மலையாள நடிகர் திலீப்பின் கடைசி 3 படங்களை வாங்க முன்வராத ஓடிடி நிறுவனங்கள்

மலையாள நடிகர் திலீப்பின் கடைசி 3 படங்களை வாங்க முன்வராத ஓடிடி நிறுவனங்கள்
Updated on
1 min read

திருவனந்தபுரம்: மலையாளத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான திலீப்பின் நடிப்பில் வெளியான கடைசி 3 படங்களை வாங்க ஓடிடி நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை. போதிய வரவேற்பின்மை காரணமாக இந்த 3 படங்களும் ஓடிடியில் வெளியாகாமல் உள்ளன.

ஒரு காலத்தில் மலையாள நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லாலுக்கு இணையாக கருதப்பட்ட முன்னணி நடிகர் திலீப். பாடகர், தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவர். மலையாள ரசிகர்களால் ‘ஜனப்பிரிய நாயகன்’ என்று அழைக்கப்படும் திலீப்பின் அண்மைக்கால படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திலீப் - தமன்னா நடிப்பில் வெளியான மலையாள படம் ‘பந்த்ரா’. ரூ.35 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் மொத்தமாகவே ரூ.6 கோடி வசூலைத் தாண்டவில்லை. இதனால் படம் வெளியாகி 8 மாதங்கள் கழித்தும் இன்னும் படத்தை வாங்க எந்த ஓடிடி நிறவனமும் தயாராக இல்லை.

அடுத்து அவர் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையா கொண்டு உருவான ‘தங்கமணி’ திரைப்படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை ‘உடல்’ படத்தின் மூலம் பரவலான கவனத்தை ஈர்த்த ரத்தீஷ் ரகுநந்தன் இயக்கியிருந்தார். ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறாததால் படம் வெளியாகி 3 மாதங்கள் கடந்தும் ஓடிடி நிறுவனங்கள் யாரும் படத்தை வாங்க முன்வரவில்லை.

கடந்த ஏப்ரல் மாதம் திலீப், ராதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியானது ‘பவி கேர்டேக்கர்’ திரைப்படம். ஆனால் இந்தப் படமும் ரசிகர்களிடையே ஈர்க்காததால் 2 மாதங்களாகியும் ஓடிடியில் வெளியாகவில்லை. அடுத்து திலீப் நடிப்பில் ‘பறக்கும் பாப்பன்’நகைச்சுவைத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in