

நடிகை சன்னி லியோனி மலையாள இணையத் தொடரில் நடிக்க இருக்கிறார். இந்தத் தொடருக்கு ‘பான் இந்தியன் சுந்தரி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘ரங்கீலா’ (Rangeela) படத்தின் மூலம் மலையாளத்தில் நடிகையாக அறிமுகமானவர் சன்னி லியோனி. அதே ஆண்டு மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘மதுர ராஜா’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பார். இந்நிலையில், அவர் தற்போது புதிய மலையாள இணையத் தொடர் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்தத் தொடருக்கு ‘பான் இந்தியன் சுந்தரி’ (Pan Indian Sundari) என தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தொடரை எச்ஆர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் பிரதாபன் தயாரிக்கிறார். சதீஷ் இயக்குகிறார். பிரின்சி டென்னி மற்றும் லெனின் ஜானி ஆகிய இருவரின் எழுத்தில் உருவாகும் இந்தத் தொடரில், அப்பானி சுரேஷ், மாளவிகா ஸ்ரீநாத், மணிக்குட்டன், ஜானி ஆண்டனி, ஜான் விஜய், பீமன் ரகு, சஜிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இந்தத் தொடர் வெளியாகிறது. மலையாள சினிமாவல் அதிக பட்ஜெட்டில் உருவாகும் முதல் காமெடி- ஆக்ஷன் - திரில்லர் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.