

உலகம் முழுவதும் இந்தியப் படங்களை தணிக்கை செய்து வெளியிடும் வகையில் தனது கொள்கை முடிவில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. இந்தியப் படங்களை தணிக்கை செய்யாமல் வெளியிடுவதில் தனித்து தெரிந்த நெட்ஃப்ளிக்ஸின் இந்த நடைமுறை ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.
அனுபவ் சின்ஹா இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான பாலிவுட் படம் ‘பீட்’ (bheed). கரோனாவின் துயரங்களைப் பேசிய இந்தப் படத்தில் பிரதமர் மோடி மற்றும் டெல்லி முதல் அரவிந்த் கேஜ்ரிவால் வாய்ஸ் ஓவர் மற்றும் சில அரசியல் குறியீடுகள் இருந்ததை சென்சார் போர்டு நீக்க உத்தரவிட்டது. படத்தின் நிறைய காட்சிகள் கட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானபோது சென்சார் செய்யப்பட்ட வெர்ஷனாக மட்டுமே வெளியானது. தற்போது இதே பாணியை அனைத்துப் படங்களுக்கும் கடைபிடிக்கும் வகையில் நெட்ஃப்ளிக்ஸ் தளம் தனது கொள்கை முடிவுகளை மாற்றி அமைத்துள்ளது.
விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் இந்தியா தவிர்த்த வெளிநாடுகளில் ‘சென்சார் செய்யப்படாத’ பதிப்பாக வெளியான நிலையில், நெட்ஃப்ளிக்ஸில் சென்சார் செய்யப்பட்ட பதிப்பாக வெளியிடப்பட்டது. அக்ஷய் குமாரின் ‘ஓ மை காட்’ படத்துக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. இதற்கு படத்தின் இயக்குநர் நெட்ஃப்ளிக்ஸ் மீது குற்றம்சாட்டினார். நெட்ஃப்ளிக்ஸின் இந்த நகர்வுக்கு சென்சார் போர்டின் மறைமுக அதிகார அழுத்தம் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
அரசியல் ரெஃபரன்ஸ்களை தவிர்ப்பது மட்டுமல்லாமல், பெருநிறுவன முதலாளிகளின் பெயர்களை படங்களில் கொண்டுவருவதை தடுக்கவும் இந்த முடிவு வழிவகுக்கிறது. உதாரணமாக, கார்த்தியின் ‘ஜப்பான்’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘அம்பானி, அதானி’ பெயர்களை மத்திய தணிக்கை வாரியம் நீக்கியது. நெட்ஃப்ளிக்ஸிலும் அவர்களின் பெயர்கள் தவிர்க்கப்பட்டே காட்சிகள் வெளியானது. அரசியல் கன்டென்டுகளுக்கு எதிரான அதிகார வர்க்கத்தின் நடவடிக்கைகளிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சென்சார் செய்யப்படாத இந்தியப் படங்களை வெளியிடும் கடைசி ஸ்ட்ரீமிங் தளமாக நெட்ஃப்ளிக்ஸ் இருந்த நிலையில், தற்போதைய இந்த மாற்றம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.