

சென்னை: சாய் தன்ஷிகா நடித்துள்ள ‘ஐந்தாம் வேதம்’ வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ட்ரெய்லர் எப்படி?: “1000 வருடங்களுக்கு ஒரு முறை அதிசயம் நிகழும்” என ஒய்.ஜி.மகேந்திரனின் குரலில் வசனம் ஒலிக்க காட்சிகள் நகர்கின்றன. தென்னிந்தியாவில் இருக்கும் ஊரில் உள்ள கோயில் பூசாரியிடம் பெட்டி ஒன்றை ஒப்படைக்க வேண்டும் என சாய் தன்ஷிகாவுக்கு அசைமென்ட் கொடுக்கப்படுகிறது. அதனை ஒப்படைக்க சொல்லும் அவருக்கு நேரும் பிரச்சினைகளும், இடையூறுகளும் தான் கதை என தெரிகிறது. புராணம், புதிர் நடுவே ஏஐ தொழில்நுட்பம் என பல்வேறு களங்களை ட்ரெய்லர் தொட்டுச் செல்கிறது. விறுவிறுப்பாக நகரும் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த இணையத்தொடர் ஜீ5 ஓடிடியில் வரும் அக்.25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் வேதம்: ‘மர்ம தேசம்’ புகழ் இயக்குநர் நாகா இயக்கத்தில் சாய் தன்ஷிகா நடித்துள்ள தொடர் ‘ஐந்தாம் வேதம்’. அபிராமி மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள இந்தப் புராணத் தொடரில், சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய்.ஜி. மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்த வெப்சீரிஸ் வெளியாகிறது.