவளித்து வந்த ஓடிடி தளங்கள் கூட இப்போது அந்தப் படங்களை ஏற்றுக்கொள்வதில்லை.
பலதரப்பட்ட மக்களின் குரல்களையும், கதைகளையும் கேட்க அவர்கள் தயாராக இல்லை. நிச்சயமற்ற, தீவிர மோதல்கள் நிறைந்த ஒரு கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு எதிரானவர்களாக திகழ்கின்றனர். இது தொடர்பான கதைகளை தீண்டாமல் திரையுலகம் வழக்கம் போல தனது பணியை செய்துகொண்டிருக்கிறது” என்றார்.
மேலும், “சினிமாவின் ஆன்மாவுக்கு உண்மையாக இருக்கும் ஒரே ஒரே வகைமை என்றால் அது சுயாதீன திரைப்படங்கள் தான். வெகுஜ சினிமாவை பொறுத்தவரை அது எப்போதும் போல அதற்கான பார்வையாளர்களுடன் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால், இப்போது நமக்கு தேவையானது சுயாதீன திரைப்படங்களுக்கு வரவேற்பளிப்பது. அது தான் இந்திய சினிமாவின் வளர்ச்சியை வரையறுக்கும். சுயாதீன திரைப்படங்களை தவிர்த்துவிட்டால் சினிமா என்பது வெறும் வியாபாரமாக மட்டுமே இருக்கும்” என தெரிவித்துள்ளார்.