

லாஸ் ஏஞ்சல்ஸ்: ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரின் முன் கதையான ‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’ தொடரின் இரண்டாவது சீசன் ஜூன் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’. 8 சீசன்களைக் கொண்ட இத்தொடர் 2019ம் ஆண்டு நிறைவுபெற்றது. ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் எழுதிய ‘எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்தொடர் சிறந்த தொடரருக்கான எம்மி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைக் குவித்துள்ளது.
எச்பிஓ நிறுவனம் இத்தொடரை தயாரித்திருந்தது. இத்தொடருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’ என்ற தொடரை எச்பிஓ நிறுவனம் தயாரித்தது. இது ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ நிகழ்வுகள் நடக்கும் காலத்துக்கு 300 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் நடப்பது போன்ற கதைக்களத்தைக் கொண்டது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’ தொடரின் முதல் சீசன் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது சீசனுக்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், இத்தொடர் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. எனினும் குறிப்பாக எந்த தேதியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்படவில்லை. இந்த சீசனில் மொத்தம் எட்டு எபிசோட்கள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.