ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ நவ.8-ல் ஓடிடியில் ரிலீஸ்!
சென்னை: ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள ‘தேவரா’ திரைப்படம் வரும் நவம்பர் 8-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஆச்சார்யா’ படத்தை தொடர்ந்து இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள திரைப்படம் ‘தேவரா’. இப்படத்தின் மூலம் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். பிரகாஷ்ராஜ், சைஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதை மையப்படுத்தி நடிகர் ஜூனியர் என்டிஆர், “அப்பாவித் தனத்துடன் படங்களை ரசிக்க நாம் மறந்துவிட்டோம்” என்று படத்தின் போதாமையை பார்வையாளர்கள் பக்கம் திருப்பினார். ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.400 அளவில் வசூலிட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படம் வரும் நவம்பர் 8-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் காண முடியும்.
